‘இசை’ பதிவுகள்

raavanan

படம் வெளிவர ஒரிரு மாதங்களுக்கு முன்னர் தொடங்கும் மணி ரத்னத்தின் ஹைப் மெஷின், ஆரம்பித்தாயிற்று. இனிமேல் மனிதர் எல்லா பத்திரிக்கைகளுக்கும் பேட்டி அளிப்பார், படத்தை பற்றிய கிசுகிசு வர ஆரம்பிக்கும், முப்பது நொடி படத்தை காட்டி கவர்ந்திழுப்பார்.

ராவணன் இசை கேட்க சுவாரசியமாயில்லை. ராவணனின் ட்ரைலரை பார்த்தால் காட்டுத் த்ரில்லர் போல இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி ரஹ்மான் வித்தியாசமாய் இசையமைத்திருக்கிறார். ஆனாலும் வைரமுத்து வரிகளுக்கு கார்த்திக் பாடியிருக்கிற உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே பாடலைத் தவிர மற்றதெல்லாம் சுமார் ரகம். மற்ற சில பாடல்கள் இரைச்சலாய் இருக்கிறது.

இம்மாதிரி சுமார் ட்ரைலர் படமெல்லாம் பிய்த்துக் கொண்டு ஓடியிருக்கிறது. இது எப்படி என்று ஜூன் 18 அன்று தெரிந்து விடும். அதற்கு முன் உதட்டு சுழிக்கெல்லாம் உசிரை விடாமல் பிடித்துக் கொள்வோம்.


சமீபத்தில் சென்னை சென்று திரும்பிய நண்பர் கொடுத்த இசைப்பயணம் என்ற ஒலித்தகடை கேட்க முடிந்தது. சாருலதா மணி என்ற பாடகி சபாவிலோ டிவி சானலிலோ, ராகங்கள் பற்றி பேசும்/பாடும் கொஞ்சம் வித்தியாசமான விஷயம். முன்று ராகங்களுக்கு ஒரு சிடியென ஏழு பாகங்கள். மேடையில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார். அதை லைவாக பார்க்கும் ரசிகர்கள் பேசுகிறார்கள், கைத்தட்டுகிறார்கள், சமயத்தில் ராகத்தை பற்றி கொஞ்சம் கமெண்ட் எல்லாம் செய்கிறார்கள். இத்தனையும் ஆடியோ சிடியில் கேட்கிறது.

ஒவ்வொரு ராகமாய் எடுத்து அதனை அறிமுகித்து, கொஞ்சம் ஆராய்ந்து, அந்த ராகத்தில் இருக்கும் கர்நாடக பாடல்களையும், சினிமா பாடல்களையும் வரிசைப்படுத்தி கடைசியாய் கச்சேரி வடிவில் ஆலாபனையில் ஆரம்பித்து ஒரு பாட்டு பாடுகிறார். இதைப் போன்ற முயற்சிகள் கர்நாடக இசையை அவாளிடம் இருந்து இவங்களிடம் எடுத்துச் செல்லக்கூடியவை. சாருலதா சுத்தமான அமெரிக்க ஆங்கிலத்தில் பேசாமல் நிறையவே தமிழில் பேசினால் நல்லது. ஆங்கிலத்தில் பேசுவது கண்டிப்பாய் தப்பல்ல. ”Vasantha raagam goes like this, ராம ராம ராம ராம… just straight notes, there’s nothing curvy about it” என்று ஆங்கிலத்தில் மட்டுமே பேசாமல், அவ்வப்போது தமிழிலும் கொஞ்சம் பேசினால் செம்மொழிக்கு நல்லது.

இதைத் தவிர சாருலதா சினிமாப் பாடலை பற்றி அறிமுகம் செய்யும் போது கிண்டல் லேசாய் எட்டிப் பார்க்கிறது. “இப்போதெல்லாம் குத்துப் பாட்டுன்னு எதோ போடறா…too noisy. ராகத்தை பேஸ் பண்ணி வர சாங் தான் என்னென்னிக்கும் நிலைச்சு நிக்கும்”. அறிவரைக்கு நன்றி.

இன்னும் இரண்டொரு மாதங்களில் சென்னை களை கட்டப் போகிறது. நவம்பர் 15ந்தில் ஆரம்பித்து ஜனவரி வரை இயல் இசை நாடக விழா. அதுவும் டிசம்பர் சீசனுக்காக பட்டுப் புடவையில் ஆரம்பித்து, சபா தாவல், அடை அவியல், தொடை தட்டல் என்று மயிலாப்பூர் ஏரியாவே பிசியாகப்போகிறது. எதோ சபாவில் ஒரு கச்சேரியோ சில கச்சேரிகளோ செய்ய அமெரிக்காவில் இருந்து வயலினிஸ்ட், வோகலிஸ்ட், தம்புராயிஸ்ட் என்று கொன்னக்கோல் சொல்பவர் வரை சென்னையை நோக்கி குடும்பம் சகிதமாக படை எடுக்கப் போகிறார்கள். கச்சேரி கேட்பதற்காகவும் அமெரிக்காவில் இருந்து பலர் வருவதாக கேள்வி. இதில் அடியேனும் உண்டு.

இந்த வருடமாவது சுதா ரகுநாதனோ சஞ்சய் சுப்பிரமணியனோ கடம் கார்த்திக்கோ சிக்கல் குருசரனோ கார்ப்பரேஷன் பள்ளிச் சிறார்களுக்காக ம்யூஸிக் அகாடமியில் ஒரு கச்சேரி செய்ய மந்தவெளி அனுமாரை வேண்டிக் கொள்ளலாம். ஆலாபனை ஆரம்பித்த உடன் யாரும் எழுந்து செல்லாமல், உள்ளே நுழையாமல் ப்ராட்வே ஒப்பரா மாதிரி சட்டம் போடலாம். அழும் குழந்தைகளைக்கு மட்டும் விலக்கு. அப்படியாவது பிள்ளைகளை கச்சேரி கேட்க அழைத்து வந்தால் சரி. இல்லையென்றால் வீட்டில் இன்னும் இரண்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டு பாஃப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.

சபா வாசலில் உள்ளே நுழைபவர்களை ப்ரிஸ்க் செய்து, மூக்குப் பொடி, வெத்தலை சீவல் சுண்ணாம்பு இதர சாமான்களை பிடித்து வைத்துக் கொண்டு வெளியே போகும் போது கொடுக்க ஏற்பாடு செய்யலாம். பட்டுப் புடவைக்கு ராம்ப் வாக் வைக்கலாம். டிபன் வாசனை உள்ளே நுழைந்து மக்களை வெளியே இழுக்காமல் இருக்க கதவை அழுத்தி மூடலாம். பாடகர் பாட ஆரம்பிக்கும் பொழுது, அந்தந்த ராகத்தைப் பற்றி ஒரு இரண்டு நிமிடங்கள் பேசினால் என்னைப் போல் அசமஞ்சங்களுக்கு கொஞ்சம் ரசிக்க வசதியாய் இருக்கும். மற்றபடி ரசிகாஸ் பிட்டுப் பேப்பரில் பாடல் சஜஸ்ட் செய்யாமல், உட்கார்ந்து கொண்டு சத்தமாய் ப்ரதிமத்யம இடங்களில் கமெண்ட் அடிக்காமல், தப்புத் தப்பாய் தாளம் போடாமல் இருக்கக் கடவுக.

பி.கு – சமீபத்தில் வெளியான வேட்டைக்காரன் பட இசை ஆல்பத்தில் வரும், என் உச்சி மண்டையில சுர்ர்ர்ருங்குது என்ற குத்துப் பாடலை பாடியிருப்பவர் சாருலதா மணி.


டண்டடன் டட டடைன் கேட்டீர்களா ? ராஸ்கல்கள் அதாவது கமினே படத்தில் வரும் பஞ்சாபி க்ளப் இசைப் பாடல். சங்கர் மகாதேவன் கண்டுகோண்டேன்*2 படத்தில் என்ன சொல்லப் போகிறாய் பாடியபோது இருந்த ஒருவித ஜுர வேகம், சுக்வீந்தர் சிங் பாடியுள்ள இந்தப் பாடலிலும் இருக்கிறது. நம்பாவிட்டால் ஐபாடிலோ அல்லது எதையாவதையோ காதில் மாட்டிக் கொண்டு கொஞ்சம் நேரம் ஓடுங்கள்/நடங்கள். பாட்டு முடிந்தவுடன்,ரீவண்ட் செய்து மீண்டும் ஓடுங்கள். மீண்டும்.

கமலின் சீமந்தபுத்ரி ஸ்ருதியின் உன்னைப்போல் ஒருவன் இசை சுமாராயிருக்கிறது. கேட்கலாம். இந்த மாதிரி சீரியஸ் படத்துக்கு இசை அமைப்பது கொஞ்சம் கடினமும் கூட. காலேஜ்வாசிகளை கவர, கொஞ்சம் லைட்டாய் இனிய வரிகளை வைத்து டூயட் கூட போட முடியாது. ஸ்ருதிக்கு எல்.ஏயில் இசை படித்ததாலோ என்னவோ சாஸ்திரிய சங்கீதத்தை விட ராக் இசையின் ரிதம் சுலபமாக வருகிறது. மெலடிக்களில் கூட தன்னையறிமால் வந்து விழுகிறது எலக்ட்ரிக் கிடார்.

கமல் கொஞ்சம் ஆர்பாட்டமில்லாமல் அல்லா ஜானே பாடலை பாடியிருக்கலாம். நிலை வருமா பாடலில் எஸ்பிபி சிரிப்புகள் செய்யாமல் இருந்திருக்கலாம்.

ஆல்பத்திலேயே பிடித்தது, கீதையின் வரிகளை வைத்து எழுதப்பட்டிருக்கும் பாடல். அதிலும் இந்த இடத்திலிருந்து(2:09 முதல்) பிரமாதம். மற்றபடி பாடல் வரிகள் ரொம்ப எளிமையாக எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்த வரிகளை வைத்து எழுதியிருப்பதை கவனித்தீர்களா ?


தசாவதாரத்தின் பாடல்களின் மூலம் வாங்கி கட்டிக் கொண்ட ஹிமேஷ் ரேஷ்மய்யா, கா கருப்பனுக்கும் பாடலின் மூலம் கொஞ்சமாவது புண்ணியம் தேடிக் கொண்டார்.

சின்மயியின் முத்தம் தின்பவளைப் போலவே ஷாலினி சிங்கின் குரலும் மிகக் கச்சிதம். வைரமுத்துவின் பாடல் வரிகளும் were right on the spot [இருபது வயதிற்குள் அறுபது சிருங்காரங்கள்...].

சமீபமாக ஜிம்மில் இந்தப் பாட்டும் நானும் ரொம்ப நேரம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.


இந்த இன்குவிசிஷன் சிம்பபொனியை கண்ணை மூடிக் கேட்டவுடன், வாயைத் திறந்து வாவ் என்று சொல்லலாம்.


குரங்கென உடும்பென
புடிச்சதப் புடி புடி
அடிக்கடி வருமா சந்தர்ப்பம்
announce பண்ணி வருமா
label ஒட்டி வருமா
ஒரு நாள் வரும்டா
seize the day !!


dasavathaaram kamalhassan

மாற்றம் இல்லாததால் ஏமாற்றம்.

முகுந்தா முகுந்தாவில் மட்டும் சாதானா சர்கம் தெரிகிறார். இந்தப் பாடலில் கடைசியாக மொட்டைப் பாட்டியாக பாடும் கமலின் குரல் அவ்வளவு சிலாக்கியமில்லை.

கல்லை மட்டும் பார்த்தால் பாடலின் கடைசி நிமிடத்தில் ஹரிஹரன், பாடலுக்கு ஜஸ்டிஸ் செய்கிறார்.

இப்படி எல்லாம் தேடித் தேடி நல்ல இடங்களை கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கிறது. கமல் பாடும் ஓ சனம் என்னும் செண்டி பாங்கராவை கடைசி வரை கேட்க முடியவில்லை. இதற்காகவா அந்த ஹிமேஷ் ? நம்ம ஸ்ரீகாந்த் தேவா கூட விட்டு கலக்கியிருப்பார் போலிருக்கிறது.

கமல் படத்தில் பாடல்கள் சுமார் ரகமாயிருப்பது இது முதல் முறையல்ல. ஆகவே இது ஓகே. கேயாஸ் தியரி, வேதாந்தம் என்று படத்தை பற்றி பேசும் கமல், திரைக்கதையை சுவாரசியமாக்கியிருப்பார் என நம்பலாம்.