‘இலக்கியம்’ பதிவுகள்

போன பத்தியை புனைவு என்று வகைப்படுத்தியிருந்ததை பார்க்காமல், நிஜமாவா? என்று புருவம் உயர்த்தியபடியே ஈமெயில் எழுதிய இரண்டு அன்பர்களுக்கும் இல்லை என்று பதில் போட நாளாகிப் போனது. யாரந்த எழுத்தாளர் என்று சிலரும் கேட்டிருந்தனர். நானும் அந்த ஈமெயில்களை இங்கே போட்டு பதில் எழுதினால் வித்தியாசமற்று போய்விடும் என்று…

தமிழில் சிறுகதையும் தொடர்கதையும் நாவலும் கிட்டத்தட்ட இல்லை என்றாகி விட்ட இந்த நாளிலும் இந்த கப்சா வலைப்பதிவுகளை விழுந்தடித்து படிக்கும் தமிழர்களை சொல்ல வேண்டும். அப்படியே மிச்சிகனில் இருந்தும் டல்லாஸில் இருந்தும் பொழுது போகாமல் தமிழ் எழுத்தாளர்களை உசுப்பேத்தும் கம்ப்யூட்டர் ஆசாமிகளை பிடித்து, கடைசியாய் கடைசிப் பக்கம் வரை படித்த நாவல் என்னவோ என்று கேட்டால்,”ம்ம்ம்ம்….அதான் சார் வந்தியத்தேவன்….வந்து…பொன்னியின் செல்வன்” என்று சொல்லி விட்டு, “நீங்கள் குடித்த க்ளாசில் காப்பி குடிக்கிறேன் ஐயா” என்று அடுத்த மெயில் அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள்.

————-

சிறுகதைகளும் தொடர்களும் இல்லாத வாரந்திரிகளை நினைத்துப் பார்க்க முடியவில்லை. 20 வயது இளைஞ/ஞிகள் படிக்கும் தமிழ்ச் சிறுகதைகள் எங்கே எழுதப்படுகின்றன. தேடிப் பார்த்தாலும் அவர்களின் வாழ்க்கையை அருகில் இருந்த பார்க்கும் நேர்த்தியான சிறுகதைகளை பார்க்க முடியவில்லை. அவர்களை மயக்கி தமிழில் படிக்க வைக்க சுஜாதா மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு. அவர்களை சிறுகதைகளை படிக்க வைக்க நம்மாட்கள் முற்படுவதில்லை. அடுத்த தலைமுறையை நினைத்துப் பார்த்து பயப்பட தேவையில்லை. தற்போதைய இளைஞர்களே படிக்காத பட்சத்தில் அடுத்த தலைமுறை பற்றிய கவலை என்பதெல்லாம் கப்சா.

இவர்களுக்கு எல்லாம் குமுதத்திலோ விகடனிலோ எழுதினால் படிக்க தோன்றுவதில்லை. ஃபேஸ்புக்கில் எழுதப்படும் முதல் தமிழ்ச் சிறுகதை பிரபலமாவது சர்வ நிச்சயம். படிக்கக் கூடிய சைஸில்(அதாவது ஐம்பது வரிகளுக்கு மிகாமல்), முடிக்கக் கூடிய வேகத்தில் எழுதினால் கண்டிப்பாய் படிப்பார்கள்.

எழுத்தாளர் பாராவின் கல்கி தொடர்கதையை முழுவதும் படித்தீர்களா ? நினைத்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா. படியுங்கள். இந்த டுவிட்டர்வேக உலகத்தில், தமிழ்த் தொடர்கதைகளை படிக்கும் பொறுமை இருந்தால் நீங்கள கொடுத்து வைத்தவர்கள்.

————-

பசங்க என்ற படத்தை பற்றி கேள்விப்பட்டு பார்த்தால் அதீதமான கற்பனைக் காட்சிகள், அதிகப் பிரசங்கித்தனமான குழந்தைகள், கோடம்பாக்க சிச்சுவேஷங்கள், இடைச்சொருகலாக காதல். தமிழில் சிறுவருக்கான நல்லதொரு படத்துக்காக இன்னமும் காத்திருக்க வேண்டியது தான்.


April 22nd, 2009

இன்ன பிற – 3

us unemp chart

மேலே இருக்கும் சார்ட் எதைப்பற்றி என்று சட்டென கண்டுபிடிப்பவற்கு பிங்க் ஸ்லிப் கிடைக்காமலிருக்க லஸ் பிள்ளையாரை வேண்டிக்கொள்கிறேன். கடந்த ஒருவருடமாக, மக்கள் தொகையையும் மசாலா படங்களையும் தவிர ஏறிக் கொண்டே இருக்கும் ஒரே விஷயம் வேலையின்மை. போன வருடத்தில் இருந்து போன வெள்ளிக்கிழமை வரை இழந்த வேலைகள் 5 மில்லியன். 1949க்கு பிறகு ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட ஏழு லட்சம் வேலைகள் பறிபோயினதும் இந்த வருடத்தில் தான். தினத்தந்தி செய்தி மாதிரி கடன் துரத்தல் தாங்க முடியாமல் இந்தியர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறார்கள், வேலை போனவர்கள் மற்றவர்களை சுடுகிறார்கள், நெவாடா விபச்சாரம் ஆளில்லாமல் அவுட்-ஆப்-பிசினஸாகிறது என்று இருக்கிறது நிலவரம். கிட்டத்தட்ட யாருமே எதிர்பார்க்காத நிலையில் உலகம். நம் வாழ்வின் நாட்கள்.

சந்தை முன்னேறி விட்டது என்கிறார்கள் எகானமிஸ்டுகள். இதற்கு பதில் எதாவது ஆந்தையார், பருந்தார், குருவியார் செய்திகளை நம்பலாம்.

——–

இந்தியாவில் இருந்து வாங்கி வந்திருந்த ஜூனியர் விகடனயும் குமுதம் ரிபோர்ட்டரையும் படித்துக் கொண்டிருக்கும் போது உரைத்தது. மூன்று பக்கங்களுக்கு ஒரு பக்க விளம்பரமாக லேகிய வைத்தியர்கள் வைத்திருக்கும் வைத்தியசாலைகள். இந்த புத்தகங்களை படிக்கும் டெமோகிராபிக் இருபத்தி ஐந்திலிருந்து முப்பது வரை உள்ள இளைஞர்களாய் தான் இருக்க வேண்டும். இவர்களை மங்கிய வெளிச்ச லாட்ஜ்களை நோக்கி வரவழைத்து கொண்டிருக்கும் இந்த லேகிய திலகங்கள் பிசினஸில் இன்னமும் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது.

உதயம் தியேட்டர் வாசலில் இரவு 8 மணிக்கு கடை விரித்து, ’நிற்பதற்கு’ மாத்திரை விற்கும் ஆசாமியை சுற்றி நிற்கும், கொஞ்சமும் கையாலாகாத இளைஞர் கூட்டத்தின் கையில் தென்படுவது மடித்து வைக்கப்பட்ட இம்மாதிரியான அரசியல் பத்திரிக்கைகள் தான்.

——–
JUNOT DIAZ

கடந்த ஆறு மாதமாக முன்பு போல எழுத முடியாவிட்டாலும், படித்து விடுகிறேன். சமீபத்தில் படித்து ரசித்தது, போன வருடம் புலிட்சர் வாங்கிய, ஜூனோ டயஸ் எழுதிய The Brief Wondrous Life of Oscar Wao.

டாமினிகன் ரிபப்ளிக்கில் பிறந்த ஜூனோ போல இந்த புத்தகத்தின் கதாநாயகன் ஆஸ்கர் டாமினிகனில் பிறந்து நியு ஜெர்சியில் வாழும், 300 பவுண்ட் எடையுள்ள ஆசாமி தான். ஆஸ்கருக்கு பிடித்தமான காமிக்ஸ், விஞ்ஞான சிறுகதைகள், விடியோ கேம்கள் என்று சாதரணமாக ஆரம்பித்து ஒரு க்ளாசிக் காதல் கதையாக மாறி டாமினிகன் ரிபப்ளிக் பற்றியும் அடிமைத்தனத்தை பற்றியும் விரிவாக சொல்லும் நாவலாக உருவெடுக்கும் போது சுவாரசியமாகிறது. ஆங்காங்கே பல பத்திகள் வியக்க வைக்கின்றன. Rafael Trujillo என்னும் சர்வாதிகாரி அதிபரைப் பற்றியும் அறிமுகம் கிடைக்கிறது.

ஜூனோ போல் தமிழில் ஒரு எழுத்தாளர் உருவாகாமல் இருப்பதற்கு காரணம் நம்மூரில் இருக்கும் ஒருவிதமான போராட்டமில்லாத எதையும் ஒத்துக்கொள்ளும் மனோபாவம். அமெரிக்காவில் செட்டிலான எதாவது ஒரு தமிழ் குடும்பத்தை வைத்து இப்படி ஒரு நாவலை பின்னி எடுக்கலாம். அது தமிழ் படமாகாத பட்சத்தில்.


அதேபோல், விக்ரம்சேத்தின் ‘கோல்டன் கேட் ஸானட்’ நாவல் பற்றி எழுதியபோது, ’எண்சீர் விருத்தத்தில் ஒரு நாவல் எழுதலாம்’ என்று சொன்னது வம்பாகப் போச்சு. தமிழில் இத்தனை எண்சீர் விருத்தர்கள் இருக்கிறார்களா..? தினம் எனக்கு கவிஞர்கள் தங்கள் எ.சீ.வி காவியங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

நான் கேட்டது காவியங்களோ, எமன் எலி பிடிக்கும் கதைகளோ அல்ல. விருத்தத்துக்கு காய்-காய் மா-மா என்று ஒரு 3-3-2-2 வடிவம் உள்ளது. மேலும், விருத்தத்திலேயே சொல்லப் போனால் –

‘விருத்தங்கள் எழுதுவது சுலபம் அல்ல,
வீணான வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும்
வருத்தாத விஷயத்தை எடுத்துக்கொண்டு
‘வார்முலைகள்’, ‘தமிழன்னை’ எதுவும் இன்றி
நிறுத்தாத பஸ் பிடித்தல், காதல் செய்தல்,
நீண்ட முடி, நகங்கடித்தல் போன்றவற்றை
பொறுத்திருந்து பார்த்தமைத்து அனுப்பினீரேல்,
பொழுதிருந்தால் படித்துவிட்டு எழுதுகின்றேன்.’

- கற்றதும் பெற்றதும், ஆனந்த விகடன், 2000.


பல தினங்களுக்குப் பின் மறுபடி டில்லி வருகிறேன். விமானத்தில் உச்சந் தலையில் சொட்டையுடன் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் கனவான்கள் அவர்கள் மனைவி போல இருக்கும் ஹோஸ்டஸ்ஸைக் கண்டு ஏமாற்றி கை நிறைய பிஸ்கெட் அள்ளிக் கொள்கிறார்கள். ’லாக் அவுட்’ காரணமாக விமானம் சமயத்தில் புறப்பட்டு சமயத்தில் சேர்கிறது. டாக்ஸிக்காரன் ‘ஜனாப் ஜனாப்’ என்று என்னை மரியாதை செய்கிறான்(பிற்பாடு இருபது ரூபாய் கேட்கப் போகிறான்).

உட்லண்ட்ஸ் ஓட்டலில் மாலி புல்லாங்குழல் ஊத இடியாப்பத்தை அரங்கேற்றி ரு. 4-50 சார்ஜ் பண்ணுகிறார்கள்.ஹிப்பிகள் கணேஷ் பீடி குடித்துக்கொண்டு ஒரு கையில் சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு, மறு கையில் கட்வாலிப் பாவாடை அணிந்த வெண் பெண்ணுடன் அலைகிறார்கள்.

சிவப்பு விளக்கு டாக்ஸி தயங்கி நின்றபோது விதவிதமான் கார்களும் ஆட்டோக்களும் சூழ்ந்த அந்த வினோத வரிசைகளின் ஊடே பதறிப் பதறி ஒரு தமிழ்ப்பெண் வருகிறாள். ஒரு கையில் குழந்தை, மற்றொரு கையில் ஈவ்னிங் நியூஸ். வாங்குங்கள் வாங்குங்கள் என்று ஒவ்வொரு காராக நின்று கெஞ்சிக் கெஞ்சி…

டில்லி மாறவில்லை.

- கணையாழியின் கடைசிப் பக்கம், பிப்ரவரி 1974


chokkan salman book

நேற்று இரண்டாம் முறை படித்து முடித்தேன்.

ஓரண்டுக்கு முன்பே, சொக்கன் எழுதியிருந்த சல்மான் ரஷ்டியின் கதையை[ஃபத்வா முதல் பத்மா வரை] படித்திருந்தாலும், மீண்டும் படிக்கத் தோன்றியதற்கு காரணங்கள் சில. ரொம்பவும் சில்லியானது, ரஷ்டியின் பிரிந்த தோழியான நம்மூர் பத்மாவின் Top Chef நிகழ்ச்சியை இரண்டு நாட்களுக்கு முன் Bravo சானலில் பார்க்க நேரிட்டது. தலையில் அடித்துக் கொள்ளாத குறை. அதைவிட முக்கியமான காரணம் சமீபத்தில் படித்த ரஷ்டியின் லேட்டஸ்ட் நாவலான The Enchantress of Florence. மீண்டும் தலையில் அடித்துக் கொள்ளாத குறை.

ரஷ்டியின் தி முர்’ஸ் லாஸ்ட் ஸையை படித்தவர்கள், அவரின் சமீபத்திய நாவலை படித்து என்ன சொல்கிறார்கள் என்று அறிய எண்ணம். அவர் எழுதிய குழந்தைகள் கதையான, Haroun and The sea of stories போல அவரின் கதைக் கடலும் காணாமல் போனதாக தெரிகிறது. கொஞ்ச நாட்களுக்கு கதை எழுதுவதை விடுத்து, Imaginary Homelands போல பத்தி எழுதலாம்.

சொக்கன் எழுதிய பயோகிராபிகளில் அவர் சிறந்ததாக கருதுவது, சாப்ளின் கதையைத் தான். என்னைக் கேட்டால் இந்த புத்தகம் தான் என்பேன்.

ரஷ்டியை பத்து வருடங்களாக தொடர்ந்த அந்த ஃபத்வா அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓட்டமும் நடையுமாக தொடங்கும் இந்த புத்தகம் செல்வது சீரான வேகத்தில். ரஷ்டி அவரின் வாழ்க்கையை பற்றி முன்பே எழுதியிருந்தாலும், சொக்கன் காட்டும் ரஷ்டி கொஞ்சம் புதிதானவர். பம்பாயை காதலிக்கும் சாதாரண மனிதராக, காதல் மன்னனாக, தாய்நாட்டை விட்டு தொலைந்து போனவராக, போராளியாக.

நம் வாழ்க்கை மொத்தமும் கதைகளின் தொகுப்பு தான் என்னும் ரஷ்டியின் நாவல்கள் பிறந்த கதையை விவரமாக விவரிக்கிறார் சொக்கன். ஃப்த்வா நாட்களை பற்றி, புலம் பெயர்ந்ததால் பட்ட அவஸ்தையைப் பற்றி நடுநிலையாக சொல்கிறார்.

இரண்டு மணி நேரத்தில் படிக்கக் கூடிய இந்த புத்தகத்தை படித்தவுடன் வரும், ‘இந்த மாதிரி புக்ஸ் எல்லாம் ஈஸியாக எழுதாலாம் போல இருக்கே’ என்ற எண்ணம் தான் சொக்கனின் வெற்றி.

பி.கு – நெப்போலியனை பற்றி சொக்கன் எழுதிய போர்க்களப் புயல் புத்தகத்தை படிக்க வேண்டும். நெப்போலியன் எனக்கு ரொம்பவும் பிடித்த காரெக்டர். செந்திலும் நானும் 1998ல் The Waterloo என்று ஒரு திரைக்கதை ஆகக்கூடிய கதை செய்தோம். ”ஃப்ர்ஸ்ட் ஷாட்ட ஓப்பன் பண்ணா”, என்று வுட்லண்ட்ஸ் டிரைவ் இன்னில் பல பேருக்கு கதையை வாயால் டால்பி ஸ்டீரியொவில் திரைப்படம் போட்டு காண்பித்தோம். இன்னமும் தயாரிப்பாளர் கிடைத்தபாடில்லை. நாங்களும் விடுவதாயில்லை. நெப்போலியனைப் போல.


தமிழிலக்கியத்தில் முத்தெடுக்கும் மகானுபாவர்கள் சிலர், சுஜாதாவின் மறைவிற்கு பின், வெகுஜன வணிகத்தளத்தில் தனக்கும் இனி இடம் கிடைக்கலாம் என்று நினைத்தவர் பலர். அதற்கு முதல்படியாக, சுஜாதாவைப் பற்றி ஒரு நல்ல அஞ்சலி எழுதி, அவரை தனது ஆசானாக காட்டிக்கொண்டு, வெகுஜன ஊடகத்தில் ஆதாயம் தேட ஆரம்பித்தார்கள். சுஜாதா இருக்கும்வரை ஓரிரு வார்த்தைகள் கூட எழுதாதவர்கள், திடிரென்று, கையில் கிடைத்த கணையாழியின் கடைசி பக்கங்களை படித்து விட்டு, நான் அவருடைய வாரிசு தான். அவருடைய நடையும், கருத்தாக்கமும் அவருக்கு பிறகு எனக்குத் தான் உண்டு என்று எழுதிய அ.கைகள் பலர். சுஜாதா பாணியில், அவர்களை பசித்த புலி பதம் பார்க்கட்டும்.

இதற்கு நேர் எதிராக, சுஜாதாவின் மறைவிற்கு பின்னும் அவர் மேலுள்ள கோபங்களை கொட்டித் தீர்த்தனர் பலர். அப்படி ஒரு கோபக் கொட்டித்தீர்த்தலாகத் தான், காலச்சுவடு கண்ணணின், சுஜாதா ஒரு முரண்நோக்கு, என்று அஞ்சலியை பார்க்க முடிகிறது.

“சார்!! உங்களுக்கு தான் அப்படி தோணுது, ஏன்னா உங்களுக்கு சுஜாதாவை ரொம்ப பிடிக்கும்”, என்று சொல்பவர்கள், கண்ணனின் இந்த கட்டுரையை படித்துப் பார்க்கலாம். அவர் கூறும் முரண்நோக்குக்காண காரணங்கள் அக்கட்டுரையில் கிடைப்பதரிது. துணுக்குத் தோரணமாகவே எனக்குத் தோன்றுகிறது.

தீவிர இலக்கியத் தளத்திலிருந்து வெகுஜன எழுத்திற்கும் வணிக சினிமாவிற்கும் நகர்ந்துவிட்டவர்களும் நகர்வதற்குக் கொதி போட்டுக்கொண்டிருப்பவர்களும் சுஜாதாமீதும் அவர் மறைவுக்குப் பின்னர் அவர் எழுத்தின் மீதும் கொண்ட திடீர் கரிசனம், ந ட்சத்திர ஒளி அவர்கள் விமர்சனக் கண்களைப் புண்ணாக்கிவிட்டதன் அடையாளம். இலக்கியத் தளத்தில் சுஜாதாவின் இடத்தை அவரது எழுத்தின் தரம் தீர்மானிக்கும். அதிகாரமும் நட்சத்திர ஆதரவும் அதிக காலம் அவருக்கு முட்டுக்கொடுக்க முடியும் எனத் தோன்றவில்லை.

என் பார்வையில் அறிவியல் தமிழை முன்னெடுப்பதே சுஜாதாவுக்குச் செலுத்தப்படும் ஆக்கபூர்வமான அஞ்சலியாக இருக்கும். அந்த முன்னெடுப்பு கடந்த சில பத்தாண்டுகளாக அறிவியல் என்ற ‘முழு உண்மை’மீது எழுப்பப்பட்ட கேள்விகளையும் விவாதங்களையும் – சுஜாதா முற்றாகப் புறக்கணித்த அல்லது அறிந்துகொள்ளாத உரையாடல் இது – உள்ளடக்கியதாக இ ருக்க வேண்டும். தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் இயங்கும் மரண வியாபாரிகளின் ஆட்டங்கள் முடிந்த பிறகு இந்தப் பணியை அவரது ஆத்மார்த்தமான அன்பர்கள் முன்னெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

கடைசி இரண்டு பத்திகளில் கண்ணன் சொல்லும் விஷயம் புரிகிறது. மரண வியாபாரிகளின்[Merchants of Death] என்று யாரை சொல்கிறார் என்று தான் புரியவில்லை. புரிந்தால் சொல்லுங்கள்.

~

sujatha kamalhassan

தசாவதாரத்தில் சுஜாதாவின் பங்குப் பற்றி சில சமயங்களில், கற்றதும் பெற்றதும் கட்டுரையில் அவரே குறிப்பிட்டிருந்தார். சுஜாதா எழுதியதிலிருந்து பார்த்தால், படத்தின் கதை திரைக்கதையோடும் நெருக்கமாக இருந்தார் என்று தெரிகிறது.

படத்தின் பூஜை விளம்பரத்தில், சுஜாதாவும் கிரேஸி மோகனும் இருந்தார்கள். படத்தின் டைட்டிலில் இருவரும் இல்லை. படம் வரும் போது சுஜாதாவும் இல்லை. கமல் காரணம் சொல்வாரா என்று தெரியாது. வேண்டுமானால் தேசிகனை கேட்டுப் பார்க்கலாம். அல்லது பெருமாளைத் தான்.

~

சுஜாதாலஜி தளத்திற்கு உள்ளடக்கங்கள் திரட்டிக் கொண்டிருக்கிறேன். பேசாமல் தளத்தை wiki ஆக்கி விட்டால், என்னுடைய நேரமின்மையால் இக்காரியம் பாதிக்கப்படாது என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் சுஜாதாவின் எழுத்துக்களுக்கு நேர்மையாக எழுதப்படும் எதிர்மறை விமர்சனங்களுக்கும் இடம் கிடைக்கும்.


ashokamitran_next_book.jpg
[ஆனந்த விகடன்]

நாளை[ஏப்ரல் 23] உலக புத்தக தினம். படிப்பதைப் பற்றி பின்பு யோசிக்கலாம், அட்லீஸ்ட் ஆளுக்கொரு புத்தகம் வாங்கலாம்.