‘இந்தியா’ பதிவுகள்

சென்னை சென்ட்ரல்

ஒவ்வொரு முறையும் இந்த பகுதியில் நிறைய எழுத வேண்டும் என்பது போல் இந்த முறை நினைக்கவில்லை. அதைவிட அதிகமாக. நாள்தோறும் ஐந்து நிமிடத்திற்கு எதாவது தவறாமல் எழுதுவது என்று சென்னையில் இருந்து திரும்பும் போது நினைத்துக் கொண்டேன். சியாட்டல் வந்தவுடன் வழக்கம் போல் வேலை வீடு சினிமா புத்தகம் என்று நேரம் ஓடிவிட அவ்வப்போது கிறுக்கிய சில சிறுசிறு கதைகளைத் தவிர வேறொன்றையும் கிழித்துவிடவில்லை.

மார்கழிச் சென்னை சுகமாயிருந்தது. நண்பர்கள், குடும்பம், கொஞ்சம் கச்சேரி இசை, நிறைய புத்தகங்கள், பலப்பல புது அனுபவங்கள் என்று நாற்பது நாட்கள் ஓடிவிட்டன. கேரளாவில் ஆளப்புழா கோட்டயம் என கொஞ்சம் சுற்றினேன். கோவையை எட்டிப் பார்த்தேன். வாழ்வின் ஒரு மிக முக்கியமான அனுபவம் கிடைத்தது. தி.நகரை காலால் சுற்றி வந்தேன். சென்னை ரொம்பவே மாறியிருந்தது என்று க்ளீஷேவாக ஆரம்பித்து எழுதலாம் என்றிருக்கிறேன்.

உங்களைப் பற்றி வெளியே சொல்ல கொஞ்சம் தயங்கும் மூன்று விஷயங்கள் நினைத்துக் கொள்ளவும் என்று எழுதியபடி யாரோ ஒரு பிரகஸ்பதி எழுதிய ஸ்பாம் மெயில் கிடைத்தது. ரொம்ப நாள் காணாமல் போய் திரும்பி எழுத வரும் போது, இம்மாதிரியான் ஐஸ் ப்ரேக்கர்கள் உதவலாம். ஆகவே, ஒன்று – காலையில் என்னதான் நேரம் இல்லாமல் இருந்தாலும் ஷவரில் நுழைந்து விட்டால் நேரம் பற்றிய ப்ரக்ஞை போய் விடுகிறது. பாத்ரூமில் கொட்டும் தண்ணீரை யோசிக்க ஆரம்பித்து எதாவது ப்ரைம் நம்பர் கணக்கிலோ புதுமைப்பித்தன் கதை முடிவிலோ போய் நிற்கிறது. இங்கே எழுதப்பட்ட கதை கூட அங்கே தான் தோன்றியது. இரண்டு – ஹாலிவுட்டில் ஹாலிடே படங்கள் என்று ஒரு ஜானர் உண்டு. அதாவது கிறிஸ்துமஸ் சமயத்தில் நடக்கும் குடும்ப, ரொமாண்டிக் அல்லது காமெடிக் கதைகள். மற்ற சுமார்ப் படங்களை தாங்க முடியாத எனக்கு இப்படங்கள் பிடிக்கின்றன. இன்று கூட ’இட்ஸ் ஆல் அபவுட் ஹாலிடேஸ்’ என்ற ரொம்பவே போர் படத்தையும் பார்த்து முடித்துவிட்டேன். ஒரே பண்டிகையை வைத்து இத்தனை கதைகளா? மூன்று – சட்டென ஏதும் தோன்றாததால்…பின்னர்.


சமீபத்தில் சென்னை சென்று திரும்பிய நண்பர் கொடுத்த இசைப்பயணம் என்ற ஒலித்தகடை கேட்க முடிந்தது. சாருலதா மணி என்ற பாடகி சபாவிலோ டிவி சானலிலோ, ராகங்கள் பற்றி பேசும்/பாடும் கொஞ்சம் வித்தியாசமான விஷயம். முன்று ராகங்களுக்கு ஒரு சிடியென ஏழு பாகங்கள். மேடையில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார். அதை லைவாக பார்க்கும் ரசிகர்கள் பேசுகிறார்கள், கைத்தட்டுகிறார்கள், சமயத்தில் ராகத்தை பற்றி கொஞ்சம் கமெண்ட் எல்லாம் செய்கிறார்கள். இத்தனையும் ஆடியோ சிடியில் கேட்கிறது.

ஒவ்வொரு ராகமாய் எடுத்து அதனை அறிமுகித்து, கொஞ்சம் ஆராய்ந்து, அந்த ராகத்தில் இருக்கும் கர்நாடக பாடல்களையும், சினிமா பாடல்களையும் வரிசைப்படுத்தி கடைசியாய் கச்சேரி வடிவில் ஆலாபனையில் ஆரம்பித்து ஒரு பாட்டு பாடுகிறார். இதைப் போன்ற முயற்சிகள் கர்நாடக இசையை அவாளிடம் இருந்து இவங்களிடம் எடுத்துச் செல்லக்கூடியவை. சாருலதா சுத்தமான அமெரிக்க ஆங்கிலத்தில் பேசாமல் நிறையவே தமிழில் பேசினால் நல்லது. ஆங்கிலத்தில் பேசுவது கண்டிப்பாய் தப்பல்ல. ”Vasantha raagam goes like this, ராம ராம ராம ராம… just straight notes, there’s nothing curvy about it” என்று ஆங்கிலத்தில் மட்டுமே பேசாமல், அவ்வப்போது தமிழிலும் கொஞ்சம் பேசினால் செம்மொழிக்கு நல்லது.

இதைத் தவிர சாருலதா சினிமாப் பாடலை பற்றி அறிமுகம் செய்யும் போது கிண்டல் லேசாய் எட்டிப் பார்க்கிறது. “இப்போதெல்லாம் குத்துப் பாட்டுன்னு எதோ போடறா…too noisy. ராகத்தை பேஸ் பண்ணி வர சாங் தான் என்னென்னிக்கும் நிலைச்சு நிக்கும்”. அறிவரைக்கு நன்றி.

இன்னும் இரண்டொரு மாதங்களில் சென்னை களை கட்டப் போகிறது. நவம்பர் 15ந்தில் ஆரம்பித்து ஜனவரி வரை இயல் இசை நாடக விழா. அதுவும் டிசம்பர் சீசனுக்காக பட்டுப் புடவையில் ஆரம்பித்து, சபா தாவல், அடை அவியல், தொடை தட்டல் என்று மயிலாப்பூர் ஏரியாவே பிசியாகப்போகிறது. எதோ சபாவில் ஒரு கச்சேரியோ சில கச்சேரிகளோ செய்ய அமெரிக்காவில் இருந்து வயலினிஸ்ட், வோகலிஸ்ட், தம்புராயிஸ்ட் என்று கொன்னக்கோல் சொல்பவர் வரை சென்னையை நோக்கி குடும்பம் சகிதமாக படை எடுக்கப் போகிறார்கள். கச்சேரி கேட்பதற்காகவும் அமெரிக்காவில் இருந்து பலர் வருவதாக கேள்வி. இதில் அடியேனும் உண்டு.

இந்த வருடமாவது சுதா ரகுநாதனோ சஞ்சய் சுப்பிரமணியனோ கடம் கார்த்திக்கோ சிக்கல் குருசரனோ கார்ப்பரேஷன் பள்ளிச் சிறார்களுக்காக ம்யூஸிக் அகாடமியில் ஒரு கச்சேரி செய்ய மந்தவெளி அனுமாரை வேண்டிக் கொள்ளலாம். ஆலாபனை ஆரம்பித்த உடன் யாரும் எழுந்து செல்லாமல், உள்ளே நுழையாமல் ப்ராட்வே ஒப்பரா மாதிரி சட்டம் போடலாம். அழும் குழந்தைகளைக்கு மட்டும் விலக்கு. அப்படியாவது பிள்ளைகளை கச்சேரி கேட்க அழைத்து வந்தால் சரி. இல்லையென்றால் வீட்டில் இன்னும் இரண்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டு பாஃப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.

சபா வாசலில் உள்ளே நுழைபவர்களை ப்ரிஸ்க் செய்து, மூக்குப் பொடி, வெத்தலை சீவல் சுண்ணாம்பு இதர சாமான்களை பிடித்து வைத்துக் கொண்டு வெளியே போகும் போது கொடுக்க ஏற்பாடு செய்யலாம். பட்டுப் புடவைக்கு ராம்ப் வாக் வைக்கலாம். டிபன் வாசனை உள்ளே நுழைந்து மக்களை வெளியே இழுக்காமல் இருக்க கதவை அழுத்தி மூடலாம். பாடகர் பாட ஆரம்பிக்கும் பொழுது, அந்தந்த ராகத்தைப் பற்றி ஒரு இரண்டு நிமிடங்கள் பேசினால் என்னைப் போல் அசமஞ்சங்களுக்கு கொஞ்சம் ரசிக்க வசதியாய் இருக்கும். மற்றபடி ரசிகாஸ் பிட்டுப் பேப்பரில் பாடல் சஜஸ்ட் செய்யாமல், உட்கார்ந்து கொண்டு சத்தமாய் ப்ரதிமத்யம இடங்களில் கமெண்ட் அடிக்காமல், தப்புத் தப்பாய் தாளம் போடாமல் இருக்கக் கடவுக.

பி.கு – சமீபத்தில் வெளியான வேட்டைக்காரன் பட இசை ஆல்பத்தில் வரும், என் உச்சி மண்டையில சுர்ர்ர்ருங்குது என்ற குத்துப் பாடலை பாடியிருப்பவர் சாருலதா மணி.


April 22nd, 2009

இன்ன பிற – 3

us unemp chart

மேலே இருக்கும் சார்ட் எதைப்பற்றி என்று சட்டென கண்டுபிடிப்பவற்கு பிங்க் ஸ்லிப் கிடைக்காமலிருக்க லஸ் பிள்ளையாரை வேண்டிக்கொள்கிறேன். கடந்த ஒருவருடமாக, மக்கள் தொகையையும் மசாலா படங்களையும் தவிர ஏறிக் கொண்டே இருக்கும் ஒரே விஷயம் வேலையின்மை. போன வருடத்தில் இருந்து போன வெள்ளிக்கிழமை வரை இழந்த வேலைகள் 5 மில்லியன். 1949க்கு பிறகு ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட ஏழு லட்சம் வேலைகள் பறிபோயினதும் இந்த வருடத்தில் தான். தினத்தந்தி செய்தி மாதிரி கடன் துரத்தல் தாங்க முடியாமல் இந்தியர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறார்கள், வேலை போனவர்கள் மற்றவர்களை சுடுகிறார்கள், நெவாடா விபச்சாரம் ஆளில்லாமல் அவுட்-ஆப்-பிசினஸாகிறது என்று இருக்கிறது நிலவரம். கிட்டத்தட்ட யாருமே எதிர்பார்க்காத நிலையில் உலகம். நம் வாழ்வின் நாட்கள்.

சந்தை முன்னேறி விட்டது என்கிறார்கள் எகானமிஸ்டுகள். இதற்கு பதில் எதாவது ஆந்தையார், பருந்தார், குருவியார் செய்திகளை நம்பலாம்.

——–

இந்தியாவில் இருந்து வாங்கி வந்திருந்த ஜூனியர் விகடனயும் குமுதம் ரிபோர்ட்டரையும் படித்துக் கொண்டிருக்கும் போது உரைத்தது. மூன்று பக்கங்களுக்கு ஒரு பக்க விளம்பரமாக லேகிய வைத்தியர்கள் வைத்திருக்கும் வைத்தியசாலைகள். இந்த புத்தகங்களை படிக்கும் டெமோகிராபிக் இருபத்தி ஐந்திலிருந்து முப்பது வரை உள்ள இளைஞர்களாய் தான் இருக்க வேண்டும். இவர்களை மங்கிய வெளிச்ச லாட்ஜ்களை நோக்கி வரவழைத்து கொண்டிருக்கும் இந்த லேகிய திலகங்கள் பிசினஸில் இன்னமும் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது.

உதயம் தியேட்டர் வாசலில் இரவு 8 மணிக்கு கடை விரித்து, ’நிற்பதற்கு’ மாத்திரை விற்கும் ஆசாமியை சுற்றி நிற்கும், கொஞ்சமும் கையாலாகாத இளைஞர் கூட்டத்தின் கையில் தென்படுவது மடித்து வைக்கப்பட்ட இம்மாதிரியான அரசியல் பத்திரிக்கைகள் தான்.

——–
JUNOT DIAZ

கடந்த ஆறு மாதமாக முன்பு போல எழுத முடியாவிட்டாலும், படித்து விடுகிறேன். சமீபத்தில் படித்து ரசித்தது, போன வருடம் புலிட்சர் வாங்கிய, ஜூனோ டயஸ் எழுதிய The Brief Wondrous Life of Oscar Wao.

டாமினிகன் ரிபப்ளிக்கில் பிறந்த ஜூனோ போல இந்த புத்தகத்தின் கதாநாயகன் ஆஸ்கர் டாமினிகனில் பிறந்து நியு ஜெர்சியில் வாழும், 300 பவுண்ட் எடையுள்ள ஆசாமி தான். ஆஸ்கருக்கு பிடித்தமான காமிக்ஸ், விஞ்ஞான சிறுகதைகள், விடியோ கேம்கள் என்று சாதரணமாக ஆரம்பித்து ஒரு க்ளாசிக் காதல் கதையாக மாறி டாமினிகன் ரிபப்ளிக் பற்றியும் அடிமைத்தனத்தை பற்றியும் விரிவாக சொல்லும் நாவலாக உருவெடுக்கும் போது சுவாரசியமாகிறது. ஆங்காங்கே பல பத்திகள் வியக்க வைக்கின்றன. Rafael Trujillo என்னும் சர்வாதிகாரி அதிபரைப் பற்றியும் அறிமுகம் கிடைக்கிறது.

ஜூனோ போல் தமிழில் ஒரு எழுத்தாளர் உருவாகாமல் இருப்பதற்கு காரணம் நம்மூரில் இருக்கும் ஒருவிதமான போராட்டமில்லாத எதையும் ஒத்துக்கொள்ளும் மனோபாவம். அமெரிக்காவில் செட்டிலான எதாவது ஒரு தமிழ் குடும்பத்தை வைத்து இப்படி ஒரு நாவலை பின்னி எடுக்கலாம். அது தமிழ் படமாகாத பட்சத்தில்.


”குட்மார்னிங் ஸார்!”

மக்கின்ஸி அவனிடம் ஓரணா நாணயத்தை வீசி எறிந்தான்.

பொறுக்கிக்கொண்டு அடைப்பத்துடன் விலகினான். வெளியே, “துரை எழுந்துட்டாரு” கேட்டது. மூன்று வேலைக்காரர்கள் மெளன வரிசையாக உள்ளே நுழைந்தார்கள்.

மக்கன்ஸி தன் உள்ளாடைகளில் நடந்து, அறையை விட்டு வெளியே வந்து, அருகே இருந்த குளியலறைக்குள் நுழைந்து, தன் உடைகளை கழற்றி எறிய, அவற்றை ஒரு கருப்பன் பிடித்துக் கொள்ள, மக்கன்ஸி இப்போது உரித்த கோழியைப் போல பிறந்த மேனியாக இருந்தான். வெள்ளை வெளேர் என்று உருவி விட்ட அம்புத்தனமான உடற்கட்டு. கொப்புளிக்கும் தசை நார்கள். திருகி விட்ட கயிறு போல, ஒரு அவுன்ஸ் ஊளைச்சதை இல்லாத ஆரோக்கியம்.

வேளையாட்களில் ஒருவன் மண்பானையிலிருந்து குளிர்ந்த நீரை ஆதரவுடன் ஊற்ற அவன் தன்னை தேய்த்துக்கொண்டு கைநீட்டும்முன் மற்றொரு கருப்புக்கை சோப்புடன் தயாராக இருந்தது. மக்கின்ஸி உற்சாகமாக பாடத் துவங்கினான்.

- கருப்பு சிவப்பு வெளுப்பு (அ) ரத்தம் ஒரே நிறம், ஆகஸ்ட் 1983.


slate

நேற்றைக்கு ஸ்லேட்[Slate] படித்துக் கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி முன்னமே சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது.

இணையத்தில் ஓடியாடி தேடிப்பிடித்து படிக்கும் பழக்கம் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்த போது, அதாவது இப்போது இருக்கும் அளவுக்கு தேடல் வசதியோ, வலைப்பதிவுகளோ இல்லாத 1999ல், அருந்ததி ராய் பற்றி தேடும் போது, லக்ஷ்மி கோபாலகிருஷ்ணன் எழுதிய Booker Snooker பத்தி கண்ணில் பட அறிமுகமானது தான் ஸ்லேட். குமுதம் ஆனந்த விகடனுக்கு பிறகு இன்னமும் விடாமல் படித்துக் கொண்டிருப்பது ஸ்லேட் மட்டும் தான். தினமும் படிக்க முடியாவிட்டாலும், நம்மூர் மாமாக்கள் சொல்வது போல, ஹெட்லைனாவது பார்த்து விடுவேன். இதைப் போலவே இன்னும் ஒன்றிரண்டு மின்னிதழ்கள்[Salon, Plastic] முன்பு படித்து கொண்டிருந்தேன். சுருக்கமாய், அமெரிக்காவின் ஒரே ஒரு no-nonsense மின்னிதழ் ஸ்லேட் தான்.

மின்னிதழ் என்றால் சி.என்.என் போலவோ என்.டி.டிவி மாதிரியோ, செய்திகளை உடனுக்குடன் தந்து காசு பார்க்கும் தளமல்ல. எந்த செய்தி நிறுவனத்துடன் இணையாமல் சுதந்திரமாக, சில எடிட்டர்களின் மேற்பார்வையுடன் பிரசுரிக்கப்படும் மின்னிதழ் அல்லது செய்தி சஞ்சிகை. இப்படி நிருபர்கள் அல்லாத எழுத்தாளர்களால் எழுதப்படும் மின்னிதழ்களை படிக்கும் போது அறிமுகமான வலைப்பதிவுகள் வசீகரமான ஒரு யோசனையாக தெரிந்தன. இப்போதும் அப்படித்தான் என்று சொல்ல முடியாது.

Slateல் வெறும் செய்தியாக எதை தேடினாலும் கிடைக்காது. ஒரு செய்தியை சார்ந்த காமெண்டரிகளால் ஆனதே ஸ்லேட். எந்த ஒரு செய்தியைப் பற்றியும் அபிப்பிராயம் கொண்டவர்களால் எழுதப்படுகிறது. உதாரணத்திற்கு அணுசக்தி ஒப்பந்தத்தை பற்றியோ, இந்தியாவின் பணவீக்கத்தை பற்றியோ அபிபிராயங்கள் கொண்ட ஒரு எழுத்தாளர் அதைப் பற்றி ஆராய்ந்து எழுதும் பத்திகள். கிட்டத்தட்ட வலைப்பதிவுகள் மாதிரி. ஆனால் அதுவும் அல்ல. செய்திப் பத்திரிக்கைகளுக்கும் வலைப்பதிவுகளுக்கும் நடுவே எங்கேயோ இருக்கிறது ஸ்லேட்டின் ராஜ்ஜியம்.

ஸ்லேட்டில் ரொம்பவும் பிடித்தது அதீத பாசாங்குகள் இல்லாமல் எழுதப்படும் டெக்னாலஜி மற்றும் கலை விமர்சனங்கள். பயணக்கட்டுரைகளோ கடைத்தெரு சமாச்சாரங்களோ எல்லாவற்றையும் பற்றி ஸ்லேட்டில் விஷயமுண்டு. சில சமீபத்திய உதாரணங்கள் – 1 2, 3,4 & 5.

இவை எல்லாவற்றிகும் மேலாக ஸ்லேட்டின் கார்டூன்கள். ஒவ்வொரு பத்திக்கும் கிழே கொடுக்கப்படும் Related on the Web என்கிற சுவாரசியமான பத்தியும் படிக்கப்பட வேண்டியன. ஸ்லேட்டை RSS செய்தியோடை மூலம் உங்களின் RSS ரீடரில் படிக்கலாம்.

மைக்ரோசாப்ட்டிடம் இருந்து ஸ்லேட்டை சமீபத்தில் தான் வாஷிங்கடன் போஸ்டு வாங்கியது. அப்படி வாங்கியிருந்தாலும், எந்த குறுக்கீடும் இன்றி ஸ்லேட் சுதந்திரமாக செயல்பட காரணம், ஸ்லேட்டின் விளம்பரங்கள்.

தமிழில் மட்டும் ஸ்லேட் போல ஒரு மின்னிதழ் எழுதி காசு பார்க்க முடியாது.அதனால் இந்தியாவிற்கு ஸ்லேட்டை போல ஒரு மின்னிதழ் தேவை. சுதந்திரமாகவும் பிரபலமாகவும் இருக்கும் மின்னிதழ்கள் இந்தியாவில் இல்லவே இல்லை. ஸ்லேட்டை போல எதாவது இருந்தால் சொல்லுங்கள் படிக்கிறேன்.

பி.கு – தேடிப் பார்த்ததில் ஸ்லேட்டு.காம் – slatu.com இன்னமும் இருக்கிறது. தமிழில் எழுதலாம். slatulu.com கூட இருக்கிறது. தெலுங்கில்.


April 17th, 2008

பலான பலான

இப்படி எங்காவது ‘பலான’ என்ற வார்த்தையை பார்த்தாலும்/கேட்டாலும், எதோ ஒரு கவர்ச்சி நடிகை எசகுபிசகாக உட்கார்ந்து கொண்டு கண்களில் ஏக்கத்தோடு உங்களைப் பார்த்து கண் அடிப்பது போல் தோன்றுகிறதென்றால் நீங்கள் பலான விஷயத்தில் பழுத்துப் போனவர்.

இந்த ‘பலான’ என்பது தமிழில் உள்ள ஒரு வினோதமான, பிரபலமான சொல். காரணம் எந்த அகராதியிலும் இல்லாத, ஆனால் வழக்கத்தில் மட்டும் இருக்கும் பல பலான தமிழ் சொல்களில் ஒன்று. இப்பொழுதெல்லாம் குஜிலிப்பான்ஸ், ஜலபுலஜல்ஸ் என்று மாற்று சொற்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. கொக்கோகம், மதன, காம என்று எதை சொன்னாலும் இக்காலத்து டினேஜர்களுக்கு புரியாமல் போகலாம். ‘பலான’ என்பது அப்படியல்ல.

ஒரு பன்னிரெண்டு (இப்பொழுதெல்லாம் பத்து) வயதில் அறிமுகமாகும் இந்த பலான என்ற வார்த்தையை யார் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று வழக்கமாய் ஞாபகம் இருப்பதில்லை. தினமலர் வாரமலரின் துணுக்கு மூட்டையோ, வண்ணத்திரையின் நடுப்பக்க பின்-அப் பகுதியோ, கெட்ட வார்த்தை புத்தகம் படிக்கும் நண்பனோ, யாரோ ஒருவர் அறிமுகப்படுத்தியவுடன் ஏற்படுத்தும் கிளுகிளுப்பு அடங்க ஹார்மோன்கள் விடுவதில்லை.

பலான என்பது பலவகையான என்ற சொல்லில் இருந்து வந்திருக்கலாம். அதை கெட்ட சமாசாரத்திற்கு எற்றபடி பலான என்று சுருக்கியவர் சாமர்த்தியர். பலவகையான காரியங்களுக்கு தனித்தனியாக சொற்கள் இருந்தாலும், மிட்நைட் மசாலாவிலிருந்து டிரிபில் எக்ஸ் படம் வரை எல்லாவற்றிற்கும் one word fits all, பலான. ஜீனியஸ்.

கூகிளில் பலான என்ற வார்த்தையை தேடிப் பார்த்தால், கிட்டத்தட்ட 6,250 வலைதளங்கள் கிடைக்கின்றன. பலான படம், பலான இடம், பலான பலவீனம், பலான விஷயம், பலான உபயோகம், பலான பெயர், பலான புத்தகம், பலான யோசனை, பலான விடுதி, பலான இணையம், பலான சுவை, பலான குடும்பம், பலான வசதி, பலான காட்சி, பலான ஆயிட்டம், பலான வூடு, பலான எண்ணம் என்று அப்படி இப்படி போய் கடைசியாக பலான எஸ்.எம்.எஸ், பலான பதிவு வரை வந்தாயிற்று.

இவற்றிற்கு காரணம் எழுத்து தமிழை, பேச்சு தமிழை விட கொஞ்சம் தூய்மையானதாகவே வைத்திருந்தார்கள்/ருக்கிறார்கள். ஆங்கில இலக்கியத்திலும் படங்களிலும் வரும் கெட்ட வார்த்தைகளுக்கு தமிழில் மிக மிக தெளிவான கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை எழுத்து தமிழில் பயன்படுத்தும் போது கொஞ்சம் வன்முறையாக தெரிவதால் தான் இந்த substitution. யோசித்துப் பார்த்தால் பேச்சுத் தமிழை விட எழுத்துத் தமிழில் தான் பலான என்கிற வார்த்தை அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இருக்கிறது. வீட்டில் பலான விஷயம் என்று உபயோகித்தால் பின்னி எடுத்து விடுவார்கள். ஆனாலும் சிலர் ‘க்’கன்னாவை வைத்து பேசுவதைப் போல், பலான இடத்துல பலான டிபன் சாப்டுட்டு பலான பஸ் புடிச்சு பலான டைமுக்கு வந்துற்றேன் என்று பேசுவதே பலான வார்த்தையில் தான்.

சமீபத்தில் வெளியான தரணி-விஜய்யின் குருவி பட இசையில், பலானது பலானது என்கிற ஒரு பாடல் ஆட்டம் போட வைக்கிறது. வித்யாசாகர் இசையில் அவரும் ராஜலட்சுமியும் பாடியிருக்கிற இந்தப் பாடல் தான் கேட்டவுடன் பிடித்தது. எதோவொரு DJ பாங்கராவுடன் சேர்த்த தமிழ்ப் பாட்டு போல இருந்தாலும், டாக்டர் விஜய்யும் த்ரிஷாவும் வழக்கமான சுறுசுறுப்பாட்டத்தை போட்டு ஹிட்டாக்குவார்கள் என்று நம்பலாம்.

அலட்டாதடி அலட்டாதடி மட சாம்பிராணி
இருக்கும் இடம் தெரியாமலே அலைபாயுறாய் நீ

மெகா சைஸுல மெகா சைஸுல பிலிம் காட்டுற நீ
மலைக்கள்ளனா மலைக்கள்ளனா எதைத் தேடுற நீ

என்றெல்லாம் சுவையாய்(?!) சரணம் இருந்தாலும் பாடலின் பல்லவியில் பலான வரிகளிகளும் தேவையில்லமல் வரும் சில வார்த்தைகளும், இப்போதுள்ள சூழ்நிலையில் காண்டர்வர்சியை அழைக்கின்றன. அது என்ன என்று காம்படீஷன் போஸ்கார்டில் அல்லாமல் ஈமெயில் அனுப்பினால் VPPயில் பலான புத்தகங்கள் அனுப்பப்படும்.


kollywood sunglass team

போன வாரம், ஒகேனக்கல் விஷயத்திற்காக கோடம்பாக்கத்து சன்கிளாஸ் படை மேடையில் கை கோர்த்ததை கண் குளிர பார்த்தோம். அப்போது பேசிய சிலரின் உண்மையான வொக்காபுலிரியும் புல்லரித்தது. குறிவைத்து ரஜினியின் பேச்சுக்கு வந்த மிகையான கர்நாடக எதிர்ப்பும், அதற்கு கொஞ்சம் கோபமான தொனியில் வந்து விழுந்த ரஜினியின் பதிலும், தமிழர்களை சில நிமிடங்கள் சிந்தனையிலும், அதைவிட முக்கியமாக சுவாரசியத்திலும் ஆழ்தின.

ரஜினி சற்றே கோபமாய் பதிலளிப்பது இது முதல் முறையன்று. ஆனால் நிஜமாகவே இந்த பதில் அவரின் கோபத்தின் வெளிப்பாடா அல்லது ச்சும்மா உல்லுலாக்காட்டிக்கு கோபமா என்று யோசித்துப் பார்க்கலாம். இமயமலை செல்வது, தியானம் செய்வது எல்லாம் இருந்தாலும், 25 வருடமாக இந்த சினிமா என்னும் ஒரு மாயச் சுழற்சியில் இருப்பவர். இதைப் போன்று ஏராளமான துக்கடா மேட்டர்களை சந்தித்தவர், முதிர்ச்சியுடன் தான் இருக்க முடியும். இதற்கெல்லாம் அத்தனை சீக்கிரமாக கோபப்பட்டு விடுவார் என்று தோன்றவில்லை. அவருடைய பதிலில் நிதானம் தெரியவில்லை என்றாலும், இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்ப்பிற்கு, இதைத் தவிர வேற வழியிருப்பதாய் தோன்றவில்லை. தன்னை சுற்றி பின்னப்படும் இந்த பிதற்றல் அரசியல் தேவையா என்று கூட ரஜினிகாந்த் போன்றவர்களுக்கு தோன்றலாம். ஆனால், it comes with the job. கொஞ்சம் முட்டாள்தனமாக தோன்றினாலும், தென்னிந்தியாவில் மட்டுமே பெருமளவு, இவைச் சாத்தியம்.

கமலஹாசனும் இந்த மாதிரியே மேடை நாகரீகம் கருதி சில விஷயங்களுக்கு ச்சும்மா கோபப்பட்டிருக்கிறார். சமீபத்தில் நான்கு வருடங்களுக்கு முன்பு உண்மையாகவும் கோபப்பட்டார். ஆனால் அது அவருடைய வேலையை செய்யவிடாமல் தடுத்தற்காக. சண்டியர் என்று பெயர் வைத்திருந்த படத்தை எடுக்க விடாமல், தமிழ் கலாச்சாரம், பண்பாடு என்றெல்லாம் ஆதாயம் தேடிப் பேசிய அரசியல்வாதிகளைப் பற்றிய கோபம். உண்மையானது.

காலையில் எழுந்து வேர்க்க விறுவிறுக்க வேலைக்குச் சென்று வந்து, அப்பாடா என்று மெகா சீரியல் பார்க்கும் மெஜாரிட்டி தமிழர்களுக்கு, இந்த ஒகேனக்கல் சண்டை பல விஷயங்களில் ஒன்று. மற்றபடி சிம்பு பக்கத்தில் உட்கார்ந்த நயன்தாரா ஏன் பேசவில்லை, திரிஷாவின் ஒரிஜினல் கலர் இவ்வளவுதானா, சத்யராஜ் மயிறு என்றாறா மசிறு என்றாறா, அஜித்தின் கண்ணாடி ரேபானா வாரிலக்ஸ்ஸா என்பது போன்ற philistinistic கேள்விகள் தான். ஆக நம்மில் பலர் இந்த ஒகேனக்கல் விஷயத்திற்காக ஒரு நிமிடம் வருத்தப்பட்டாலும், முக்கியமாய் நம்மை ஆக்கிரமிப்பது இந்த ஹெட்லைன் நியூஸும் அதனைப் பின்தொடரும் இவ்வகை விசித்திர துணுக்குகளும் தான்.

ஒரு பத்து வருடங்களுக்கு பின் யோசித்துப் பார்த்தால் இதிலுள்ள அபத்தம் தெரியும். சுஜாதா சொன்னது போல், இந்தியாவில் அரசியல் கலக்காத விஷயங்கள் இல்லவே இல்லை, குழந்தையின் சிரிப்பைத் தவிர.