‘பயாஸ்கோப்’ பதிவுகள்

raavanan

படம் வெளிவர ஒரிரு மாதங்களுக்கு முன்னர் தொடங்கும் மணி ரத்னத்தின் ஹைப் மெஷின், ஆரம்பித்தாயிற்று. இனிமேல் மனிதர் எல்லா பத்திரிக்கைகளுக்கும் பேட்டி அளிப்பார், படத்தை பற்றிய கிசுகிசு வர ஆரம்பிக்கும், முப்பது நொடி படத்தை காட்டி கவர்ந்திழுப்பார்.

ராவணன் இசை கேட்க சுவாரசியமாயில்லை. ராவணனின் ட்ரைலரை பார்த்தால் காட்டுத் த்ரில்லர் போல இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி ரஹ்மான் வித்தியாசமாய் இசையமைத்திருக்கிறார். ஆனாலும் வைரமுத்து வரிகளுக்கு கார்த்திக் பாடியிருக்கிற உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே பாடலைத் தவிர மற்றதெல்லாம் சுமார் ரகம். மற்ற சில பாடல்கள் இரைச்சலாய் இருக்கிறது.

இம்மாதிரி சுமார் ட்ரைலர் படமெல்லாம் பிய்த்துக் கொண்டு ஓடியிருக்கிறது. இது எப்படி என்று ஜூன் 18 அன்று தெரிந்து விடும். அதற்கு முன் உதட்டு சுழிக்கெல்லாம் உசிரை விடாமல் பிடித்துக் கொள்வோம்.


a wednesday

எ வெட்னஸ்டே – புதிய கதைக் களன் என்றெல்லாம் கதை விடாமல் உண்மையை சொல்வதானால், கதாநாயகியின் இன்னபிற சமாசாரங்களை நம்பி எடுக்கப்பட்ட படத்தைப் போல , நடுவில் வரும் அந்த ஒரு திருப்பத்தை நம்பியே எடுக்கப்பட்ட சுமார்ப் படம். சிறுகதைகளில் வரும் கடைசி வரி ஓஹென்றி திருப்பங்களை வாசகர் கண்டுபிடித்து விடுவாரேயானால், மற்ற திரில்ல்ர் எல்லாம் வீண். அந்த மாதிரி படம் ஆரம்பித்த ஒரு அரை மணியிலேயே நஸ்ருதீன் ஷாவை பற்றி கண்டுபிடித்து விட்டதனால், இயக்குனரின் வித்தியாச திரைக்கதை மனசில் ஒட்டவில்லை.

மற்றபடி இந்த மாதிரி சினிமா வந்தா தான் இந்திய சினிமாவுக்கு நல்லது என்ற ____வுட் ’டாக்’ எல்லாம் கேட்டு அலுத்து விட்டாயிற்று. இதை பார்த்த பின் கமல் எடுத்த இதன் தமிழ்ப் பதிப்பை பார்க்க ரொம்பவும் எதிர்பார்ப்பில்லை. தலைவன் இருக்கிறான் என்ற டைட்டிலே கதையை சொல்லாமல் இருக்கிறது. உன்னைப்போல் ஒருவன் என்றெல்லாம் சொல்லியும் தமிழர்களுக்கு ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை என்றால், அவர்களை ப..பு..தி.

delhi 6

தில்லி 6 – அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து, மக்களை விரும்பி, பெண்ணை சைட் அடித்து, லோக்கல்வாசிகளிடமிருந்து உதை வாங்கி/கொடுத்து, அமெரிக்கா திரும்பிச் செல்ல மறுக்கும் சுவதேஸ கதை. இதைத் தவிர ஹேராம் பிரச்சனைகள். மனதில் தங்கிப்போனதற்கு காரணம் இரண்டு விஷயங்கள். எதோ காமெடிக் கிளைக் கதையாக ஆரம்பித்த கருப்பு குரங்கு விஷயம் அனுமார் வாலாக நீண்டு திரைக்கதையின் திருப்பத்திற்கு உபயோகப்பட்டிருப்பதும், பிரபல கவிஞரை ஞாபகப்படுத்தும் முகத்துடன் வரும் அந்த மனநிலை சரியில்லாதவரின் உனக்குள் கடவுள் தத்துவமும்.

வழக்கம் போல பின்னியிருக்கும் ரஹ்மானின் பாடல்களை சரியாக உபயோகிக்காததால் தில் கிரா தஃப்பதனை தவிர மற்றதெல்லாம் சுமார். காலா பந்தரில் ராப் ஆட்டம் ஆடும் ஜுனியர் பச்சன் எம் டிவி பார்த்ததில்லை போலும்.

nadodigal

நாடோடிகள் – கலக்கலாயிருக்கிறது என்று சிலர் சொன்னதால் பார்த்தால், செம கடி. உப்புமா கதை/தி.கதை. சுப்பிரமணியபுரம் தந்த தைரியத்தில் எடுத்த படம் போல தெரிகிறது. சசிகுமார் ஒரே மாதிரி தாடி வைத்து, மையமாக சிரித்து, இறுக்கமாகவே இருக்கிறார். யதார்த்த தமிழ் சினிமா போலவே ஆரம்பித்தாலும், க்ளைமாக்ஸ் திருப்பத்தில், நண்பர்கள் மூவரும் ஸ்லோமோஷனில் பழி வாங்க நடக்கும் போது கோலிவுட் தெரிகிறது. படத்தில் ரொம்பவே ஸ்லாப்ஸ்டிக் காமெடி.


அச்சமுண்டு அச்சமுண்டு

தலை கலைந்த பொம்மை, தனியே ஆடும் ஊஞ்சல், எட்டிப் பார்க்கும் பாம்பு என்று ஒரு த்ரில்லருக்கு தேவையான அத்தனை டெக்ஸ்ட்புக் சமாசாரங்களும் இருந்தாலும், படம் முழுவதும் வியாபித்திருக்கும் அந்த குடும்பத்தின் தனிமையும், இயற்கையான புற சத்தங்களும், பிண்ணனி இசையில்லாமல் விடப்பட்டிருக்கும் பல காட்சிகளுமே காலர் தூக்க வைக்கும் விஷயங்கள்.

அமெரிக்காவின் வசிக்கும் தமிழ்க் குடும்பம் கடைசியாக கொஞ்சம் உருப்படியாக திரையில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தினமும் ப்ளாரிடாவில் பாராஸ்கீயிங் செய்து கொண்டு, கண்ணைவிட மிகப்பெரிய சன்க்ளாஸ் அணிந்து, மால்களில் கட்டிப்பிடித்து காதல் செய்து, வேகாஸ் இரவில் ஸ்னூக்கர் தட்டி விட்டு, கோல்டன் கேட்டில் டூயட் பாடுவதெல்லாம் இந்தப் படத்தை தவிர்த்து மற்ற தமிழ்/இந்தி சினிமாவில் மட்டும் தான். இப்படித்தான் நாங்கள் வாழ்கிறோம். கிட்டத்தட்ட.

இந்த இரண்டு நிமிட, எல்லோருக்கும் தெரிந்த முடிவை நோக்கியே செல்லும் கதையை, அறிமுக டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் தில் இருந்தால் ஒழிய எடுத்திருக்க முடியாது. பயப்பட வைக்கவே இல்லையென்றாலும், யதார்த்த சம்பாஷனைகளால் ரசிக்க முடிகிறது. பொழுதுபோக்கு சினிமாவில் மெசேஜ் என்று கடைசியில் க்ராபிக்ஸில் பூச்சிபூச்சியாய் புள்ளிவிபரம் போடுவதால் பயனில்லை. அல்லது உள்ளது, அவார்டுக்கு.

ப்ரசன்னாவும் ஜான் ஷியாவும் அந்த குட்டிப் பெண்ணும் தன் பங்கை செய்திருந்தாலும் படத்தில் வீக் லிங்க் சுமாராக டைலாக் டெலிவரி செய்யும் சினேகா தான். ரொம்பவே சிரமப்படாமல் ஹாலிவுட்டில் எதாவது பயிற்சி வகுப்பிற்கு போயிருந்தால் சினேகாவிற்கு இந்த மாதிரி ஆட்டு மந்தைதனம் இல்லாத தமிழ் சினிமாக்களில் சான்ஸுண்டு.


போன பத்தியை புனைவு என்று வகைப்படுத்தியிருந்ததை பார்க்காமல், நிஜமாவா? என்று புருவம் உயர்த்தியபடியே ஈமெயில் எழுதிய இரண்டு அன்பர்களுக்கும் இல்லை என்று பதில் போட நாளாகிப் போனது. யாரந்த எழுத்தாளர் என்று சிலரும் கேட்டிருந்தனர். நானும் அந்த ஈமெயில்களை இங்கே போட்டு பதில் எழுதினால் வித்தியாசமற்று போய்விடும் என்று…

தமிழில் சிறுகதையும் தொடர்கதையும் நாவலும் கிட்டத்தட்ட இல்லை என்றாகி விட்ட இந்த நாளிலும் இந்த கப்சா வலைப்பதிவுகளை விழுந்தடித்து படிக்கும் தமிழர்களை சொல்ல வேண்டும். அப்படியே மிச்சிகனில் இருந்தும் டல்லாஸில் இருந்தும் பொழுது போகாமல் தமிழ் எழுத்தாளர்களை உசுப்பேத்தும் கம்ப்யூட்டர் ஆசாமிகளை பிடித்து, கடைசியாய் கடைசிப் பக்கம் வரை படித்த நாவல் என்னவோ என்று கேட்டால்,”ம்ம்ம்ம்….அதான் சார் வந்தியத்தேவன்….வந்து…பொன்னியின் செல்வன்” என்று சொல்லி விட்டு, “நீங்கள் குடித்த க்ளாசில் காப்பி குடிக்கிறேன் ஐயா” என்று அடுத்த மெயில் அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள்.

————-

சிறுகதைகளும் தொடர்களும் இல்லாத வாரந்திரிகளை நினைத்துப் பார்க்க முடியவில்லை. 20 வயது இளைஞ/ஞிகள் படிக்கும் தமிழ்ச் சிறுகதைகள் எங்கே எழுதப்படுகின்றன. தேடிப் பார்த்தாலும் அவர்களின் வாழ்க்கையை அருகில் இருந்த பார்க்கும் நேர்த்தியான சிறுகதைகளை பார்க்க முடியவில்லை. அவர்களை மயக்கி தமிழில் படிக்க வைக்க சுஜாதா மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு. அவர்களை சிறுகதைகளை படிக்க வைக்க நம்மாட்கள் முற்படுவதில்லை. அடுத்த தலைமுறையை நினைத்துப் பார்த்து பயப்பட தேவையில்லை. தற்போதைய இளைஞர்களே படிக்காத பட்சத்தில் அடுத்த தலைமுறை பற்றிய கவலை என்பதெல்லாம் கப்சா.

இவர்களுக்கு எல்லாம் குமுதத்திலோ விகடனிலோ எழுதினால் படிக்க தோன்றுவதில்லை. ஃபேஸ்புக்கில் எழுதப்படும் முதல் தமிழ்ச் சிறுகதை பிரபலமாவது சர்வ நிச்சயம். படிக்கக் கூடிய சைஸில்(அதாவது ஐம்பது வரிகளுக்கு மிகாமல்), முடிக்கக் கூடிய வேகத்தில் எழுதினால் கண்டிப்பாய் படிப்பார்கள்.

எழுத்தாளர் பாராவின் கல்கி தொடர்கதையை முழுவதும் படித்தீர்களா ? நினைத்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா. படியுங்கள். இந்த டுவிட்டர்வேக உலகத்தில், தமிழ்த் தொடர்கதைகளை படிக்கும் பொறுமை இருந்தால் நீங்கள கொடுத்து வைத்தவர்கள்.

————-

பசங்க என்ற படத்தை பற்றி கேள்விப்பட்டு பார்த்தால் அதீதமான கற்பனைக் காட்சிகள், அதிகப் பிரசங்கித்தனமான குழந்தைகள், கோடம்பாக்க சிச்சுவேஷங்கள், இடைச்சொருகலாக காதல். தமிழில் சிறுவருக்கான நல்லதொரு படத்துக்காக இன்னமும் காத்திருக்க வேண்டியது தான்.


yaavarum nalam

13பியில் யாவரும் நலம் என்கிற யாவரும் நலம் மிகவும் ’வித்தியாசமான’ தமிழ்ப் படம். வித்தியாசமான என்றவுடன் காசியில் எடுத்ததா, ஹீரோவுக்கு பேச முடியாதா, க்ளைமாக்ஸில் பிழிய பிழிய சோகமா என்கிற மாதிரி எல்லாம் வித்தியாசமில்லை. அதற்கெல்லாம் ஒரே படத்தை நான்கைந்து வருடங்கள் எடுக்க வேண்டும். இப்படி எல்லாம் இல்லாமல், சாதா கதையை ஸ்பெஷல் சாதாவாக மாற்றிய கதாசிரியருக்கும்/இயக்குனருக்கும்(விக்ரம் குமார்) ஒரு ஷொட்டு(குமுதம் வாசனை!).

யாவரும் நலம் சரியாக எடுக்கப்பட்ட ‘பேய்ப் படம்’. அதைப் பேய்ப் படமாவே முடித்தது தான் ரொம்பவும் பிடித்திருந்தது. சுவாரசியமாய் இருந்தது. திகில் படங்களை எப்பவும் கொஞ்சம் ரசித்துப் பார்ப்பேன். காரணம் அனாவசியமாக லவ் டூயட் இல்லாமல், ஹீரோயினுக்கு பதில் பேயை வைத்து பயமுறுத்துவார்கள். ஹாலிவுட்டின் ஹாரர் ஜானரில் வந்த அனேக முக்கிய படங்களை பார்த்திருக்கிறேன். திகில் படத்தில் பேய் ஆவி ஆகியன இருப்பது முக்கியமில்லை. ஸ்டான்லி க்யூப்ரிக்கின் The Shining போல, பார்வையாளன் மேல் பச்சாதாபமே இல்லாத ஒரு திகில் படம் வேறில்லை. இதே மாதிரி The blair witch projectஐ சொல்லலாம்.

ஒரு மெகா சிரியலுடன் கதை கலக்கும் இடத்தில் சற்றே காதில் பூவாக தெரிந்தாலும் அதை கடைசிவரையில் நம்பும் படியாக செய்த திரைக்கதையும், திகிலூட்டக்கூடிய பிசி ஸ்ரீராமின் காமிரா கோணங்களும் தான். மாதவன் ரொம்ப நாளைக்கு பிறகு மனிதர் நடித்திருக்கிறார். திகில் படங்களுக்கு முக்கியமானது படத்தில் வரும் கதாபாத்திரங்களை தவிர அதில் வரக்கூடிய செட்டுகள் தான். எக்மோரில் போடப்பட்டதாக சொல்லப்படும் அந்த ப்ளாட் செட்டும் கலக்கல்.

கடைசியில் வரும் சில காட்சிகள், அந்த ப்ளாஷ் பேக் காட்சிகள் ஆகியவைகளில் ஹாலிவுட் வாடை. எழுபதிகளில் நடக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகளில், அலட்சியம் தெரிகிறது. சட்டென செத்துப் போகும் அந்த அப்பாவி தம்பியைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் தற்போதைய க்ராப் வைத்திருக்கிறார்கள். டிஜிட்டல் டிசைன் சட்டை போட்டிருக்கிறார்கள்.

மற்றபடி படத்தில் ஆவி உட்பட யாவரும் நலம்.


’இரு கோடுகள்’ படத்தை ஜனம் ‘ஓஹோ’ என்கிறதே என்று அதில் போய் உட்கார்ந்தேன். படத்தில் வருகிற ஓவ்வொருவருமா ஸ்லேட்டை வைத்துக் கொண்டு கோடு போட்டுக் காண்பிக்க வேண்டும்? ஒருத்தன் குறுக்கே கோடு போடுகிறான். மற்றொருவன் X கோடு. அப்புறம் ஏன் இப்படி எல்லோரும் பிழியப் பிழிய அழுகிறார்கள்? டைரக்டர் காட்ட விரும்புவது ரியலிஸமா அல்லது caricatureஆ! ரியலிஸம் என்றால் இந்தக் கதையே அர்த்தமற்றது. இந்த conflict ஒரு ஆபீசில் நிகழவே நிகழாது. முதன்முதல் அந்த கலெக்டருக்கு ஒரு கெடிகாரத்துக்கு உள்ள மூளை இருந்தால்கூட அவள் கேட்பது transfer ஆக இருக்கும்.

- கணையாழியின் கடைசிப் பக்கம், டிசம்பர் 1969


December 26th, 2008

இன்ன பிற – 2

sujatha air traffic controller

“திரைப்படம் எடுப்பது எப்படி என்பதைப் பற்றி புத்தகம் எழுதும் அளவு `மீடியா டிரீம்ஸ்’ நிறுவனத்தில் எனக்கு அனுபவம், ஐந்து திரைப்படங்களில் ஏற்பட்டுவிட்டது. எந்த பட்ஜெட்டும் குறிப்பிட்ட தொகையை இரண்டு மடங்கு மீறும். இதற்கு மனசுக்குள் தயாராக இருக்க வேண்டும். அதாவது, அவர்கள் ஒரு கோடிக்குள் படத்தை முடிக்கிறேன் என்று சொன்னால் இரண்டு கோடிக்குத் தயாராக இருக்க வேண்டும். அதேபோல் ஒரு படத்தை மூன்று மாசத்தில் முடிக்கிறேன் என்று ஒருவர் சொன்னால், ஆறு மாசத்துக்குத் தயாராக இருக்கவேண்டும். படத்தை பதினெட்டு நாளில் முடிப்பேன் என்று ஒருவர் சொன்னால் உடனே அவரை வழி அனுப்பவும். சம்மதத்துக்காக பொய் சொல்கிறார். படத்தில் ஏதாவது ஒரு ஸ்டார் இருந்தால் அதற்காக அரை மடங்கு கூடுதல் பணம், நேரம் இரண்டுக்குமே தயாராகவும், ஒரு நாளைக்கு ஷூட்டிங் செலவு முப்பதாயிரம் என்று சொன்னால் புளுகுகிறார் என்று அர்த்தம். தமிழ் சினிமாவின் ரேட் ஒரு நாளைக்கு ஒரு லட்சம். பெரிய டிபன் பாக்ஸில் குறைந்தபட்சம் இருநூறு பேர் தின்னே தீர்ப்பார்கள். இதை யாரும் எதுவும் செய்ய முடியாது. கலாசாரம் இப்படி.

இதையெல்லாம் படித்த பின்னும் உங்களில் சிலர் படம் எடுக்கும் தைரியம் பெற்றால் கடவுள் உங்களைக் காப்பாற்றட்டும்!”

- `படமெடுத்துப் பாழாய்ப் போக’ கட்டுரையில் சுஜாதா, 2003

இருபத்தி நான்கு வாரங்களாக குமுதத்தில் எழுதிக் கொண்டிருந்த சுஜாதாவின் கதைக்கு முற்றும் போட்டு விட்டார் ரஞ்சன். நாற்பது வருடங்களுக்கு மேல் எழுதிக் கொண்டிருந்த ஒரு மிகப் பிரபலமான எழுத்தாளனின் கதையை எழுதுவது சுலப(ம்/மன்று).

சுஜாதா அவருடைய வாழ்க்கையின் சுவாரசிய பக்கங்களை அவரின் பத்தி எழுத்துக்களில் அவ்வப்போது எழுதி வந்திருக்கிறார். அவை எல்லாவற்றையும் திரட்டி, மேலும் சிலரை சந்தித்து ஒரு பயோகிராபி தொடரை எழுதி முடித்திருக்கும் ரஞ்சனுக்கு நன்றிகள் பல.

எனக்குத் தெரியாத பல விஷயங்கள் தொடரின் கடைசி சில வாரங்களில் வந்தது. சுஜாதா சினிமாவில் ஒரு காட்சியில் நடித்தது, சினிமா டைரக்‌ஷன் செய்ய பெல் நிறுவன வேலையை ராஜினாமா பண்ண நினத்தது, தன்னுடைய கையெழுத்தை வைத்து தனக்காக ஒரு கணிப்பொறி ஃபாண்ட் அமைத்துக் கொண்டது, ராஜீவ் மேனனின் நட்பு மற்றும் குமுதத்தில் ஆசிரியர் அனுபவங்கள்.

குமுதம்காரர்கள் இதை வருகிற புத்தக சீசனில் புத்தகமாக கொண்டு வந்தால் சில ஆயிரமாவது போகும். தேசிகனும் சுஜாதா பற்றி பயோகிராபிக்கு சில வருடங்களாக யோசித்து கொண்டிருக்கிறார். சுஜாதாவுடனும் இதை பற்றி பல மணி நேரங்கள் பேசியிருப்பதாய் சொன்னார். செய்வார் என நம்பலாம்.

————-

அமெரிக்க வரைபடத்தின் வட மேற்கு மலைபகுதியை சூம் செய்தால் தெரியும் சியாட்டலில் ஏகப்பட்ட பனியுடன் வொயிட் கிறிஸ்துமஸ் கொண்டாடினோம். அப்படி ஒரு வெள்ளை விரிப்பு. பச்சை மரங்களையும் கார்களையும் சேர்த்து பனி விழுங்கிக் கொண்டு மீண்டும் ஒரு முறை தன் இருப்பை காட்டிக் கொண்டது.

நான்கு நாட்களாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் போல, டிவியில் சொல்வதற்கு நேர்மாறாக, பனி என்றால் மழை. மழை என்றால் கடும் பனி. சாட்டிலைட் புருடாவுக்கெல்லாம் அசைவதாய் இல்லை இயற்கைத் தாய்.

————

க்ளிஷேவாக சொல்வதானால், மாறணும் ஆயிரம். தமிழ் சினிமாவில் மாறவேண்டியவை என்று லிஸ்ட் போட்டால், கதை, நடிப்பு என்பதற்குப் பின் மேக்கப் கலை. தசாவதாரத்தை விட நன்றாக இருந்தாலும், அறுபது வயது பெரியவருக்கு முப்பது வயது கையிருக்கிறது.

கெளதம் மேனன் தன் அப்பா பற்றி ஒரு மெமாயிர் எடுத்ததெல்லாம் அவருடைய கதாசிரிய உரிமை. அதற்கு சரியாக ஒரு திரைக்கதை அமைக்காததால், தியேட்டரில் எத்தனை விளக்குகள் விசிரிகள் இருக்கிறதென்று எண்ண ஆரம்பித்து விட்டேன்.

ஹாரிஸின் பாடல்களும் படத்தோடு பார்க்கும் போது ஒரிஜினாலிடி இல்லை. சூர்யாவோ அபூர்வ சகோதர்கள் கமல் போல ஒல்லி மீசையில் நடனமாடும் எண்பதுகளின் பாடலில் அனக்ரானிசமாக contemporary சிந்தஸைஸர் ஒலி. சகிக்கவில்லை.

க்ளைமாக்ஸில் சூர்யாவின் துயரத்தில் பங்கெடுக்காமல் அந்த பின்சீட்டுப் பெண் சிரித்ததில், கெளதம் மேனனுக்கு எதோ ஒரு செய்தி இருக்கிறது.