முகப்பு

April 22, 2008

அடுத்தது என்ன? - அசோகமித்திரன்

ashokamitran_next_book.jpg
[ஆனந்த விகடன்]

நாளை[ஏப்ரல் 23] உலக புத்தக தினம். படிப்பதைப் பற்றி பின்பு யோசிக்கலாம், அட்லீஸ்ட் ஆளுக்கொரு புத்தகம் வாங்கலாம்.


April 17, 2008

பலான பலான

இப்படி எங்காவது 'பலான' என்ற வார்த்தையை பார்த்தாலும்/கேட்டாலும், எதோ ஒரு கவர்ச்சி நடிகை எசகுபிசகாக உட்கார்ந்து கொண்டு கண்களில் ஏக்கத்தோடு உங்களைப் பார்த்து கண் அடிப்பது போல் தோன்றுகிறதென்றால் நீங்கள் பலான விஷயத்தில் பழுத்துப் போனவர்.

இந்த 'பலான' என்பது தமிழில் உள்ள ஒரு வினோதமான, பிரபலமான சொல். காரணம் எந்த அகராதியிலும் இல்லாத, ஆனால் வழக்கத்தில் மட்டும் இருக்கும் பல பலான தமிழ் சொல்களில் ஒன்று. இப்பொழுதெல்லாம் குஜிலிப்பான்ஸ், ஜலபுலஜல்ஸ் என்று மாற்று சொற்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. கொக்கோகம், மதன, காம என்று எதை சொன்னாலும் இக்காலத்து டினேஜர்களுக்கு புரியாமல் போகலாம். 'பலான' என்பது அப்படியல்ல.

ஒரு பன்னிரெண்டு (இப்பொழுதெல்லாம் பத்து) வயதில் அறிமுகமாகும் இந்த பலான என்ற வார்த்தையை யார் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று வழக்கமாய் ஞாபகம் இருப்பதில்லை. தினமலர் வாரமலரின் துணுக்கு மூட்டையோ, வண்ணத்திரையின் நடுப்பக்க பின்-அப் பகுதியோ, கெட்ட வார்த்தை புத்தகம் படிக்கும் நண்பனோ, யாரோ ஒருவர் அறிமுகப்படுத்தியவுடன் ஏற்படுத்தும் கிளுகிளுப்பு அடங்க ஹார்மோன்கள் விடுவதில்லை.

பலான என்பது பலவகையான என்ற சொல்லில் இருந்து வந்திருக்கலாம். அதை கெட்ட சமாசாரத்திற்கு எற்றபடி பலான என்று சுருக்கியவர் சாமர்த்தியர். பலவகையான காரியங்களுக்கு தனித்தனியாக சொற்கள் இருந்தாலும், மிட்நைட் மசாலாவிலிருந்து டிரிபில் எக்ஸ் படம் வரை எல்லாவற்றிற்கும் one word fits all, பலான. ஜீனியஸ்.

கூகிளில் பலான என்ற வார்த்தையை தேடிப் பார்த்தால், கிட்டத்தட்ட 6,250 வலைதளங்கள் கிடைக்கின்றன. பலான படம், பலான இடம், பலான பலவீனம், பலான விஷயம், பலான உபயோகம், பலான பெயர், பலான புத்தகம், பலான யோசனை, பலான விடுதி, பலான இணையம், பலான சுவை, பலான குடும்பம், பலான வசதி, பலான காட்சி, பலான ஆயிட்டம், பலான வூடு, பலான எண்ணம் என்று அப்படி இப்படி போய் கடைசியாக பலான எஸ்.எம்.எஸ், பலான பதிவு வரை வந்தாயிற்று.

இவற்றிற்கு காரணம் எழுத்து தமிழை, பேச்சு தமிழை விட கொஞ்சம் தூய்மையானதாகவே வைத்திருந்தார்கள்/ருக்கிறார்கள். ஆங்கில இலக்கியத்திலும் படங்களிலும் வரும் கெட்ட வார்த்தைகளுக்கு தமிழில் மிக மிக தெளிவான கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை எழுத்து தமிழில் பயன்படுத்தும் போது கொஞ்சம் வன்முறையாக தெரிவதால் தான் இந்த substitution. யோசித்துப் பார்த்தால் பேச்சுத் தமிழை விட எழுத்துத் தமிழில் தான் பலான என்கிற வார்த்தை அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இருக்கிறது. வீட்டில் பலான விஷயம் என்று உபயோகித்தால் பின்னி எடுத்து விடுவார்கள். ஆனாலும் சிலர் 'க்'கன்னாவை வைத்து பேசுவதைப் போல், பலான இடத்துல பலான டிபன் சாப்டுட்டு பலான பஸ் புடிச்சு பலான டைமுக்கு வந்துற்றேன் என்று பேசுவதே பலான வார்த்தையில் தான்.

சமீபத்தில் வெளியான தரணி-விஜய்யின் குருவி பட இசையில், பலானது பலானது என்கிற ஒரு பாடல் ஆட்டம் போட வைக்கிறது. வித்யாசாகர் இசையில் அவரும் ராஜலட்சுமியும் பாடியிருக்கிற இந்தப் பாடல் தான் கேட்டவுடன் பிடித்தது. எதோவொரு DJ பாங்கராவுடன் சேர்த்த தமிழ்ப் பாட்டு போல இருந்தாலும், டாக்டர் விஜய்யும் த்ரிஷாவும் வழக்கமான சுறுசுறுப்பாட்டத்தை போட்டு ஹிட்டாக்குவார்கள் என்று நம்பலாம்.

அலட்டாதடி அலட்டாதடி மட சாம்பிராணி
இருக்கும் இடம் தெரியாமலே அலைபாயுறாய் நீ

மெகா சைஸுல மெகா சைஸுல பிலிம் காட்டுற நீ
மலைக்கள்ளனா மலைக்கள்ளனா எதைத் தேடுற நீ

என்றெல்லாம் சுவையாய்(?!) சரணம் இருந்தாலும் பாடலின் பல்லவியில் பலான வரிகளிகளும் தேவையில்லமல் வரும் சில வார்த்தைகளும், இப்போதுள்ள சூழ்நிலையில் காண்டர்வர்சியை அழைக்கின்றன. அது என்ன என்று காம்படீஷன் போஸ்கார்டில் அல்லாமல் ஈமெயில் அனுப்பினால் VPPயில் பலான புத்தகங்கள் அனுப்பப்படும்.


March 6, 2008

அப்போலோ தினங்கள் - சுஜாதா

apollo_dhinangal_sujatha.jpg

எதோ ராக்கெட் பயணக் கட்டுரைப் போல டைட்டில் இருந்தாலும், ராக்கெட்டில் செல்லும் போது இருப்பதை விட - தேசிகனின் வார்த்தைகளில் சொல்லப் போனால், உடலில் எல்லா இடங்களிலும் பைப்பும் ட்யூப்புகளும் செருகப்பட்டு, சினிமாவில் பார்ப்பது போல், மானிட் டரில் எண்களும், 'பீப்' சத்தங்களும், விதவிதமான கோடுகளும்... - அப்போலோ மருத்துவமனையில் ரொம்பவும் அபாயகரமான உடல்நிலையில் சுஜாதா எழுதிய கடைசிப் பக்கம், இந்த வார ஆனந்த விகடனில்.


apollo_dhinangal_sujatha_b.jpg
[நன்றி - விகடன்]

இதைத் தவிர தேசிகன் எழுதியிருக்கும், சுஜாதாவைப் பற்றி் பலருக்குத் தெரியாத மற்றொரு பக்கம்.

சுஜாதா ரொம்ப சென்ஸிடிவ்வானவர். ஒருமுறை அவருக்கு வந்த கூரியர் தபாலை என்னிடம் கொடுத்து, 'இந்த கூரியர்ல ஏகப்பட்ட ஸ்டேப்ளர் பின் இருக்கு. ஏன் இவ்வளவு பின் அடிக்கிறாங்க, கையை ரொம்பக் குத்துறது' என்றார். இதனாலேயே அவர் வீட்டில் நிறைய பார்சல்கள் பிரிக்கப்படாமல் இருக்கிறதோ என்ற எண்ணம்கூட எனக்கு வந்ததுண்டு.

பெரிய பெரிய விஷயங்களை எழுதினாலும், சுஜாதாவுக்கு சின்னச் சின்ன ஆசைகள் நிறைய உண்டு. கடற்கரையில் வாக்கிங் போகும்போது, கிளிமூக்கு மாங்காய், வேகவைத்த கடலை வாங்கிச் சாப்பிடுவார். 'அது உடம்புக்கு ஆகாது' என்று முக்கால் பாகத்தை டிரைவரிடம் கொடுத்துவிடுவார். பம்பரம் வாங்கிக் கொண்டுவரச் சொல்லி விட்டுப் பார்ப்பதும், பீச்சில் குழந்தைகள் விளையாடுவதை ஆர்வத்துடன் பார்ப்பதுமாக இருப்பார். அவர்களிடம், 'உன் பேர் என்ன?' என்று ஆர்வமாகக் கேட்பார். வித்தியாசமான பெயராக இருந்தால் ஞாபகம் வைத்துக் கொள்வார்.

சமீபத்தில் ஒரு முறை 'உன்னுடன் பைக்கில் வருகிறேன்' என்று அதிர்ச்சிக்குள்ளாக்கினார். என் பின்னால் உட்கார்ந்து கொண்டு, தன் வீடு வரை அழைத்துப் போகச் சொன்னார். 'இப்ப என்ன ஸ்பீட்?' என்று விசாரித்துவிட்டு, 'இன்னும் கொஞ்சம் வேகமா போ, பார்க்கலாம்!' என்று பைக் சவாரியை அனுபவித்தார்.

ஒரு பக்கம், சுஜாதாவின் எழுத்துக்களில் உள்ள உணர்ச்சிகள் அவரைத் தாண்டி சென்றதில்லை என்னும் விமர்சனங்கள், மற்றொரு பக்கம் இந்தக் கட்டுரை. தேசிகனிடம் போன வாரம் பேசிய போது, “ ஒரு கையே போனா மாதிரி இருக்கு” என்று அவர் சொன்னது, இப்போது தெளிவாக புரிகிறது. சுஜாதாவின் உயிர் பிரியும் நொடியில் அவரின் அருகில் உட்கார்ந்து ஆண்டாள் பாசுரமான, சிற்றஞ் சிறுகாலே படித்ததாய் சொல்கிறார்.

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!

திருப்பாவையில் ரொம்பவே விசேஷமானது இந்த 29வது பாசுரம். இதன் கடைசி மூன்று வரிகளில் தான் திருப்பாவையின் மொத்த சாராம்சமும் ஒளிந்துள்ளது.

தேசிகனின் இந்த கட்டுரையைத் தவிர, நா முத்துக்குமார், தன்னை சுஜாதா கண்டெடுத்த விதத்தை விளக்கும் ஒரு குறிப்பும், சுஜாதாவைப் பற்றி அவரது மனைவி சுஜாதாவின் பேட்டியும் வந்துள்ளது.

எந்த நேரமும் ஏதாவது படிச்சுண்டு, பார்த்துண்டே இருப்பார். படுக்கை முழுக்க புஸ்தகங்களா இருக்கும். அதுக்கு இடையில இடம் பண்ணிண்டு படுத்துக்குவார். நடுராத்திரியில நாலு புஸ்தகங்களை மாத்தி மாத்திப் படிச்சுண்டு இருப்பார். ராத்திரி ரெண்டு மணிக்கு எந்திரிச்சு கிரிக்கெட் பார்த்துண்டு இருப்பார். 'உடம்பைப் பார்த்துக்காம இந்த அப்பா ஏன் இப்படிப் பண்றார்?'னு பசங்க கோச்சுக்குவாங்க. 'இப்படில்லாம் இல்லேன்னாதான் அவருக்கு உடம்பு படுத்தும்'னு சொல்வேன்.

இதுக்கு முன்ன ஹாஸ்பிடலுக்குப் போனப்பல்லாம் கொஞ்ச நேரம் இருப்பார், வந்துருவார். அப்புறம் அதைப் பத்தியே ஒரு கதை எழுதிடுவார். ஆனா, இப்ப அவர் இறந்த கதையை யார் எழுதுறது..?

We miss you !!


February 27, 2008

எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் மறைவு

இங்கு தான் அனைத்துமே
போவதென்ப தெவ்விடம்
உமது நல்ல சீடருள்
அவர்கள் புனையும் கதைகளுள்
பல்கி வாழ வாழ்த்துவேன்
அந்தம் அறு ரங்கராஜனை !!

சுஜாதாலஜியில் - எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி.


October 11, 2007

பாரன்ஹீட் 451

Fahrenheit 451 Ray Bradbury

"You don't have to burn books to destroy a culture. Just get people to stop reading them", என்று பேச ஆரம்பிக்கும் ரே ப்ராட்பரியின்(Ray Bradbury) ஒரு சயின்ஸ் பிக்-ஷன் க்ளாசிக் தான் Fahrenheit 451. 1953ல் இந்தப் புத்தகம் வந்த போது, சென்ஸார் பிரச்சனையிலிருந்து சின்னப் பையன் எதோ எழுதிட்டான் என்கிற வரையில் இந்த புத்தகம் அலைக்கழிக்கப்பட்டது துரதிஷ்டவசமே. பாரன்ஹீட் 451ஐ விஞ்ஞான கதை என்று அதை ஒரு சிறு பிரிவுக்குள் அடைக்கப்பார்த்தது தான் விமர்சகர்கள் செய்த மிகப் பெரிய தவறு. சில விமர்சகர்கள் இதை ஆர்பரித்தார்கள்.

கை மாண்டாக்(Guy Montag) என்னும் ஒரு தீயிடுவாளன்(தீயணைப்பாளன் அல்ல) பற்றி ஒரு டிஸ்டோப்பிய கதை. டிஸ்டோப்பியா(dystopia) என்பது யுதோப்பியாவின்(Utopia) எதிர்ப்பதம். யுதோப்பியாவில் நாடும் வீடும் மன்னனும் நல்லவனாக இருக்கக்கூடிய ஒரு மாய கனவு உலகம். டிஸ்டோப்பியாவில் எல்லாம் நேரெதிர். சமீபத்தில் வந்த V for Vendetta என்ற ஒரு சூப்பர் ஹீரோ படம், சிறந்த உதாரணம். அரசும் அரசியந்திரமும் மக்களுக்கு எதிரான நிலையில் இயங்கும், தற்காலத்திற்கு கொஞ்சமாய் பொருந்தும் ஒரு மாய உலகம். யுதோப்பிய இலக்கியத்தை விட டிஸ்டோப்பிய இலக்கியங்கள் அதிகமாகி வருவது வியப்பல்ல. ஆர்வெல்லின் 1984ம், வெல்ஸின் War of the Worldsம் கூட டிஸ்டோப்பிய இலக்கியங்கள் தான். மிகச் சிறந்த டிஸ்டோப்பிய படமென்று ஸ்டான்லி ஃகூப்ரிக்கின் A Clockwork Orangeஐ சொல்லலாம்.

ஃபாரன்ஹீட் 451 நடப்பது வருங்காலத்தில். டெக்னாலஜி மிகவும் முன்னேறிய ஒரு அமெரிக்க நகரத்தில். மக்கள் எல்லோரும் பாஸ்ட் புட் சாப்பிட்டு, தங்கள் சுவர் உயர டீவிக்களை சதா சர்வ காலமும் பார்க்கிறார்கள். காட்டுத்தனமான வேகத்தில் வாகனங்கள் ஓட்டுகிறார்கள். ஐபாட் போல சிப்பிகளில் ரேடியோ கேட்கிறார்கள். யாரும் படிப்பதில்லை. சுதந்திரமாக யோசிப்பதில்லை. அரசு மக்களை இவ்வாறு ஒரு மயக்க நிலையில் வைத்து, அவர் சிந்திக்க விடாமல் தடுக்கிறது. நாட்டில் உள்ள எல்லா நல்ல/கெட்ட புத்தகங்களும் கண்டுபிடிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன.

கை மாண்டாக் இப்படி பட்ட ஒரு நகரத்தில், புத்தகங்களை கண்டால் எறிக்கும் பல தீ-வீரர்களில் ஒருவன். கதாநாயகன். தனது ஸ்டேஷனில் அலாரம் அடித்தால், யாரோ வீட்டில் புத்தகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அர்த்தம். கை தனது வாகனத்தில் சென்று அந்த வீட்டில் உள்ள புத்தகங்களை எரித்து விட்டு வரும் தீயிடுவாளன். இதை ஏன் செய்கிறோம் ஏன்று கூட அவன் கேள்வி கேட்பதில்லை. ஒரு நாள், இப்படி அலாரம் அடித்து செல்லும் அந்த வீட்டில் இருக்கும் ஒரு பெண்மணி, தன் புத்தகங்களுடன் தன்னையும் எரித்து போடு என்னும் போது யோசிக்க ஆரம்பிக்கிறான்.

இவ்வாறு தீயிட செல்லும் வீடுகளில் உள்ள சில புத்தகங்களை திருடி படிக்க ஆரம்பிக்கிறான். அவனது மேலகதிகாரி இதை கண்டுபிடித்து, 24 மணி நேர, தேவையான புத்தகங்களை படித்து விட்டு வா என்று அவகாசம் தருகிறாள். இந்நேரத்தில் ஃபாபர்(Faber) என்னும் ஒரு மனிதரை சந்திக்க, அவரின் அறிவரைப்படி செயல்படுகிறான்.

கடைசியில், the book people என்னும் சில அறிவுஜீவிகளை சந்திக்கிறான். அப்பொழுது தான் அது வெளிவருகிறது. நாடெங்கிலும் உள்ள புத்தக பிரியர்கள், பேரிளக்கிய புத்தகங்கள் எரிக்கப்பட்டாலும் அழியாமலிருக்க, அரசுக்கு தெரியாமல், ஆளுக்கு கொஞ்சமாய் மனப்பாடம் செய்து வருவது புரிகிறது. ஆச்சரியமாகிறான். புத்தக பிரியர்களை ஒன்று சேர்த்து புத்தகங்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறான். மீதியை பழுப்பு நிற பாரன்ஹீட் 451 புத்தகத்தில் படிக்கவும் !!

இங்கு சயின்ஸ் பிக்-ஷனுக்கு உண்டான விஷயம் எங்குள்ளது என்று கேட்டால், புத்தகத்தை படிக்கவும். பாண்டஸிக்கும் சயின்ஸ் பிக்-ஷனுக்கும் நூலிழை தான் இடைவெளி.

ரே ப்ராட்பரி, இதற்கு முன்னும் பின்னும் ஏராளமான நல்ல கதைகள் எழுதியிருந்தாலும், பாரன்ஹீட்451 போல மற்றது புகழடையவில்லை. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஹிட்லர் நாஜிப் படைகளை வைத்து, பெர்லினில் தனக்கு பிடிக்காத புத்தகங்களை எரித்த நிகழ்ச்சி தான் ரேயை இந்த புத்தகம் எழுத தூண்டியது.

ரே சொல்வது போல், உலகத்தில் இப்படி புத்தகங்களை எரிப்பது என்பது ஒரு கலாசாரத்தை அழிக்க உதவும் விஷயம். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் அலெக்ஸாண்டிரியாவில் இப்படி புத்தகங்களை எரித்திருக்கிறார்கள். சமீபத்தில், இலங்கையிலும் பழம்பெரும் தமிழ் நூலகம் எரிக்கப்பட்டது. பார்வையற்றோரின் ப்ரைல் புத்தகத்திலிருந்து ஹாரி பாட்டர் வரை சென்ஸாரும் புத்தக எரிப்பும் ஓன்றோடிணைந்த ஒன்று. Books : Burn or Bury என்பது வரலாற்று பாடம்.

இன்றும் பலர் பாரன்ஹீட் 451, வருங்காலத்தில் நடக்கலாம் என்று நம்புகிறார்கள். அதி வேக டிரைவிங்கும், பாஸ்ட் புட்டும், 24 மணி நேர கேபிள் ஆக்கிரமிப்பும் உலகெங்கும் தற்போது நிஜம். அரசாங்கம் தடுப்பதே இல்லை. ஆனாலும் மக்களின் படிப்பு குறைந்து வருகிறது என்று கணிப்புகள் கணிக்கின்றன.

ரேயை சயின்ஸ் பிக்-ஷன் எழுத்தாளர் என்று வகைபடுத்தவும் முடியாது. கதை எழுதுவார், அவ்வப்போது கவிதை பேசுவார், திடீரென்று நான்கைந்து படங்களுக்கு திரைக்கதை அமைப்பார். பின்னொரு நாள் நாடகங்களும், குழந்தைகளுக்கான புத்தகங்களும், நான் பிக்-ஷனும் வரும். ஒரு மாதிரி வகைப்படுத்த முடியாத ஜந்து.

மில்லினியத்தின் தொடக்கத்தில் எண்பது வயது நிரம்பிய போது எடுத்த பேட்டியில் ரே சொன்னது, "The great fun in my life has been getting up every morning and rushing to the typewriter because some new idea has hit me.The feeling I have every day is very much the same as it was when I was twelve.In any event, here I am, eighty years old, feeling no different, full of a great sense of joy, and glad for the long life that has been allowed me.I have good plans for the next ten or twenty years, and I hope you'll come along."


October 7, 2007

எவ்ளோ படிப்பது ?

big_read.jpg

சமீபத்தில் வெளியான ஒரு அஸோஸியெட்டட் பிரஸ் வாக்கெடுப்பு சொல்வதைப் பார்த்தால், அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர், போன வருடம் ஒரு புத்தகம் கூட படிக்கவில்லை. நம்மூர் பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் போல, அங்கும் அதிகம் படிப்பது பெண்கள் தான். அடுத்ததாக நிறைய புத்தகம் படிப்பவர்கள், முதியவர்கள்.

பைபிள் மற்றும் ஆன்மீக புத்தகங்களை விடுத்துப் பார்த்தால் அதிகம் படிக்கப்படுபவை பாப்புலர் பிக்-ஷன், வரலாறு, பயோகிராபி மற்றும் மர்மக் கதைகள். இவை தவிர மில்ஸ் அன் பூன் போன்ற ரொமாண்டிக் கதைகளும் அதிகம் படிக்கப்பட்டன.

புத்தகம் படிக்கவில்லை என்ற சொன்னவர்களை தவிர்த்துப் பார்த்தால், ஓவ்வொரு அமெரிக்கரும் சராசரியாக படித்திருந்தது தலா ஏழு புத்தகங்கள். இந்த விகிதாசாரம் குறைந்து கொண்டு வருவது தான் கவலையளிக்கிறது என்கிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன் National Endowment for Arts என்னும் கழகம் Reading at Risk என்னும் ஒரு ரிப்போர்ட்டை பதிப்பித்தது. 2002ல் 57% சதவிகிதம் அமெரிக்கர்கள தான் ஏதாவது ஒரு புத்தகமாவது படித்திருந்தார்கள். இது பத்து வருடங்களில் 4% குறைந்திருந்தது. இதற்கு காரணமாக கூறப்பட்டது கேபிள் டீவி மற்றும் இண்டர்நெட்.

அமெரிக்கர்களின் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவே, The Big Read என்னும் புரோக்கிராமை இந்த வருடம் ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் கண்டிப்பாய் படிக்கப்பட வேண்டிய புத்தகங்களை பட்டியலிட்டு, மாதத்திற்கு ஒரு புத்தகம் என்று ஹைலைட் செய்கிறார்கள். ஒவ்வொரு மாதமும், அந்த மாதத்திற்கான புத்தகத்தை பற்றி ஏராளமான் விவாதங்களும், விமர்சனங்களும் அவரவர் வீட்டருகில் உள்ள அரசு நூலகங்களில் நடைபெறுகின்றன.

கடந்த ஒரு மாதமாக நடைபெறும் இந்த Big Read ஒரு வெற்றி என்றே தோன்றுகிறது. லைப்ரரிகள் களை கட்டுகின்றன. ஒரு நகரத்தில் உள்ள எல்லோரும் ஒரே புத்தகத்தை படிக்கிறார்கள், அதை பற்றி சனிக்கிழமைகளில் நூலகங்த்தில், பர்கர் சாப்பிட்டுக் கொண்டே கதைக்கிறார்கள். இனிமேல் படிப்பாரில்லை என்று பழுப்படைந்து, அடுக்குகளின் ஓரங்களில் இருந்த இந்த லைப்ரரி புத்தகங்களின் எல்லா பக்கங்களும் திருப்பப்படுகின்றன, படிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட புனர்ஜென்மம் தான்.

இந்த பிக் ரீட் பரிந்துரைக்கும் புத்தகங்களில் எனக்கும் பிடித்தவை ஐந்து. ஏற்கனவே இவைகளை படித்திருந்தாலும் மீண்டும் படிக்கப் போகிறேன். பிடித்த ஆர்டரில், ரே ப்ராட்பரியின் டிஸ்டோபிய கதை, பாரன்ஹீட் 451. பிறகொரு நேரத்தில் ரேயின் இந்த சயின்ஸ் பிக்-ஷனைப் பற்றி எழுத எண்ணம். மற்றவை, ஸ்காட் பிட்ஸ்ஜிரல்டு எழுதிய The Great Gatsby, ஹெமிங்வேயின் Farewell to the Arms, ஹார்பர் லீயின் To Kill a Mockingbird மற்றும் அமெரிக்காவை புரட்டிப் போட்டு புலிட்சர் வாங்கிய ஸ்டெயின்பெக்கின் Grapes of Wrath.

மேலே சொன்ன - அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர் போன வருடம் ஒரு புத்தகம் கூட படிக்கவில்லை என்ற கணக்கை கொஞ்சம் மாற்றிப் போடலாம். அமெரிக்கர்களில் நான்கில் மூவர் சென்ற வருடம் ஒரு புத்தகமாவது படித்திருந்தார்கள்.

இதை வைத்து நமது தமிழ் கூறும் நல்லுலகத்தின் நிலைமையை கணக்கிடலாம். ஏனென்றால் இதற்கெல்லாம் நம்மூரில் கணக்கெடுப்பதே இல்லை. அப்படியே எடுத்தாலும், "சார் நீங்க கடேசியா இன்னா பொஸ்தகம் படிச்சீங்க ?" என்று சர்ச் பார்க் பஸ் ஸ்டாண்டில் யாரோ ஒரு நிருபர் காமிரா சகிதமாக கேள்வி கேட்க, நம் ஆசாமி வியர்வை வழிய பஸ் வருகிறதா என்று பார்த்துக் கொண்டோ, அல்லது MU@3CB5:30(யோசியுங்கள். விடை கடைசியில்) என்று அப்ரிவேஷனில் SMS அனுப்பிக்கொண்டோ, "அது வந்து சார், I think I read the book last week with Asin hugging teddy bear in the cover" என்று ஏதாவது சொல்லிவிட்டு எஸ்கேப்புவார்.

சீரியஸாக யோசித்தால் உண்மை புரியலாம். அதாவது தமிழ் நாட்டில் பத்திரிக்கைகள் அளவு புத்தகங்கள் விற்பதில்லை. லட்சக்கணக்கில் விற்கும் பத்திரிக்கைகளுக்கு நடுவில் ஆயிரம் காப்பி விற்றாலே, "My writing career has taken off" என்று காலரை தூக்கிவிடும் எழுத்தாளர்கள் வந்துவிட்டார்கள். அதனால் எழுத்தாளர்களும் AGS ஆபிஸிலோ, அறநிலையத் துறையிலோ மூக்குக் கண்ணாடியை தூக்கி விட்டபடியே கம்யூட்டர் தட்டி கணக்கெழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம், சரியான புத்தகங்கள் வரவில்லை என்று பப்ளிக்கும்(so called public), மற்றொரு பக்கம், நான் புத்தகம் எழுதினால் வாங்க ஐநூறு பேராவது இருக்கிறார்கள் என்று ஜெயமோகன் போன்ற சீரியஸாக எழுதும் இலக்கியவாதிகளும் இயங்குகிற ஊர் தமிழ்நாடு தான்.

ஆறுகோடி பேர் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளும் நம்மூரில், ஐநூறு பேர் தான் முதல் காப்பி வாங்க போகிறார்கள் என்றால், ஒரு எழுத்தாளன் எப்படி எழுதுவான் என்று தெரியவில்லை. அப்படியே எழுதினாலும், எழுத்தினால் கிடைக்கும் சம்பளம் கரண்ட் பில் கட்டகூட சரியாகவில்லை என்றால், working below your labor worth என்று யோசித்து அதிகமாய் பணம் தரும் தனது கம்புயூட்டர் புரோகிராமிங் செய்ய போவது ஒண்ணும் விந்தையல்ல. தமிழ் சினிமா போல கடைசியாய் வேற ஒண்ணும் தெரியாதவர்கள் வந்து சேரக்கூடிய நிலைமையில் உள்ளது தமிழ் புத்தக உலகம். "ஒண்ணு ராவூத்தர் ஹோட்டல்ல ரவுண்டா தோசை ஊத்து இல்லாக்கட்டி ராமர் பாலத்தை பத்தி ஒரு 200 பக்கம் எளுது" என்று அப்பாக்கள் சொல்லும் காலம் கண்ணுக்கு தெரிகிறது.

"இவ்ளோ நேரம் உன்னிய பேச வுட்டோமே, நீ இப்ப என்ன சொல்ல வர" என்று கேட்பவர்களுக்கு, படிக்கலாம். தமிழோ ஆங்கிலமோ, வெண்பாவோ How to win friendsஓ, ரமணி சந்திரனோ எண்டமூரியோ, சுஜாதாவோ சொக்கனோ, புத்தகம் படிக்கலாம்.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் அரை மணிநேரம், மாகஸின்களை தவிர்த்து புத்தகம் என்று நாவலோ நான்-பி்க்-ஷனோ படியுங்கள். டாக்டருக்காவும் டாட்டருக்காகவும் வெயிட் செய்யும் போது கையில் கொண்டு போன புத்தகத்தை படியுங்கள். எழுதும் நேரத்தை தவிர, பா.ராகவன் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் படிப்பதாய் சொன்னார். அவர் எழுத்தாளர். நம் போன்றவர்களுக்கு அரை மணியோ ஒரு மணியோ போதும்.

ஜோடி நம்பர் 1னை ஒரு முறை பார்த்தால் போதும். ரிபீட் டெலிகாஸ்ட் செய்கிறார்கள் என்று நாளொன்றுக்கு நாலுமுறை பார்த்தால் டி.டியையும் மோனிஷாவையும் பிடித்துப் போகும். அப்புறம் கொஞ்சம் பைத்தியமும் பிடிக்கும். அதை விடுத்து நிலா நிழல் படியுங்கள். சரியான ஆரம்பம். ஏற்கனவே இவையெல்லாம் படித்திருப்பவராயின், ஏசுவின் தோழர்களோ, பதினெட்டாவது அட்சக்கோடோ படிக்கலாம்.

எதைப் படிப்பது, எங்கே வாங்குவது என்று கேட்டால், இருக்கவே இருக்கிறது நமது நியூ புக்லேண்ட்ஸ் அல்லது எனி இந்தியன் அல்லது லாண்ட்மார்க்.

இதற்கெல்லாம் மேலே நீங்கள் போன வருடம் புத்தக சந்தையில் வாங்கிய எத்தனை புத்தகங்களை படிக்க எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டுக் கொள்ளலாம். ஆசையாய் வாங்கிப் போட்ட பிரம்மோபதேசமும், விசாரணை கமிஷனும், நிலா பார்த்தலும், அம்மா வந்தாளும் எங்கே என்று அப்பார்ட்மெண்டை தூசு தட்டலாம். ராமர் பாலத்தின் காமெடி செய்திகளை பார்ப்பதை விடுத்து செய்யப்படும் இவை எல்லாமே ஒரு நல்ல த்ரில்லர் புத்தகத்தின் ஆரம்பம் போலத்தான். ஷோ சுவீட் !!

விடை : MU@C3B5:30 - Meet you at Chennai City Center by 5:30.


August 17, 2007

கணந்தோறும்...

கணந்தோறும் வியப்புகள் புதிய தோன்றும்
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்

- பாரதி.

இதில் புதிய மற்றும் வெவ்வேறு என்பன தான் அழுத்தச் சொற்கள். Densely populated words. Ofcourse, கணந்தோறும் என்னும் வார்த்தை பிரயோகத்தின் வீச்சை ஒரு அவசர வாழ்வில் மட்டும் தான் அனுபவிக்க முடியும். 1900களில் எழுதிய முண்டாசு மாமாவை என்ன செய்யலாம்.


April 28, 2007

சுஜாதா ரங்கராஜன் - வாழ்க்கை குறிப்பு

writer sujatha rangarajan

"When I was little, my ambition was to grow up to be a book. Not a writer. People can be killed like ants. Writers are not hard to kill either. But not books. However systematically you try to destroy them, there is always a chance that a copy will survive and continue to enjoy shelf-life in some corner of an out-of-the-way library somewhere, in Reykjavik, Valladolid, or Vancouver."

-Amos Oz

S.ரங்கராஜன் பிறந்தது சென்னைத் திருவல்லிக்கேணியில் உள்ள தெப்பக் குளத்தின் தெற்குத் தெரு வீதியில். மே 3, 1935 அன்று. வைஷ்ணவர். அப்பா சீனிவாச ராகவன் மின்சாரவாரியம் வாரியமாவதற்கு முன்னால் இருந்து வேலை செய்து கொண்டிருந்தார். அம்மா கண்ணம்மா, ஒரு பணக்காரக் குடும்பத்தில் இருந்து வந்தவர். "சரியாக எழுபது ஆண்டுகளுக்கு முன், வீட்டுக் காரியங்கள் எல்லாம் முடித்துவிட்டு, வலியெடுத்து, எந்தவித உதவியும் இல்லாமல், அப்பா மருத்துவச்சியை அழைத்து வருவதற்க்குள், என்னைப் பெற்றெடுத்த என் அம்மா கண்ணம்மா".

ரங்கராஜனின் அண்ணன் திரு கிருஷ்ணமாச்சாரி ஒரு டாக்டர், தம்பி ராஜகோபாலன் தொலைபேசி இலாகாவில் இன்ஜினியர். தங்கை விஜி. "ராத்திரி என்னவோ ஆச்சு... ரெண்டு தடவை வாந்தியெடுத்தா. கார்தாலை பிராணன் போய்ட்டது' என்று பாட்டி அழுதாள். எனக்கு அப்போது பதினொரு வயசு. என் தங்கை விஜிக்கு மூன்று வயது. குழந்தை என்பதால் கையிலேயே தூக்கிப் படித்துறைக்கு கொண்டுசென்று கொள்ளிடக்கரையில் புதைத்தது ஞாபகம் இருக்கிறது. முதன்முறையாக ஆற்றாமை, சோகம் க்ரீப் என் நடைமுறையை பாதித்தது."

sujatha triplicane house - pic : vikatan

ரங்கராஜன் பிறந்த அந்த வீடு திருவல்லிக்கேணியில் 70 வருடம் கழித்தும் இடிபடாமல் இருக்கிறது.

பிறந்தது சென்னையில் என்றாலும் வளர்ந்தது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். தாத்தா குவளக்குடி சிங்கமையங்கார். அப்பாவின் உத்யோகம் காரணமாக அவர் அடிக்கடி இடம் மாறுவதால், முதல் பதினேழு வருடங்கள் கோதை அம்மாள் என்கிற ருக்குமணி அம்மாள் பாட்டியுடன் வளர்ந்தார். "பாட்டி என்னை எத்தனைத் தூரம் காப்பாற்றி இருக்கிறாள். ஒரு பெரிய சொத்துக்கு சுவிகாரம் கொடுப்பதை கடுமையாக எதிர்த்துத் தடுத்தியிருக்கிறாள். அந்த சுவிகாரம் நடந்திருந்தால் நான் மகேந்திரமங்கலத்திலோ குவளக்குடியிலோ ஒரு பண்ணையாராக வெள்ளிச் சொம்பும், பன்னீர் புகையிலையும் பத்தமடைப் பாயும், இஸ்பெட் ஆட்டமுமாக வளர்ந்திருப்பேன். எழுத்தாளனாகியிருப்பேனா...சந்தேகம்."

sujatha teenager

ஸ்ரீரங்கத்தில் The Highschool என்னும் ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியில் படிப்பு. ரங்கராஜன் படிப்பில் சுட்டியாக இருந்தும் பிரபலமாக எல்லாம் இல்லை. பள்ளிப் படிப்பிற்கு பின் திருச்சிக்கு ஜாகை மாறி, இண்டர்மீடியட் என்று இரண்டு வருடமும், பின் பிஎஸ்சி physics இரண்டு வருடமும் படித்தது புனித சூசையப்பர் காலேஜில். இந்த ஜோசப் காலேஜில் தான் ரங்கராஜனுக்கு ஒரு வாழ்க்கைத் திருப்பம் காத்திருந்தது.

என்ன தான், ஸ்ரீரங்கத்தில் மற்றோரு ரங்கராஜனுடன்(இப்போது கவிஞர் வாலி) சேர்ந்து கையெழுத்துப் பிரதி நடத்திக் கொண்டிருந்தாலும், எழுத்தார்வம் அதிகமானது கல்லூரியில் தான். அப்போது கூட படிக்கத்தான் ஆசை. காரணம் ஜோசப் சின்னப்பா என்ற ஆங்கில விரிவுரையாளரும், ஐயம் பெருமாள் கோனார் என்னும் தமிழாசிரியரும் தான். ஜோசப் சின்னப்பா நடத்திய நான்-டீடெய்ல்டு பாடத்தினால் சிறுகதைகளார்வமும், ஐயம் பெருமாளினால் தமிழார்வமும் ரங்கராஜனுக்கு அதிகமாயின.

1953ல் முதன்முறையாக ஒரு சிறுகதை எழுதி அனுப்பினார். அது 'சிவாஜி' என்ற புத்தகத்தில் வெளிவந்தது. "கதை வெளிவந்த போது திருச்சி நகரமே அளம்பி விட்டாற்போல இருந்தது. அந்த வட்டாரத்தில் 'சிவாஜி' இதழின் காப்பிகள் கடகடவென்று விற்றுத் தீர்ந்து விட்டன, எல்லாவற்றையும் நானே வாங்கி விட்டதால்".

அதே ஜோசப் கல்லூரியில் அவருடன் படித்த சக மாணவர், தற்போது இந்தியாவின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். கல்லூரிக்குப் பின்னர், சென்னை குரோம்பேட்டையிலுள்ள MITல்(Madras Institue of Technology), சேர்ந்து எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்தார். அப்போதும் அவரின் பாட்ச்சில் படித்தவர் அப்துல் கலாம். கலாம் அப்போது ஏரொனாட்டிக்ஸ் படித்துக் கொண்டிருந்தார். அப்போதே ரங்கராஜன் Infinite Mathematics பற்றியும் கலாம் ஆகாய விமானங்கள் கட்டுவது பற்றியும் தமிழில் விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதி, இருவரும் பரிசு வாங்கினர்.

sujatha college years

இன்ஜினியரிங் படிப்பிற்கு பிறகு, ஸ்ரீரங்கத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவரை அவர் தந்தை, வேலைக்கு விண்ணப்பிக்குமாறு அனுப்பினார். இந்திய அளவில் இன்ஜியர்களுக்கான தேர்வு எழுதி ஆல் இந்தியா லெவலில் இரண்டாம் ரேங்க் வாங்கினார். இது நடந்தது 50களில். அப்போது ஐ.ஏ.எஸ் போன்றோரு எக்ஸாம் இது.

இந்திய அரசாங்கம் ரங்கராஜனை அள்ளிக் கொண்டு போய் டெல்லியில் விட்டது. முதலில் ஆல் இந்தியா ரேடியோவில் ட்ரைனியாகச் சேர்ந்தார். பிறகு முதல் வேலையாக சிவில் ஏவியேஷன்ஸ் பிரிவில், Air Traffic Controllerஆக சென்னை மீனம்பாக்கத்தில் சேர்ந்தார். இரண்டொரு வருடங்களுக்குப் பிறகு 'கிளாஸ் ஒன் - டெக்னிகல் ஆபிசராக' வேலை மாறி டெல்லி சென்றார்.

mrs.sujatha

பெரிய பெரிய இடங்களில் இருந்து ரங்கராஜனுக்கு வரன்கள் வர, அவரின் அப்பாவோ தன்னுடய ஆபிஸ் நண்பரின் பெண்ணை மணமுடிக்க ஏற்பாடு செய்தார். சுஜாதா எத்திராஜில் பிஎஸ்சி படித்த வேலூர்ப் பெண். ரங்கராஜனுக்கும் - சுஜாதா(!!)விற்கும் கல்யாணம் நடைப்பெற்றது. "அப்போ எனக்கு இருபது வயசு. இவருக்கு இருபத்தேழு. காலேஜ் முடிச்சுட்டு நான் நேரே வந்ததால், எனக்கு உருப்படியா நல்ல ரசம் கூட வைக்கத் தெரியாது. டெல்லியில் குடியிருந்த நம்ம தமிழ் மாமி ஒருத்தர்கிட்டேதான் போய் ஒவ்வொண்ணா சமைக்க கத்துக்கிட்டு வந்தேன். வெடிக்கிற அபாயம் இல்லாத ருக்மணி பிரஷர் குக்கர்லதான் சமையல்!". பிற்காலத்தில் தன் மனைவியின் பெயரான சுஜாதா என்பது பிரபலமாகப் போகிறது என்பது அப்போது ரங்கராஜனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

இந்த சமயத்தில் தான் வேலை நிமித்தமாக அடிக்கடி டூரில் சென்றார். அப்போது பொழுது போக நிறைய படிக்கவும் எழுதும் ஆர்வம் அதிகமானது. தனது நண்பனான் ஸ்ரீனிவாசனின் சுஷ்மா எங்கே ? என்ற ஒரு க்ரைம் கதையை கொஞ்சம் திருத்திக் கொடுக்க, அது குமுதத்தில் வெளியிடப்பட்டது. அதை தனது எழுத்துக்கான அங்கிகாரமாக வைத்து சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார்.

குமுதத்தில் ஏற்கெனவே ஒரு (ரா.கி) ரங்கராஜன் இருந்ததால் ''நீங்க வேற ஏதாவது பேர் வச்சுக்கங்களேன்!...'' என்று சிலர் சொல்ல, ரங்கராஜன், சுஜாதா என்கிற தன் மனைவி பேரில் எழுத ஆரம்பித்தார். தமிழ் இலக்கிய உலகம் தலையை சிலுப்பி கொண்டு எழுந்தது. ரங்கராஜன் காணாமல் போய் சுஜாதா என்கிற மூன்றெழுத்து பிரபலமாக ஆரம்பித்தது.

sujatha's family

ரங்கராஜன் தம்பதிகளுக்கு ஒரு வருடத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்தது. அதற்குப் பிறகு ரங்க பிரசாத், கேஷவ பிரசாத் என்று இரண்டு மகன்கள். கேஷவ் பிரசாத்திற்கு திருமணமாது 'கே' என்கிற ஜப்பானிய பெண்ணுடன். அவர்களுக்கு சித்தார்த் என்று ஒரு மகன், இவருடைய பேரன்.

sujatha bangalore BEL

டெல்லியில் பதினான்கு வருடங்கள் கழித்து, 1970ல் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ்[BEL] நிறுவனத்தில் டெபுடி மானேஜராக வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின் முப்பது வருடங்கள் பெங்களூர் வாசம் தான். பிறகு சிறிது வருடங்களில் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்டு பிரிவில் ஜிஎம் பதவிக்கு உயர்ந்த போது, கடுமையான வேலைகள் காத்துக் கொண்டிருந்தன. Electronic Voting Machine(EVM) என்று இன்றுள்ள வாக்கெடுப்பு இயந்திரத்தை தயாரித்த BELலின் R &D பிரிவின் சீப் ஆக பணியாற்றினார். இந்த வாக்கெடுப்பு மிஷின் தான் இந்தியாவெங்கும் பயன்படுத்தப் படுகிறது.

இங்குதான் மீண்டும் தன் நண்பர் கலாமுடன் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. இருவரும் ஏவுகணை ப்ரோக்கிராமிங் செய்தார்கள். கலாமைப் பற்றி தனது நினைவுகளை பேசியும் எழுதியும் வந்திருக்கிறார் சுஜாதா. அவர்களிருவரும் சேர்ந்து ராக்கெட் இயலை பற்றி திப்பு சுல்தான்லிருந்து தொடங்கி எழுத நினைத்திருந்தனர். இன்னும் எழுத வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இதே நேரத்தில், எழுத்துலகில் ராக் ஸ்டார் அளவிற்கு புகழ் பெற்றார். ஒரே நேரத்தில் ஐந்து புத்தகங்களில் ஆறு தொடர்கதைகளெல்லாம் எழுதினார். "இவர் எழுதினா இவரோட லாண்டிரி பில்லைக் கூட பப்ளிஷ் செய்வாங்க" என்றெல்லாம் பேசினார்கள். கதை, கட்டுரை, நாடகம், ஊடகம் என்று தனது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டு எழுதினார். இவரின் கதைகள் நன்றாக இருந்தாலும் அவைகளை சினிமா படமெடுத்தவர்கள் மாற்றியதால் தோல்வியைத் தழுவின. பாலசந்தருக்கு நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு முதன் முதலில் வசனமெழுதினார்.

1993ல் பிஇஎல்லிலிருந்து ரிடையரான போது முடிவெடுக்கப் பட வேண்டிய விஷயம் ஒன்றிருந்தது. ரிடையர்மெண்டுக்கு பிறகு எங்கு செல்வது? சென்னை செல்ல வேண்டாம், குடிநீர்ப் பிரச்சனை என்று சொன்ன நண்பர்களை தட்டிக் கொடுத்து சென்னையில் ஆழ்வார்ப்பேட்டையில் குடியேறினார்.

இதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்னர் தான் மணிரத்னத்தின் ரோஜா படத்திற்கு வசனமெழுதினார். அந்தப் படம் தமிழ் சினிமாவை நிறையவே மாற்றிப் போட்டது. சென்னைக்கு வந்த பின், கமல் சொல்லி ஷங்கரின் படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பித்தார். சிவாஜி புத்தகத்தில் வந்த சிறுகதை தொடங்கி இன்று ரஜினியின் சிவாஜிப் படத்திற்கு வசனம் வரை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலம் எழுத்துலகில் இருந்து வந்திருக்கிறார். இன்று வரை 100 நாவல்களும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 15 நாடகங்களும், ஏராளமான விஞ்ஞான மற்றும் இதர கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். நண்பர்களுக்காக அவ்வப்போது சினிமாப் பட வசனம் எழுதுகிறார்.

"Writing was never my career, it was my hobby" என்பார். தொடக்கத்திலிருந்து அந்த creative impulseஐ வெளிப்படுத்த பல்வேறு விஷயங்களை செய்திருக்கிறார். படம் வரைந்திருக்கிறார்."நான் எழுத வரலைனா படம் வரைஞ்சுண்டு இருப்பேன்". ஹார்மோனிகா முதற்கொண்டு புல்லாங்குழல், புல்புல்தாரா வரை எல்லாம் வாசித்துப் பழகியிருக்கிறார்.

"ஒரே ஒரு முறை, "மாடில பூனை குட்டி போட்டிருக்கா பாரு" என்று கேட்டாள் பாட்டி.

"பூனை இல்லை பாட்டி...புல்புல்தாரா, நான் வாசிக்கறது".

"நீ மாடிக்கு படிக்கப்போறேன்னு நினைச்சேன்".

"அது வந்து..படிப்பேன்..அப்பப்ப வாசிப்பேன்".

"ஒண்ணு படி...இல்லை மோர்சிங் வாசி".

"மோர்சிங் இல்லை...புல்புல்தாரா"

"பேரைப் பாரு!! உங்கப்பாவுக்கு லெட்டர் போட்டுர்றேன்...எனக்கு கவலையா இருக்கு. இன்னிக்கு புல்புல் வாசிப்ப...நாளைக்கு புகையில போடுவ.. கூத்தாடியாத்தான் வரப்போறேன்னா ஒரு காரியத்தை உருப்படியாப் பண்ணு...உங்கப்பன் காசைக் கரியாக்காதே"

டெல்லிக்குப் போய் ஒரு கிட்டார் வாங்கி தானகவே பழகிக்கொண்டார். மனைவி - "அப்போ மேற்கத்திய இசை உலகில் 'பீட்டில்ஸ்' வந்த பீரியட். இளைஞர்கள், கிதார் கிதார்னு பைத்தியமா இருந்த நேரம்! இவர் ரொம்ப அருமையா கிதார் வாசிப்பார்!... கிதார் மட்டுமல்ல... எல்லா இசைக்கருவிகளையுமே நல்லா வாசிப்பார். இவர் யார்கிட்டேயும் இதுக்காக கத்துகிட்ட மாதிரி தெரியலே... அவரேதான் முயற்சி பண்ணி வாசிச்சார் போல!..."

இதைப் போல் எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பலவகையான false startsக்குப் பின் தன் ஆரம்பக் காதலான எழுத்துக்கு திரும்பி வந்துவிட்டார்.

சுஜாதாவிற்கு என்பதுகளின் நடுவிலும் பிறகு 2002லும் உடல் நிலை பாதித்தது. இரண்டு முறை ஆன்ஜியோவும் ஒரு பைபாஸும் செய்திருக்கிறார்கள். தன் உடல் நிலை காரணமாக அதிகமாக நடமாட முடியாமல் சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் எழுத்தார்வமோ குறைவதாகக் காணோம்.

sujatha wife and kiwi

தற்போது மயிலாப்பூரில் ஒரு ப்ளாட்டில் தனது மனைவி சுஜாதா மற்றும் கிவி என்றொரு செல்ல நாயுடன் வசித்து வருகிறார். இரு மகன்களும் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

அம்பலம்.காம் என்னும் ஒரு வலைதளத்தின் நிர்வாகப் பொறுப்பில் தற்போது பணியாற்றுகிறார். பெண்டாபோர் சந்திரசேகரனுடன் மீடியா ட்ரீம்ஸ் என்னும் ஒரு படத்தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மனைவி - "தினமும் 'அம்பலம் டாட் காம்' ஆபீஸக்கும், பென்டாஃபோரோட 'மீடியா ட்ரீம்ஸ்' ஆபீஸக்கும் காலையில் போய்ட்டு வருவார். மதியம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அஞ்சரைக்கு மேல மெரினாவில் வாக் போயிட்டு வருவார். வந்தப்புறம் எழுதறது, படிக்கிறதுன்னு சமயத்தில் நைட் ஒரு மணி வரைகூட வேலை பார்ப்பார். "

வாராவாரம் சனிக்கிழமையன்று அம்பலம்.காமில் வணக்கம் நண்பர்களே என்று சாட்டுக்கு வந்து விடுவார். தனது வாசகர்களுடன் வாராவாரம் சாட் செய்யும் தமிழ் எழுத்தாளர் இவர் ஒருவர் தான். நீங்கள் கூட writersujatha@hotmail.com என்று மெயிலனுப்பலாம். ரத்தின சுருக்கமாய் எழுதினால் பதில் கண்டிப்பாய் வரும்.

என் பழைய நண்பி ஒருவர் தன் தந்தை இறந்ததை பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது, வந்தது பதில்," Nobody dies; they live in memories and in the genes of their children". How True ?


January 21, 2007

எழுத்தாளனுக்கு சினிமாவில் என்ன வேலை?

jeyamohan.jpg

கொற்றவை எழுதி முடித்த கையோடு எழுத்துக்கு கொஞ்ச காலம் break விட்டதன் காரணத்திற்கு ஜெயமோகன், ஆனந்த விகடன் பேட்டியில் பதில் சொல்கிறார். கொற்றவையின் உருவக நடை மண்டைக்குள் ஏறி இறங்க மறுத்ததாலும், ஒரு பெரிய நாவல் எழுதி முடித்த சலிப்பும் முக்கிய காரணம் என்கிறார்.

நான் கடவுள் படத்தில் வசனம் எழுதுகிற அவர், இயக்குநர் பாலாவுடன் பணிபுரிகிற அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டு கொஞ்சம் hype கொடுக்கிறார். முக்கியமாக மலையாள சினிமாவில் ஒரு நல்ல திரைக்கதை ஆசிரியரா ஆகணும் என்பது நான் தனது சினிமா கனவு என்று தமிழ் மிடியாவில் மலையாள தூது விடுகிறார். அசோகவனம் என்னும் தனது அடுத்த நாவல் தன் அம்மா, பாட்டிகளைப் பற்றியது என்கிறார்.

பேட்டியிலிருந்து -

எழுதித் தள்ளியாச்சு, போதுமேன்னும் ஒரு எண்ணம்; நுட்பமான நாவலை யார் கூர்ந்து படிப்பாங் கன்னு கூடவே ஒரு அவநம்பிக்கை. ஒரு பெரிய நாவலை எழுதினதும் வர்ற நிறைவும் சலிப்பும் ஒரு காரணம். அப்புறம் சில தனிப்பட்ட காரணங்கள். முக்கியமா எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மரணம். அவருடன் ஏற்பட்ட முரண்பாடுகளை என் மனைவி ஏற்றுக்கொள்ள வில்லை. அதனால், இனிமேல் இலக்கிய விவாதமே வேண்டாம் என்று தோன்றியது. எழுதுவதை நான் நிறுத்தினாலும், இன்டர்நெட்டில் என் எதிரிகள் என்னைத் திட்டிக்கிட்டேதான் இருக்காங்க!
..
..
என்னைப் பொறுத்தவரைக்கும் நான் செய்கிற வேலையோட சலிப்புக்கு இந்த சினிமா வேலை பல மடங்கு மேல்! அவ்வளவுதான். என் செயல் களுக்கோ, என் எழுத்துக்கோ நான் யாருக்கும் எந்த உத்தரவாதமும் தர முடியாது. என் எழுத்தைப் பார்த்தால் தெரியும். ‘விஷ்ணுபுரம்’ எழுதின சூட்டோட சம்பந்தமே இல்லாம ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எழுதினேன். அதில் இருந்து ‘ஏழாம் உலகம்’ ரொம்ப தூரம். திடீர்னு பேய்க் கதைகளா எழுதினேன். ‘நிழல் வெளி கதைகள்’னு தொகுப்பா வந்தது. நாளைக்கே நான் ஒரு செக்ஸ் நாவல் எழுதக்கூடும். துப்பறியும் நாவல் எழுதலாம். ‘டிக்ஷனரி’ ஒண்ணு ரெடி பண்ணலாம். தத்துவ நூல் எழுதலாம். என் போக்கு அப்படி!’’