முகப்பு

May 3, 2008

ஹாப்பி பர்த்டே டியூட் !! - சுஜாதா ரங்கராஜன்

வீ மிஸ் யூ.


April 21, 2008

சுஜாதாவின் வீடு

sujatha's house

இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக் கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள், வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என எல்லோரும் அஞ்சலியைப் பதிவு செய்துவிட்டார்கள். பத்திரிகைகளில் கைக்குட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக்கொண்டார்கள்.

குமுதத்தில் ரஞ்சன் எழுதிய சுஜாதாவின் வீடு என்னும் கட்டுரைக்கு, வலைப்பதிவுகளில் எதிர்ப்பு என்று எதோ கிளம்பி இருப்பதை பார்த்து மெளனமாய் சிரிப்புத் தான் வருகிறது.

வலைப்பதிவுகளை பற்றி ஏளனமாய் குமுதம் எழுதிவிட்டது என்பதற்கான முதல் உதாரணமாம் இது. உண்ணாவிரதம் நடத்தாத குறை.

அவர் சொன்னதைப் போல இதற்காகவே காத்திருந்தது போலத் தான், எல்லாமே அவசர அவசரமாய் நடந்து விட்டன. உண்மையாகவே பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் எல்லோரும் சுஜாதாவின் மறைவிற்கு பின் அஞ்சலியை பதிவு செய்து விட்டார்கள்.

அவர் இருக்கும் வரையில், கண்டுகொள்ளாமல் இருந்த எழுத்தாளர்கள், உப-எழுத்தாளர்கள், சக-எழுத்தாளர்கள், டு-பி-எழுத்தாளர்கள் என எல்லோரும் அஞ்சலி செலுத்திய இடம் இணையம் தான். பல so-called எழுத்தாளர்கள், அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு ஆட்டோவில் வீட்டுக்கு போகும் போது, புக்ஸ்டோரில் நிறுத்தி அவரின் இரண்டு மூன்று புத்தகங்களை வாங்கி கொண்டு , வீட்டிற்கு செல்வதற்குள் படித்து முடித்து எழுதிய அஞ்சலி போல, பல அஞ்சலி கட்டுரைகள் ஏகமாய் superfluous. சிலவற்றில் வாரிசு சண்டை தொனியும் தென்பட்டது.

சுஜாதாவைப் பற்றி அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர் ரஞ்சனின் குமுதத்தில் எழுதிய இந்த கட்டுரை, அவர் மறைவின் ஆற்றாமை தாங்காமல் வந்து விழுந்த, உண்மையான ஒரு வாசகனின்/நண்பனின் வரிகளாகவே எனக்கு தோன்றுகின்றன.

இதையெல்லாம் எதிர்த்து தர்ணா ஊர்வலம் கூட்டுபவர்களுக்கு, சுஜாதாவின் பதவிக்காக புத்தகத்தை பரிசளிக்கலாம். முன்னமே சொன்ன மாதிரி, சுஜாதாவின் வரிகளை மீண்டும் மீண்டும் நெட்ரூ பண்ணலாம். இந்தியாவில் அரசியல் கலக்காத விஷயங்கள் இல்லவே இல்லை, குழந்தையின் சிரிப்பைத் தவிர. எங்க...திருப்பி சொல்லுங்க பார்க்கலாம்...

பி.கு - இணையத்தில் எழுதுபவர்கள் மனநோயாளிகள் என்று அரசு பதில்களில் எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா ? என்று அன்பர் ஒருவர் எழுதியிருந்தார். அரசு பதில்களை எல்லாம் ரொம்பவும் சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஒரு glorified கிசுகிசு பத்தி தான் அது.

குமுதத்திற்கு வலைப்பதிவுகளின் மேல் நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். ஆனால் சுஜாதாவின் மறைவைப் பற்றி எழுதும் போது, இந்த சண்டையெல்லாம் இழுப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.மேலும் கர்சீப் போட்டு இடத்தைப் படித்த கமெண்ட் என்னவோ established எழுத்தாளர்களை நோக்கியே இருந்ததாகவும் தோன்றுகிறது.


March 6, 2008

அப்போலோ தினங்கள் - சுஜாதா

apollo_dhinangal_sujatha.jpg

எதோ ராக்கெட் பயணக் கட்டுரைப் போல டைட்டில் இருந்தாலும், ராக்கெட்டில் செல்லும் போது இருப்பதை விட - தேசிகனின் வார்த்தைகளில் சொல்லப் போனால், உடலில் எல்லா இடங்களிலும் பைப்பும் ட்யூப்புகளும் செருகப்பட்டு, சினிமாவில் பார்ப்பது போல், மானிட் டரில் எண்களும், 'பீப்' சத்தங்களும், விதவிதமான கோடுகளும்... - அப்போலோ மருத்துவமனையில் ரொம்பவும் அபாயகரமான உடல்நிலையில் சுஜாதா எழுதிய கடைசிப் பக்கம், இந்த வார ஆனந்த விகடனில்.


apollo_dhinangal_sujatha_b.jpg
[நன்றி - விகடன்]

இதைத் தவிர தேசிகன் எழுதியிருக்கும், சுஜாதாவைப் பற்றி் பலருக்குத் தெரியாத மற்றொரு பக்கம்.

சுஜாதா ரொம்ப சென்ஸிடிவ்வானவர். ஒருமுறை அவருக்கு வந்த கூரியர் தபாலை என்னிடம் கொடுத்து, 'இந்த கூரியர்ல ஏகப்பட்ட ஸ்டேப்ளர் பின் இருக்கு. ஏன் இவ்வளவு பின் அடிக்கிறாங்க, கையை ரொம்பக் குத்துறது' என்றார். இதனாலேயே அவர் வீட்டில் நிறைய பார்சல்கள் பிரிக்கப்படாமல் இருக்கிறதோ என்ற எண்ணம்கூட எனக்கு வந்ததுண்டு.

பெரிய பெரிய விஷயங்களை எழுதினாலும், சுஜாதாவுக்கு சின்னச் சின்ன ஆசைகள் நிறைய உண்டு. கடற்கரையில் வாக்கிங் போகும்போது, கிளிமூக்கு மாங்காய், வேகவைத்த கடலை வாங்கிச் சாப்பிடுவார். 'அது உடம்புக்கு ஆகாது' என்று முக்கால் பாகத்தை டிரைவரிடம் கொடுத்துவிடுவார். பம்பரம் வாங்கிக் கொண்டுவரச் சொல்லி விட்டுப் பார்ப்பதும், பீச்சில் குழந்தைகள் விளையாடுவதை ஆர்வத்துடன் பார்ப்பதுமாக இருப்பார். அவர்களிடம், 'உன் பேர் என்ன?' என்று ஆர்வமாகக் கேட்பார். வித்தியாசமான பெயராக இருந்தால் ஞாபகம் வைத்துக் கொள்வார்.

சமீபத்தில் ஒரு முறை 'உன்னுடன் பைக்கில் வருகிறேன்' என்று அதிர்ச்சிக்குள்ளாக்கினார். என் பின்னால் உட்கார்ந்து கொண்டு, தன் வீடு வரை அழைத்துப் போகச் சொன்னார். 'இப்ப என்ன ஸ்பீட்?' என்று விசாரித்துவிட்டு, 'இன்னும் கொஞ்சம் வேகமா போ, பார்க்கலாம்!' என்று பைக் சவாரியை அனுபவித்தார்.

ஒரு பக்கம், சுஜாதாவின் எழுத்துக்களில் உள்ள உணர்ச்சிகள் அவரைத் தாண்டி சென்றதில்லை என்னும் விமர்சனங்கள், மற்றொரு பக்கம் இந்தக் கட்டுரை. தேசிகனிடம் போன வாரம் பேசிய போது, “ ஒரு கையே போனா மாதிரி இருக்கு” என்று அவர் சொன்னது, இப்போது தெளிவாக புரிகிறது. சுஜாதாவின் உயிர் பிரியும் நொடியில் அவரின் அருகில் உட்கார்ந்து ஆண்டாள் பாசுரமான, சிற்றஞ் சிறுகாலே படித்ததாய் சொல்கிறார்.

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!

திருப்பாவையில் ரொம்பவே விசேஷமானது இந்த 29வது பாசுரம். இதன் கடைசி மூன்று வரிகளில் தான் திருப்பாவையின் மொத்த சாராம்சமும் ஒளிந்துள்ளது.

தேசிகனின் இந்த கட்டுரையைத் தவிர, நா முத்துக்குமார், தன்னை சுஜாதா கண்டெடுத்த விதத்தை விளக்கும் ஒரு குறிப்பும், சுஜாதாவைப் பற்றி அவரது மனைவி சுஜாதாவின் பேட்டியும் வந்துள்ளது.

எந்த நேரமும் ஏதாவது படிச்சுண்டு, பார்த்துண்டே இருப்பார். படுக்கை முழுக்க புஸ்தகங்களா இருக்கும். அதுக்கு இடையில இடம் பண்ணிண்டு படுத்துக்குவார். நடுராத்திரியில நாலு புஸ்தகங்களை மாத்தி மாத்திப் படிச்சுண்டு இருப்பார். ராத்திரி ரெண்டு மணிக்கு எந்திரிச்சு கிரிக்கெட் பார்த்துண்டு இருப்பார். 'உடம்பைப் பார்த்துக்காம இந்த அப்பா ஏன் இப்படிப் பண்றார்?'னு பசங்க கோச்சுக்குவாங்க. 'இப்படில்லாம் இல்லேன்னாதான் அவருக்கு உடம்பு படுத்தும்'னு சொல்வேன்.

இதுக்கு முன்ன ஹாஸ்பிடலுக்குப் போனப்பல்லாம் கொஞ்ச நேரம் இருப்பார், வந்துருவார். அப்புறம் அதைப் பத்தியே ஒரு கதை எழுதிடுவார். ஆனா, இப்ப அவர் இறந்த கதையை யார் எழுதுறது..?

We miss you !!


February 28, 2008

மாதா, பிதா, சுஜாதா

கண்ணீர் அஞ்சலி என்றெல்லாம் எழுதினால், சுஜாதா என்கிற ரியலிஸ்ட், தமிழனின் உணர்ச்சிவசப்படும் குணம் என்பார். என்ன...எதை எழுதுவது, எதை விடுவது என்று ஒன்றும் புரியாத நிலையில், இப்போதைக்கு எதுவுமே எழுதாமல் இருப்பது சரி என்றே தோன்றுகிறது.

கமல் அவரது அஞ்சலியில் சொன்னது போல், பிச்சைக்காரர்கள் தர்மம் கொடுக்கும் இடத்துக்குத் தான் மீண்டும் மீண்டும் செல்வார்கள். அதைப் போல் அவர் எழுத எழுத புரிந்து கொண்டதை, விட்டு விட முடியும் என்று தோன்றவில்லை. அதனால்,

விண் நாயகன் என்றொரு மாதமிருமுறை இதழில் அவர் எழுதிய தொடர் கட்டுரை ஒன்றை படிப்பதற்காகவே வாங்கி, அசோக் நகர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் உள்ள கடையில் உட்கார்ந்து படித்து விட்டு, தூக்கிப் போட்டு விடுவேன். அந்த கட்டுரை முடியும் தருவாயில், ஒரு ஸ்திரமான பதிலைச் சொல்லாமல் முடித்தார். ரொம்ப நாட்களாய் விடைத் தேடுகிறேன்.

இப்பொழுதாவது சொல்லுவார் என்று எதிர்ப்பார்த்து - "சுஜாதா, கடவுள் இருக்கிறாரா ?"


February 27, 2008

எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் மறைவு

இங்கு தான் அனைத்துமே
போவதென்ப தெவ்விடம்
உமது நல்ல சீடருள்
அவர்கள் புனையும் கதைகளுள்
பல்கி வாழ வாழ்த்துவேன்
அந்தம் அறு ரங்கராஜனை !!

சுஜாதாலஜியில் - எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி.


February 5, 2008

சுஜாதா - ஹெட்போன் ஹெட்லைன்

தேசிகனின் வலைப்பதிவில் எழுத்தாளர் சுஜாதாவின் உடல்நிலை பற்றி வந்திருந்த செய்தி, மனதை வருத்தியது. சுஜாதா உடல்நிலை தேறிவருகிறார் என்பது தற்போது நல்ல செய்தி.

அந்த பதிவில், புன்னகைக்க வைத்த பத்தி -

"சார் கிறுஸ்துமஸ் முடிஞ்சு, பொங்கல் முடிஞ்சு இன்னிக்கி குடியரசு தினம்"

"ஓ. ஆமாம். உள்ளே இருந்ததால ஒண்ணும் தெரியலை. முதல்ல வெளியே வரனும் தேசிகன். இங்கே போர் அடிக்குது. இப்ப இந்த வாக்மென் தான் என் நண்பன், பாட்டு கேட்கிறேன். காலையில் பக்திப் பாட்டெல்லாம் வைக்கிறாங்க. ஆனா இந்த ஹெட் ஃபோன் தான் உறுத்துது. அந்த கேபிள் லென்த் பொறலை. காட்லெஸ் ஹெட் போன் எங்க கிடைக்கும் ?"

"இங்க சென்னைலயே கிடைக்கும், கிடைச்சா வாங்கி அனுப்பறேன்"

"காலையில பேப்பர் படிக்கிறேன், ஆனால் நான் ஆஸ்பத்திரிக்கு வந்த போது என்ன ஹெட்லைன்ஸ் இருந்ததோ அதே தான் இப்ப இருக்கு, ஒண்ணும் மாறலை" என்றார். நான் புன்னகை செய்தேன்.

இன்னுமொரு நூற்றாண்டிரும் !!


October 7, 2007

எவ்ளோ படிப்பது ?

big_read.jpg

சமீபத்தில் வெளியான ஒரு அஸோஸியெட்டட் பிரஸ் வாக்கெடுப்பு சொல்வதைப் பார்த்தால், அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர், போன வருடம் ஒரு புத்தகம் கூட படிக்கவில்லை. நம்மூர் பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் போல, அங்கும் அதிகம் படிப்பது பெண்கள் தான். அடுத்ததாக நிறைய புத்தகம் படிப்பவர்கள், முதியவர்கள்.

பைபிள் மற்றும் ஆன்மீக புத்தகங்களை விடுத்துப் பார்த்தால் அதிகம் படிக்கப்படுபவை பாப்புலர் பிக்-ஷன், வரலாறு, பயோகிராபி மற்றும் மர்மக் கதைகள். இவை தவிர மில்ஸ் அன் பூன் போன்ற ரொமாண்டிக் கதைகளும் அதிகம் படிக்கப்பட்டன.

புத்தகம் படிக்கவில்லை என்ற சொன்னவர்களை தவிர்த்துப் பார்த்தால், ஓவ்வொரு அமெரிக்கரும் சராசரியாக படித்திருந்தது தலா ஏழு புத்தகங்கள். இந்த விகிதாசாரம் குறைந்து கொண்டு வருவது தான் கவலையளிக்கிறது என்கிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன் National Endowment for Arts என்னும் கழகம் Reading at Risk என்னும் ஒரு ரிப்போர்ட்டை பதிப்பித்தது. 2002ல் 57% சதவிகிதம் அமெரிக்கர்கள தான் ஏதாவது ஒரு புத்தகமாவது படித்திருந்தார்கள். இது பத்து வருடங்களில் 4% குறைந்திருந்தது. இதற்கு காரணமாக கூறப்பட்டது கேபிள் டீவி மற்றும் இண்டர்நெட்.

அமெரிக்கர்களின் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவே, The Big Read என்னும் புரோக்கிராமை இந்த வருடம் ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் கண்டிப்பாய் படிக்கப்பட வேண்டிய புத்தகங்களை பட்டியலிட்டு, மாதத்திற்கு ஒரு புத்தகம் என்று ஹைலைட் செய்கிறார்கள். ஒவ்வொரு மாதமும், அந்த மாதத்திற்கான புத்தகத்தை பற்றி ஏராளமான் விவாதங்களும், விமர்சனங்களும் அவரவர் வீட்டருகில் உள்ள அரசு நூலகங்களில் நடைபெறுகின்றன.

கடந்த ஒரு மாதமாக நடைபெறும் இந்த Big Read ஒரு வெற்றி என்றே தோன்றுகிறது. லைப்ரரிகள் களை கட்டுகின்றன. ஒரு நகரத்தில் உள்ள எல்லோரும் ஒரே புத்தகத்தை படிக்கிறார்கள், அதை பற்றி சனிக்கிழமைகளில் நூலகங்த்தில், பர்கர் சாப்பிட்டுக் கொண்டே கதைக்கிறார்கள். இனிமேல் படிப்பாரில்லை என்று பழுப்படைந்து, அடுக்குகளின் ஓரங்களில் இருந்த இந்த லைப்ரரி புத்தகங்களின் எல்லா பக்கங்களும் திருப்பப்படுகின்றன, படிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட புனர்ஜென்மம் தான்.

இந்த பிக் ரீட் பரிந்துரைக்கும் புத்தகங்களில் எனக்கும் பிடித்தவை ஐந்து. ஏற்கனவே இவைகளை படித்திருந்தாலும் மீண்டும் படிக்கப் போகிறேன். பிடித்த ஆர்டரில், ரே ப்ராட்பரியின் டிஸ்டோபிய கதை, பாரன்ஹீட் 451. பிறகொரு நேரத்தில் ரேயின் இந்த சயின்ஸ் பிக்-ஷனைப் பற்றி எழுத எண்ணம். மற்றவை, ஸ்காட் பிட்ஸ்ஜிரல்டு எழுதிய The Great Gatsby, ஹெமிங்வேயின் Farewell to the Arms, ஹார்பர் லீயின் To Kill a Mockingbird மற்றும் அமெரிக்காவை புரட்டிப் போட்டு புலிட்சர் வாங்கிய ஸ்டெயின்பெக்கின் Grapes of Wrath.

மேலே சொன்ன - அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர் போன வருடம் ஒரு புத்தகம் கூட படிக்கவில்லை என்ற கணக்கை கொஞ்சம் மாற்றிப் போடலாம். அமெரிக்கர்களில் நான்கில் மூவர் சென்ற வருடம் ஒரு புத்தகமாவது படித்திருந்தார்கள்.

இதை வைத்து நமது தமிழ் கூறும் நல்லுலகத்தின் நிலைமையை கணக்கிடலாம். ஏனென்றால் இதற்கெல்லாம் நம்மூரில் கணக்கெடுப்பதே இல்லை. அப்படியே எடுத்தாலும், "சார் நீங்க கடேசியா இன்னா பொஸ்தகம் படிச்சீங்க ?" என்று சர்ச் பார்க் பஸ் ஸ்டாண்டில் யாரோ ஒரு நிருபர் காமிரா சகிதமாக கேள்வி கேட்க, நம் ஆசாமி வியர்வை வழிய பஸ் வருகிறதா என்று பார்த்துக் கொண்டோ, அல்லது MU@3CB5:30(யோசியுங்கள். விடை கடைசியில்) என்று அப்ரிவேஷனில் SMS அனுப்பிக்கொண்டோ, "அது வந்து சார், I think I read the book last week with Asin hugging teddy bear in the cover" என்று ஏதாவது சொல்லிவிட்டு எஸ்கேப்புவார்.

சீரியஸாக யோசித்தால் உண்மை புரியலாம். அதாவது தமிழ் நாட்டில் பத்திரிக்கைகள் அளவு புத்தகங்கள் விற்பதில்லை. லட்சக்கணக்கில் விற்கும் பத்திரிக்கைகளுக்கு நடுவில் ஆயிரம் காப்பி விற்றாலே, "My writing career has taken off" என்று காலரை தூக்கிவிடும் எழுத்தாளர்கள் வந்துவிட்டார்கள். அதனால் எழுத்தாளர்களும் AGS ஆபிஸிலோ, அறநிலையத் துறையிலோ மூக்குக் கண்ணாடியை தூக்கி விட்டபடியே கம்யூட்டர் தட்டி கணக்கெழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம், சரியான புத்தகங்கள் வரவில்லை என்று பப்ளிக்கும்(so called public), மற்றொரு பக்கம், நான் புத்தகம் எழுதினால் வாங்க ஐநூறு பேராவது இருக்கிறார்கள் என்று ஜெயமோகன் போன்ற சீரியஸாக எழுதும் இலக்கியவாதிகளும் இயங்குகிற ஊர் தமிழ்நாடு தான்.

ஆறுகோடி பேர் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளும் நம்மூரில், ஐநூறு பேர் தான் முதல் காப்பி வாங்க போகிறார்கள் என்றால், ஒரு எழுத்தாளன் எப்படி எழுதுவான் என்று தெரியவில்லை. அப்படியே எழுதினாலும், எழுத்தினால் கிடைக்கும் சம்பளம் கரண்ட் பில் கட்டகூட சரியாகவில்லை என்றால், working below your labor worth என்று யோசித்து அதிகமாய் பணம் தரும் தனது கம்புயூட்டர் புரோகிராமிங் செய்ய போவது ஒண்ணும் விந்தையல்ல. தமிழ் சினிமா போல கடைசியாய் வேற ஒண்ணும் தெரியாதவர்கள் வந்து சேரக்கூடிய நிலைமையில் உள்ளது தமிழ் புத்தக உலகம். "ஒண்ணு ராவூத்தர் ஹோட்டல்ல ரவுண்டா தோசை ஊத்து இல்லாக்கட்டி ராமர் பாலத்தை பத்தி ஒரு 200 பக்கம் எளுது" என்று அப்பாக்கள் சொல்லும் காலம் கண்ணுக்கு தெரிகிறது.

"இவ்ளோ நேரம் உன்னிய பேச வுட்டோமே, நீ இப்ப என்ன சொல்ல வர" என்று கேட்பவர்களுக்கு, படிக்கலாம். தமிழோ ஆங்கிலமோ, வெண்பாவோ How to win friendsஓ, ரமணி சந்திரனோ எண்டமூரியோ, சுஜாதாவோ சொக்கனோ, புத்தகம் படிக்கலாம்.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் அரை மணிநேரம், மாகஸின்களை தவிர்த்து புத்தகம் என்று நாவலோ நான்-பி்க்-ஷனோ படியுங்கள். டாக்டருக்காவும் டாட்டருக்காகவும் வெயிட் செய்யும் போது கையில் கொண்டு போன புத்தகத்தை படியுங்கள். எழுதும் நேரத்தை தவிர, பா.ராகவன் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் படிப்பதாய் சொன்னார். அவர் எழுத்தாளர். நம் போன்றவர்களுக்கு அரை மணியோ ஒரு மணியோ போதும்.

ஜோடி நம்பர் 1னை ஒரு முறை பார்த்தால் போதும். ரிபீட் டெலிகாஸ்ட் செய்கிறார்கள் என்று நாளொன்றுக்கு நாலுமுறை பார்த்தால் டி.டியையும் மோனிஷாவையும் பிடித்துப் போகும். அப்புறம் கொஞ்சம் பைத்தியமும் பிடிக்கும். அதை விடுத்து நிலா நிழல் படியுங்கள். சரியான ஆரம்பம். ஏற்கனவே இவையெல்லாம் படித்திருப்பவராயின், ஏசுவின் தோழர்களோ, பதினெட்டாவது அட்சக்கோடோ படிக்கலாம்.

எதைப் படிப்பது, எங்கே வாங்குவது என்று கேட்டால், இருக்கவே இருக்கிறது நமது நியூ புக்லேண்ட்ஸ் அல்லது எனி இந்தியன் அல்லது லாண்ட்மார்க்.

இதற்கெல்லாம் மேலே நீங்கள் போன வருடம் புத்தக சந்தையில் வாங்கிய எத்தனை புத்தகங்களை படிக்க எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டுக் கொள்ளலாம். ஆசையாய் வாங்கிப் போட்ட பிரம்மோபதேசமும், விசாரணை கமிஷனும், நிலா பார்த்தலும், அம்மா வந்தாளும் எங்கே என்று அப்பார்ட்மெண்டை தூசு தட்டலாம். ராமர் பாலத்தின் காமெடி செய்திகளை பார்ப்பதை விடுத்து செய்யப்படும் இவை எல்லாமே ஒரு நல்ல த்ரில்லர் புத்தகத்தின் ஆரம்பம் போலத்தான். ஷோ சுவீட் !!

விடை : MU@C3B5:30 - Meet you at Chennai City Center by 5:30.


May 6, 2007

அறிமுக ப்ரேரரக்

சுஜாதா ஒர் எளிய அறிமுகத்தை, அறிமுகப்படுத்த மட்டுமே முடிந்தது. தினமும் சுஜாதாவை படிப்பதால், போகிற போக்கில் எழுதி விடலாம் என்று நினைத்தால், கல். அந்த குட்டி பயோகிராபிக்கு, பதினைந்து புத்தகங்களை வைத்து கொண்டு நோட்ஸெடுத்து, connecting the dots செய்வதற்குள் ஆறு மணிநேரமாகி விட்டது.

வார இறுதியில், பல மாதங்களுக்கு பிறகு சியாட்டலில் சூரியன் தென்பட்டதால், புத்தகத்தையும் காமிராவையும் தூக்கிக் கொண்டு பீச்சுக்கு சென்று விட்டேன். நேரம் கிடைக்கும் போது அந்த தலைப்பில் எழுத நினைத்ததை முடிக்க எண்ணம். இப்போதைக்கு இதற்கு, சன் டீவி விஜயசாரதி ரேஞ்சுக்கு ஒரு, ப்ரேரரக்.


May 3, 2007

ஹாப்பி பர்த்டே டியூட் !! - சுஜாதா ரங்கராஜன்

வாழ்வின் சில கடின நேரங்களையும், பல சாதாரண வருடங்களையும் சலிப்பில்லாமல் ஓடச்செய்த ஒரு கலக்கல் எழுத்தாளருக்கு 73ம் பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்னுமொரு நூற்றாண்டிரும் !!

இந்த பிரபஞ்சத்தின் ஆரம்ப கணத்தில் இருந்து தொப்பையில் பஞ்சு வருவது வரைக்கும் எல்லாவற்றையும் எழுதும் எழுத்தாளர்கள் குறைவு. அந்த நோக்கில் பார்த்தால், இப்படி ஒரு prolific எழுத்தாளர், சுவாரசியமாகவும் எழுதுவது ஒரு கடின காம்போ. தாங்க் யூ வாத்யாரே !!

சுஜாதாவின் இந்த நேர்காணல் கடந்த ஆண்டு விஜய் டீவியில் ஓலிபரப்பானது. என்ன தான் டீவியில் இதை பார்த்தாலும் மீண்டும் பார்க்கும் ஆர்வம் இருந்ததால், நண்பர் ஒரு டிவோவில் ரெக்கார்ட் செய்ததை அனுப்பி வைத்தார். அதிலிருந்து இதை சில டஜன் முறைகளாவது பார்த்திருப்பேன். ரொம்பவும் பிடித்துப் போய், காரில் போட்டுக் கேட்டு, மணிரத்னம் படம் போல எல்லா டயலாக்கும் அத்துப்படி. யான் பெற்ற இன்பம்....விஜய் டீவி அன்பர்கள் கோவிக்காமல் இருந்தால் சரி.


April 28, 2007

சுஜாதா ரங்கராஜன் - வாழ்க்கை குறிப்பு

writer sujatha rangarajan

"When I was little, my ambition was to grow up to be a book. Not a writer. People can be killed like ants. Writers are not hard to kill either. But not books. However systematically you try to destroy them, there is always a chance that a copy will survive and continue to enjoy shelf-life in some corner of an out-of-the-way library somewhere, in Reykjavik, Valladolid, or Vancouver."

-Amos Oz

S.ரங்கராஜன் பிறந்தது சென்னைத் திருவல்லிக்கேணியில் உள்ள தெப்பக் குளத்தின் தெற்குத் தெரு வீதியில். மே 3, 1935 அன்று. வைஷ்ணவர். அப்பா சீனிவாச ராகவன் மின்சாரவாரியம் வாரியமாவதற்கு முன்னால் இருந்து வேலை செய்து கொண்டிருந்தார். அம்மா கண்ணம்மா, ஒரு பணக்காரக் குடும்பத்தில் இருந்து வந்தவர். "சரியாக எழுபது ஆண்டுகளுக்கு முன், வீட்டுக் காரியங்கள் எல்லாம் முடித்துவிட்டு, வலியெடுத்து, எந்தவித உதவியும் இல்லாமல், அப்பா மருத்துவச்சியை அழைத்து வருவதற்க்குள், என்னைப் பெற்றெடுத்த என் அம்மா கண்ணம்மா".

ரங்கராஜனின் அண்ணன் திரு கிருஷ்ணமாச்சாரி ஒரு டாக்டர், தம்பி ராஜகோபாலன் தொலைபேசி இலாகாவில் இன்ஜினியர். தங்கை விஜி. "ராத்திரி என்னவோ ஆச்சு... ரெண்டு தடவை வாந்தியெடுத்தா. கார்தாலை பிராணன் போய்ட்டது' என்று பாட்டி அழுதாள். எனக்கு அப்போது பதினொரு வயசு. என் தங்கை விஜிக்கு மூன்று வயது. குழந்தை என்பதால் கையிலேயே தூக்கிப் படித்துறைக்கு கொண்டுசென்று கொள்ளிடக்கரையில் புதைத்தது ஞாபகம் இருக்கிறது. முதன்முறையாக ஆற்றாமை, சோகம் க்ரீப் என் நடைமுறையை பாதித்தது."

sujatha triplicane house - pic : vikatan

ரங்கராஜன் பிறந்த அந்த வீடு திருவல்லிக்கேணியில் 70 வருடம் கழித்தும் இடிபடாமல் இருக்கிறது.

பிறந்தது சென்னையில் என்றாலும் வளர்ந்தது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். தாத்தா குவளக்குடி சிங்கமையங்கார். அப்பாவின் உத்யோகம் காரணமாக அவர் அடிக்கடி இடம் மாறுவதால், முதல் பதினேழு வருடங்கள் கோதை அம்மாள் என்கிற ருக்குமணி அம்மாள் பாட்டியுடன் வளர்ந்தார். "பாட்டி என்னை எத்தனைத் தூரம் காப்பாற்றி இருக்கிறாள். ஒரு பெரிய சொத்துக்கு சுவிகாரம் கொடுப்பதை கடுமையாக எதிர்த்துத் தடுத்தியிருக்கிறாள். அந்த சுவிகாரம் நடந்திருந்தால் நான் மகேந்திரமங்கலத்திலோ குவளக்குடியிலோ ஒரு பண்ணையாராக வெள்ளிச் சொம்பும், பன்னீர் புகையிலையும் பத்தமடைப் பாயும், இஸ்பெட் ஆட்டமுமாக வளர்ந்திருப்பேன். எழுத்தாளனாகியிருப்பேனா...சந்தேகம்."

sujatha teenager

ஸ்ரீரங்கத்தில் The Highschool என்னும் ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியில் படிப்பு. ரங்கராஜன் படிப்பில் சுட்டியாக இருந்தும் பிரபலமாக எல்லாம் இல்லை. பள்ளிப் படிப்பிற்கு பின் திருச்சிக்கு ஜாகை மாறி, இண்டர்மீடியட் என்று இரண்டு வருடமும், பின் பிஎஸ்சி physics இரண்டு வருடமும் படித்தது புனித சூசையப்பர் காலேஜில். இந்த ஜோசப் காலேஜில் தான் ரங்கராஜனுக்கு ஒரு வாழ்க்கைத் திருப்பம் காத்திருந்தது.

என்ன தான், ஸ்ரீரங்கத்தில் மற்றோரு ரங்கராஜனுடன்(இப்போது கவிஞர் வாலி) சேர்ந்து கையெழுத்துப் பிரதி நடத்திக் கொண்டிருந்தாலும், எழுத்தார்வம் அதிகமானது கல்லூரியில் தான். அப்போது கூட படிக்கத்தான் ஆசை. காரணம் ஜோசப் சின்னப்பா என்ற ஆங்கில விரிவுரையாளரும், ஐயம் பெருமாள் கோனார் என்னும் தமிழாசிரியரும் தான். ஜோசப் சின்னப்பா நடத்திய நான்-டீடெய்ல்டு பாடத்தினால் சிறுகதைகளார்வமும், ஐயம் பெருமாளினால் தமிழார்வமும் ரங்கராஜனுக்கு அதிகமாயின.

1953ல் முதன்முறையாக ஒரு சிறுகதை எழுதி அனுப்பினார். அது 'சிவாஜி' என்ற புத்தகத்தில் வெளிவந்தது. "கதை வெளிவந்த போது திருச்சி நகரமே அளம்பி விட்டாற்போல இருந்தது. அந்த வட்டாரத்தில் 'சிவாஜி' இதழின் காப்பிகள் கடகடவென்று விற்றுத் தீர்ந்து விட்டன, எல்லாவற்றையும் நானே வாங்கி விட்டதால்".

அதே ஜோசப் கல்லூரியில் அவருடன் படித்த சக மாணவர், தற்போது இந்தியாவின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். கல்லூரிக்குப் பின்னர், சென்னை குரோம்பேட்டையிலுள்ள MITல்(Madras Institue of Technology), சேர்ந்து எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்தார். அப்போதும் அவரின் பாட்ச்சில் படித்தவர் அப்துல் கலாம். கலாம் அப்போது ஏரொனாட்டிக்ஸ் படித்துக் கொண்டிருந்தார். அப்போதே ரங்கராஜன் Infinite Mathematics பற்றியும் கலாம் ஆகாய விமானங்கள் கட்டுவது பற்றியும் தமிழில் விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதி, இருவரும் பரிசு வாங்கினர்.

sujatha college years

இன்ஜினியரிங் படிப்பிற்கு பிறகு, ஸ்ரீரங்கத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவரை அவர் தந்தை, வேலைக்கு விண்ணப்பிக்குமாறு அனுப்பினார். இந்திய அளவில் இன்ஜியர்களுக்கான தேர்வு எழுதி ஆல் இந்தியா லெவலில் இரண்டாம் ரேங்க் வாங்கினார். இது நடந்தது 50களில். அப்போது ஐ.ஏ.எஸ் போன்றோரு எக்ஸாம் இது.

இந்திய அரசாங்கம் ரங்கராஜனை அள்ளிக் கொண்டு போய் டெல்லியில் விட்டது. முதலில் ஆல் இந்தியா ரேடியோவில் ட்ரைனியாகச் சேர்ந்தார். பிறகு முதல் வேலையாக சிவில் ஏவியேஷன்ஸ் பிரிவில், Air Traffic Controllerஆக சென்னை மீனம்பாக்கத்தில் சேர்ந்தார். இரண்டொரு வருடங்களுக்குப் பிறகு 'கிளாஸ் ஒன் - டெக்னிகல் ஆபிசராக' வேலை மாறி டெல்லி சென்றார்.

mrs.sujatha

பெரிய பெரிய இடங்களில் இருந்து ரங்கராஜனுக்கு வரன்கள் வர, அவரின் அப்பாவோ தன்னுடய ஆபிஸ் நண்பரின் பெண்ணை மணமுடிக்க ஏற்பாடு செய்தார். சுஜாதா எத்திராஜில் பிஎஸ்சி படித்த வேலூர்ப் பெண். ரங்கராஜனுக்கும் - சுஜாதா(!!)விற்கும் கல்யாணம் நடைப்பெற்றது. "அப்போ எனக்கு இருபது வயசு. இவருக்கு இருபத்தேழு. காலேஜ் முடிச்சுட்டு நான் நேரே வந்ததால், எனக்கு உருப்படியா நல்ல ரசம் கூட வைக்கத் தெரியாது. டெல்லியில் குடியிருந்த நம்ம தமிழ் மாமி ஒருத்தர்கிட்டேதான் போய் ஒவ்வொண்ணா சமைக்க கத்துக்கிட்டு வந்தேன். வெடிக்கிற அபாயம் இல்லாத ருக்மணி பிரஷர் குக்கர்லதான் சமையல்!". பிற்காலத்தில் தன் மனைவியின் பெயரான சுஜாதா என்பது பிரபலமாகப் போகிறது என்பது அப்போது ரங்கராஜனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

இந்த சமயத்தில் தான் வேலை நிமித்தமாக அடிக்கடி டூரில் சென்றார். அப்போது பொழுது போக நிறைய படிக்கவும் எழுதும் ஆர்வம் அதிகமானது. தனது நண்பனான் ஸ்ரீனிவாசனின் சுஷ்மா எங்கே ? என்ற ஒரு க்ரைம் கதையை கொஞ்சம் திருத்திக் கொடுக்க, அது குமுதத்தில் வெளியிடப்பட்டது. அதை தனது எழுத்துக்கான அங்கிகாரமாக வைத்து சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார்.

குமுதத்தில் ஏற்கெனவே ஒரு (ரா.கி) ரங்கராஜன் இருந்ததால் ''நீங்க வேற ஏதாவது பேர் வச்சுக்கங்களேன்!...'' என்று சிலர் சொல்ல, ரங்கராஜன், சுஜாதா என்கிற தன் மனைவி பேரில் எழுத ஆரம்பித்தார். தமிழ் இலக்கிய உலகம் தலையை சிலுப்பி கொண்டு எழுந்தது. ரங்கராஜன் காணாமல் போய் சுஜாதா என்கிற மூன்றெழுத்து பிரபலமாக ஆரம்பித்தது.

sujatha's family

ரங்கராஜன் தம்பதிகளுக்கு ஒரு வருடத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்தது. அதற்குப் பிறகு ரங்க பிரசாத், கேஷவ பிரசாத் என்று இரண்டு மகன்கள். கேஷவ் பிரசாத்திற்கு திருமணமாது 'கே' என்கிற ஜப்பானிய பெண்ணுடன். அவர்களுக்கு சித்தார்த் என்று ஒரு மகன், இவருடைய பேரன்.

sujatha bangalore BEL

டெல்லியில் பதினான்கு வருடங்கள் கழித்து, 1970ல் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ்[BEL] நிறுவனத்தில் டெபுடி மானேஜராக வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின் முப்பது வருடங்கள் பெங்களூர் வாசம் தான். பிறகு சிறிது வருடங்களில் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்டு பிரிவில் ஜிஎம் பதவிக்கு உயர்ந்த போது, கடுமையான வேலைகள் காத்துக் கொண்டிருந்தன. Electronic Voting Machine(EVM) என்று இன்றுள்ள வாக்கெடுப்பு இயந்திரத்தை தயாரித்த BELலின் R &D பிரிவின் சீப் ஆக பணியாற்றினார். இந்த வாக்கெடுப்பு மிஷின் தான் இந்தியாவெங்கும் பயன்படுத்தப் படுகிறது.

இங்குதான் மீண்டும் தன் நண்பர் கலாமுடன் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. இருவரும் ஏவுகணை ப்ரோக்கிராமிங் செய்தார்கள். கலாமைப் பற்றி தனது நினைவுகளை பேசியும் எழுதியும் வந்திருக்கிறார் சுஜாதா. அவர்களிருவரும் சேர்ந்து ராக்கெட் இயலை பற்றி திப்பு சுல்தான்லிருந்து தொடங்கி எழுத நினைத்திருந்தனர். இன்னும் எழுத வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இதே நேரத்தில், எழுத்துலகில் ராக் ஸ்டார் அளவிற்கு புகழ் பெற்றார். ஒரே நேரத்தில் ஐந்து புத்தகங்களில் ஆறு தொடர்கதைகளெல்லாம் எழுதினார். "இவர் எழுதினா இவரோட லாண்டிரி பில்லைக் கூட பப்ளிஷ் செய்வாங்க" என்றெல்லாம் பேசினார்கள். கதை, கட்டுரை, நாடகம், ஊடகம் என்று தனது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டு எழுதினார். இவரின் கதைகள் நன்றாக இருந்தாலும் அவைகளை சினிமா படமெடுத்தவர்கள் மாற்றியதால் தோல்வியைத் தழுவின. பாலசந்தருக்கு நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு முதன் முதலில் வசனமெழுதினார்.

1993ல் பிஇஎல்லிலிருந்து ரிடையரான போது முடிவெடுக்கப் பட வேண்டிய விஷயம் ஒன்றிருந்தது. ரிடையர்மெண்டுக்கு பிறகு எங்கு செல்வது? சென்னை செல்ல வேண்டாம், குடிநீர்ப் பிரச்சனை என்று சொன்ன நண்பர்களை தட்டிக் கொடுத்து சென்னையில் ஆழ்வார்ப்பேட்டையில் குடியேறினார்.

இதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்னர் தான் மணிரத்னத்தின் ரோஜா படத்திற்கு வசனமெழுதினார். அந்தப் படம் தமிழ் சினிமாவை நிறையவே மாற்றிப் போட்டது. சென்னைக்கு வந்த பின், கமல் சொல்லி ஷங்கரின் படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பித்தார். சிவாஜி புத்தகத்தில் வந்த சிறுகதை தொடங்கி இன்று ரஜினியின் சிவாஜிப் படத்திற்கு வசனம் வரை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலம் எழுத்துலகில் இருந்து வந்திருக்கிறார். இன்று வரை 100 நாவல்களும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 15 நாடகங்களும், ஏராளமான விஞ்ஞான மற்றும் இதர கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். நண்பர்களுக்காக அவ்வப்போது சினிமாப் பட வசனம் எழுதுகிறார்.

"Writing was never my career, it was my hobby" என்பார். தொடக்கத்திலிருந்து அந்த creative impulseஐ வெளிப்படுத்த பல்வேறு விஷயங்களை செய்திருக்கிறார். படம் வரைந்திருக்கிறார்."நான் எழுத வரலைனா படம் வரைஞ்சுண்டு இருப்பேன்". ஹார்மோனிகா முதற்கொண்டு புல்லாங்குழல், புல்புல்தாரா வரை எல்லாம் வாசித்துப் பழகியிருக்கிறார்.

"ஒரே ஒரு முறை, "மாடில பூனை குட்டி போட்டிருக்கா பாரு" என்று கேட்டாள் பாட்டி.

"பூனை இல்லை பாட்டி...புல்புல்தாரா, நான் வாசிக்கறது".

"நீ மாடிக்கு படிக்கப்போறேன்னு நினைச்சேன்".

"அது வந்து..படிப்பேன்..அப்பப்ப வாசிப்பேன்".

"ஒண்ணு படி...இல்லை மோர்சிங் வாசி".

"மோர்சிங் இல்லை...புல்புல்தாரா"

"பேரைப் பாரு!! உங்கப்பாவுக்கு லெட்டர் போட்டுர்றேன்...எனக்கு கவலையா இருக்கு. இன்னிக்கு புல்புல் வாசிப்ப...நாளைக்கு புகையில போடுவ.. கூத்தாடியாத்தான் வரப்போறேன்னா ஒரு காரியத்தை உருப்படியாப் பண்ணு...உங்கப்பன் காசைக் கரியாக்காதே"

டெல்லிக்குப் போய் ஒரு கிட்டார் வாங்கி தானகவே பழகிக்கொண்டார். மனைவி - "அப்போ மேற்கத்திய இசை உலகில் 'பீட்டில்ஸ்' வந்த பீரியட். இளைஞர்கள், கிதார் கிதார்னு பைத்தியமா இருந்த நேரம்! இவர் ரொம்ப அருமையா கிதார் வாசிப்பார்!... கிதார் மட்டுமல்ல... எல்லா இசைக்கருவிகளையுமே நல்லா வாசிப்பார். இவர் யார்கிட்டேயும் இதுக்காக கத்துகிட்ட மாதிரி தெரியலே... அவரேதான் முயற்சி பண்ணி வாசிச்சார் போல!..."

இதைப் போல் எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பலவகையான false startsக்குப் பின் தன் ஆரம்பக் காதலான எழுத்துக்கு திரும்பி வந்துவிட்டார்.

சுஜாதாவிற்கு என்பதுகளின் நடுவிலும் பிறகு 2002லும் உடல் நிலை பாதித்தது. இரண்டு முறை ஆன்ஜியோவும் ஒரு பைபாஸும் செய்திருக்கிறார்கள். தன் உடல் நிலை காரணமாக அதிகமாக நடமாட முடியாமல் சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் எழுத்தார்வமோ குறைவதாகக் காணோம்.

sujatha wife and kiwi

தற்போது மயிலாப்பூரில் ஒரு ப்ளாட்டில் தனது மனைவி சுஜாதா மற்றும் கிவி என்றொரு செல்ல நாயுடன் வசித்து வருகிறார். இரு மகன்களும் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

அம்பலம்.காம் என்னும் ஒரு வலைதளத்தின் நிர்வாகப் பொறுப்பில் தற்போது பணியாற்றுகிறார். பெண்டாபோர் சந்திரசேகரனுடன் மீடியா ட்ரீம்ஸ் என்னும் ஒரு படத்தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மனைவி - "தினமும் 'அம்பலம் டாட் காம்' ஆபீஸக்கும், பென்டாஃபோரோட 'மீடியா ட்ரீம்ஸ்' ஆபீஸக்கும் காலையில் போய்ட்டு வருவார். மதியம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அஞ்சரைக்கு மேல மெரினாவில் வாக் போயிட்டு வருவார். வந்தப்புறம் எழுதறது, படிக்கிறதுன்னு சமயத்தில் நைட் ஒரு மணி வரைகூட வேலை பார்ப்பார். "

வாராவாரம் சனிக்கிழமையன்று அம்பலம்.காமில் வணக்கம் நண்பர்களே என்று சாட்டுக்கு வந்து விடுவார். தனது வாசகர்களுடன் வாராவாரம் சாட் செய்யும் தமிழ் எழுத்தாளர் இவர் ஒருவர் தான். நீங்கள் கூட writersujatha@hotmail.com என்று மெயிலனுப்பலாம். ரத்தின சுருக்கமாய் எழுதினால் பதில் கண்டிப்பாய் வரும்.

என் பழைய நண்பி ஒருவர் தன் தந்தை இறந்ததை பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது, வந்தது பதில்," Nobody dies; they live in memories and in the genes of their children". How True ?


April 26, 2007

சுஜாதா - ஒர் எளிய அறிமுகம்

writer sujatha - oru eliya arimugam 1

70களிலும் 80களிலும் ஒரு ராக் ஸ்டார் அந்தஸ்து பெற்றிருந்த எழுத்தாளர் சுஜாதாவைப் நம்மைபோல் இந்தத் தலைமுறை ஆட்களும் படித்து ரசிப்பதற்கு அவரின் எழுத்துத் திறமை மட்டுமே காரணம்.

தன்னுடைய சுயசரிதை என்பது ஒரு மற்றவர்களுக்கு ஒரு வேஸ்ட் ஆப் டைம் என்று சுஜாதாவே எழுதியிருந்தாலும், அவரின் பயோகிராபி பெரிய அளவில் எழுதப்பட்டு வருகிறது என்பது இந்த வருடத்தின் மிகப்பெரிய லிட்டரரி காஸ்ஸிப்.

அவரைப் பற்றி, எழுத்தைப் பற்றி ஒரு வாரத்திற்கு தினம் பத்து வரி எழுதுவதாக எண்ணம். பார்க்கலாம். பி.ஹெச்.டி வாங்கும் நோக்கமில்லாததால், இந்த பத்தி அவரை பற்றிய ஒரு எளிய அறிமுகமே.


April 4, 2007

சிவாஜி - பாடல்கள்

rajini rahman sivaji music

Pedestrian Fantasy எனப்படும் பொது ஜன மக்களுக்கான, அவர்களின் கனவுகளுக்கு வடிகாலாக படமெடுப்பது ஷங்கரின் வழக்கம். இதுவும் சுஜாதா போலத்தான். எப்படி சுஜாதா தனக்கு பிடித்த கதைகள் வாரப் பத்திரிக்கைகளில் வருவதில்லை என்கிறாரோ, ஆனால் அதே சுஜாதாவின் குற்றக் கதைகள் வாரப் பத்திரிக்கைகளில் வருகிறதோ அதே போலத்தான் இதுவும். பொது ஜன ரசனைக்காக எழுதப்படும் தனது தொடர்கதைகள் சாகா இலக்கியமல்ல என்பதில் தெளிவாக இருக்கிறார் சுஜாதா. 23சி பஸ்சை பிடிக்க, எட்டாக மடிக்கப்பட்ட வாரப் பத்திரிக்கையை அக்குளில் வைத்துக் கொண்டு, வியர்வை வழிய ஓடும் பொது ஜனம் தான், ஷங்கரின் பார்வையாளன். அவரின் நல்ல சினிமா ஆசையை, தன் நண்பர்களின் 'நல்ல' படங்களை தயாரிப்பதின் மூலம் தீர்த்துக் கொள்கிறார்.

இந்த pedestrian fantasyயை கொஞ்சமேனும் ஓதுக்கி வைத்து, உண்மையை சொல்லப் போய், பாய்ஸ் படமெடுத்த ஷங்கரையும் சுஜாதாவையும், அந்த பொதுஜனம், 23சி பஸ்சை கோட்டை விட்டாலும் பரவாயில்லை என்று நின்று துப்பி விட்டு போனார்கள். ஆனந்த விகடனின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விமர்சன வார்த்தை, சீ !!.

இனிமேலும் உண்மை வழியும் சினிமாவை ஷங்கர் எடுப்பதரிது. இன்று பாய்ஸ் படமெடுத்தால் BPO companyகளின் சாக்கடையில் காண்டம் குப்பைகளை காட்ட வேண்டும். காட்டினால் பாய்ஸ் கைத்தட்டுவார்கள். அவர்களின் பெற்றோர் அதிர்ந்து போய், இந்த ஆளுங்க சரியான crook என்பார்கள். Hypocrites !!

இப்படி சில வருடங்கள் முன்னே சென்று தான், சிவாஜியின் பாடல்களையும் எடை போட வேண்டியதாக இருக்கிறது. இந்தப் படத்திற்காக ரஹ்மான் வளைந்து கொடுக்கவில்லை, அந்த இந்த ரிதம் ப்ரோக்கிராமிங் சூப்பர் என்று போலி பண்டிதத்தனம் காட்டுபவர்கள் சொல்வதை அப்படியா என்று கேட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆவது நலம். இது ரஜினி படமல்ல. இது ரஹ்மான் படமல்ல. இது ஷங்கர் படமல்ல. இது இவர்கள் படம்.

இப்படியாக மூன்று பெரிய ஸ்டார்கள் இணையும் போது வரும் உரசல்களும் நெரிசல்களும் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தும் பாடல்கள் எந்த ஒரு biasசிலும் இருக்காதது சந்தோஷமே. ரஜினியின் intro பாடலும், ஷங்கரின் முத்திரையான குறுங்கதை சொல்லும்(ஓட்டகத்த - ஜெண்டில்மேன், முக்காலா - காதலன், மாயா மச்சிந்தரா -இந்தியன், அன்பே - ஜீன்ஸ்) பாடலும், ரஹ்மானின் ஒரு offbeat பாடலும் சேர்ந்திருப்பது தான் சிவாஜி ஆல்பத்தின் மிகப் பெரிய பலம்.

SPB செம எனர்ஜியுடன் பாடும் சூரியனும் சந்திரனும் தான் கேட்டவுடன் முதலில் பிடித்தது. வழக்கமான ரஜினி பாடலைப் போல் இருந்தாலும், பாட்டின் சற்றே அதிகமான டெம்போவும், SPBயின் அருமையான குரலும், 7G ரெயின்போ காலனிக்கு அடுத்ததாக மிக அழகாக எழுதப்பட்ட நா. முத்துக்குமாரின் வார்த்தைகளும் [ஏலே ஆடு மாடு மேலே உள்ள பாசம் வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்கும்....], இதன் வெற்றி நாயகர்கள். பாடலை கேட்டால், யாரும் சொல்லாமலேயே, பாடலை பாடிக்கொண்டே ரஜினி ஓடுவது நடப்பதுமாக காமிராவை சுற்றி வருவது கண்முன்னே வரவில்லையென்றால், நீங்கள் தமிழனல்ல !! balelaka என்ற வார்த்தை இப்போது தமிழ் அகராதியில் சேர்க்கப்படுகிறது. cool.

வழக்கம் போல ரஹ்மானின் elecric guitar வாசிக்கப்படுகிறது. வழக்கம் போல போஸ்டரில் ரஜினி acoustic guitarயுடன் நிற்கிறார். only rajini...possible என்று சொல்லத் தோன்றுகிறது. தீம் சாங். முதல்வனின் தீம் போல புள்ளரிக்காத குறையை வார்த்தை வரிகள் தீர்த்து வைக்கின்றன. வாடா வாடா வாங்கிக்கடா பாடலை எழுதியது ஷங்கரோ என்று தோன்றுகிறது. பேட்டை ராப் எழுதியது அவர் தான். இந்தியன் படத்தின் போது, கமலுக்கு எல்லா உடைகளூம் அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்றே அந்த அக்கடா இக்கடா பாட்டை வைத்தேன் என்றார் ஷங்கர். அதே போல் ஒரு சாதா ரசிகனுக்கும் போய்ச் சேரும் வரிகள்(சிங்கம் கூட ஜுஜுபிதாண்டா, சிவாஜி வாயிலே ஜிலேபிதாண்டா). முக்கிய காட்சிகளில் இந்த தீம் சாங் பின்ணணியாக வருமேயாயின், வார்த்தைகளின் cheapness மறைந்து போகும், டெம்போ காட்சிகளை மிகைப்படுத்தும். டிரைலரும் இந்த இசையில் தான் வரும் என்று எதிர்பார்ப்பு. கலக்கல் சூப்பர் ஸ்டார் தீம்.

ஒரு கூடை கெட்ட தமிழ். அசத்தல் ரஹ்மான் ஸ்டைல் offbeat பாடல். படங்களை பார்த்தால், டெலிபோன் மணிபோல் பாடல் போல இருக்கிறது. அரிதான இதன் மெதுவான டெம்போவில் தான் இதன் வித்தியாசம். பிளேசி பாடுவது காட்டுக் கத்தல். உதித் நாராயணின் பருவாயில்லைக்கு அடுத்தபடியான தமிழ்க் கொலை. வரவேற்கிறோம். ஒரு கூடை சன்லைட் என்னும் இந்த பாடல் ஒரு டூயட். அடடா நீ ஐந்தடி மிட்டாய், நடந்தாய் நீ பறக்கிற தட்டாய், ஐஸ் நதியை நரம்புக்குள் விட்டாய் என்று கவிஞர் பா விஜயின், ரஜினி துதி. ரசித்த பாடல்.

படத்தில் நல்ல பாடல்களை ரஹ்மான் சுட்டுக் கொள்கிறார் என்று குற்றம் சாட்ட மற்றோரு உதாரணம். சில்லென்று ஒரு காதல் படத்தில், நியுயார்க் நகரம் முதல் உதாரணம். அதிரடிக்காரன் மச்சான் என்ற பாடலில் ரஹ்மானின் குரல் மாற்றும் கலை தெரிகிறது. வாலிக்கு இதை மாதிரி western gliteraati பற்றி லாண்டரி லிஸ்ட் எழுத பிடிக்கும்(மடோனா பாடலா நீ - காதலா காதலா, நான் காதல் கம்ப்யூட்டர் நீதான சாப்ட்வேர் - காதல் தேசம்). இதிலும் ரோஜர் மூர், எடி மர்பி, ஜேம்ஸ் பாண்ட் எல்லாம் வருகிறார்கள். பில்லா ரங்கா பாஷா தான் இவன் பிஸ்டல் பேசும் பேஷா தான் வரி சரித்திரத்துக்காக எழுதப்பட்டவை.

உதித் நாராயண்/சின்மயி பாடும் சஹானா சாரலை விட விஜய் யேசுதாஸ்/கோமதி ஸ்ரீ, பாடும் pathos versionனான சஹானா பூக்கள் மீண்டும் கேட்க வைக்கிறது. முக்கிய காரணம் விஜயின் குரல் மற்றும் பாஷனாகிப் போன திருப்வெம்பாவை இடைச்சொருகல் தான். இதில் ரஜினி காற்றடித்து தலை கலைய, இடுப்பில் கை வைத்து கடலை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. சிகரெட் பிரேக்.

ஆம்பல் லாம்பல் என்கிற வாஜி வாஜிப் பாடல் ஒரு டிபிகல் ஐட்டம் நம்பர். ரஜினி வேறு ராஜா வேஷத்தில் வருகிறார் போல. மாயா மச்சிந்த்ரா, முதல்வனே முதல்வனே, அன்பே அன்பே வரிசையில் மற்றுமொரு ஷங்கர்/ரஹ்மான்/வைரமுத்து பாடல். பல்லியான கமல், பாம்பான வடிவெலுவுக்கு பிறகு டைனோசரான ரஜினியாக இருந்தால் ஷங்கருக்கு மன்னிப்பில்லை. முரண்பாட்டு மூட்டை என்னும் வார்த்தைகளில் வைரமுத்து நெடி. ஹரிஹரன் குரல் டுமீல்.

ஆல்பம் சூப்பர். ஷங்கருக்குத் தான் முதல் வெற்றி. லாட்டரி டிக்கெட் பறக்கப் போகிறது. தலை கலையப் போவது நிஜம். மீண்டும்....ரெடியாகுங்கள்.


March 25, 2007

மெக்ஸிகோ சலவைக்காரி ?

Sujatha Vasant Mexico Salavaikari

குமுதம் 360 பார்வை தொடரில், இந்த வாரம் சுஜாதா மெக்ஸிகோ சலவைக்காரியின் ஜோக்கை, குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பியிடம் சொன்னதை பற்றி சொல்கிறார். இப்போதும் எந்த ஒரு பெரிய பத்திரிக்கைகளிலும் அதை விலாவரியாக எழுத முடியாது என்கிறார். யாராவது புதிய தமிழ் வானம் அல்லது புதிய தமிழ் பூமி என்ற பத்திரிக்கைகளில் சுஜாதாவை எழுத அழைக்கலாம். ஜோக் வெளிவந்தால் சரி.

கமலின் அப்பு குள்ளமான ட்ரிக்குக்கு அடுத்தபடியான ஒரு தமிழ் நாட்டு கேள்வி, மெக்ஸிகோ சலவைக்காரி தான். கமல் கூட, அப்புவைப் பற்றி ஏதோ டீவி தொடர் எடுக்கப்போவதாக சொல்கிறார். சுஜாதா...ம்ஹும். பிடி கொடுக்கிறபாடில்லை. தெரிந்தவர்கள் மெயில் எழுதி அனுப்பலாம். உண்மை என்றும் நிருபிக்க முடிந்தால், சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் மூன்றாம் பாகம் பரிசு.

பார்வை 360யிலிருந்து -

மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக் என்று நீங்கள் அடிக்கடி குறிப்பிடுகிறீர்களே அது என்ன ஜோக்?’ என்று திடீர் என்று கேட்டார்.

நான் அதிர்ந்துபோய், ‘அது கொஞ்சம் ஒரு மாதிரியானது. உங்களிடம் போய் சொல்வதா என்று தயக்கமாக இருக்கிறது’ என்றேன்.

‘சொல்லுங்க.’

‘சொல்லிவிடுவேன்’ என்று பயமுறுத்தினேன்.

‘சொல்லிப் பாருங்க.’

சொன்னேன்.

சற்று நேரம் உறைந்துபோய் மௌனமாக இருந்தார். அதன் பின் கண்ணில் நீர் வரச் சிரித்தார். அடுத்த வாரம் அரசு பதில்களில் அதைக் குறிப்பிட்டு, அது தனக்குத் தெரிந்துவிட்டது என்று கோடி காட்டி எழுதியிருந்தார்.

இப்போதுகூட எனக்கு அந்தச் சம்பவத்தை யோசித்தால், சங்கடமாக இருக்கிறது. அவ்வளவு நல்ல மனிதர், பக்திமான். அவரிடம் போய் அந்த கச்சடா ஜோக்கைச் சொன்னோமே என்று. ஆனால், அவர் அதற்காக என்னை எந்த விதத்திலும் மரியாதைக் குறைவாகக் கருதவில்லை. மெ.ச. ஜோக் முதலில் ப்ளேபாய் பத்திரிகையில் வந்தது. அதை ஒருமுறை வசந்த் சொல்ல ஆரம்பித்து, கணேஷ் தடுத்து செக்ஸ் அதிகம் இருப்பதால் அதை சொல்லாமலேயே விட்டுவிட்டான். அதன் பின் அதைப் பற்றிய உபகதைகள் பல தோன்றி தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் அதைப் பாதுகாத்து வருகிறார்கள். இன்றும் அதை மரியாதைப்பட்ட பத்திரிகைகளில் பிரசுரிக்க முடியாது.


March 19, 2007

முன் கதை சுருக்கம்

balakumaran [pic:andhimazhai.com]
"ஏய்...எழுந்திரு" யாரோ நெற்றியயை பின்னுக்குத் தள்ளி எழுப்பினார்கள். ஸ்டேஷனில் இப்போது கும்பல் அதிகமாக இருந்தது.

"இனிமே பீச்சுப்பக்கம் வர மாட்டேன்னு எழுதிக் கொடுத்திட்டுப் போ."

"யார்ப்பா அது ?"

"என்னமோ தியானம் பண்ண பீச்சுக்கு வந்தானாம். இட்டந்துட்டாங்க. தடி மாடு மாதிரி இருக்கே. என்னத்துக்கு இது உனக்கு... அதெல்லாம் கிழவனுங்க வேலை...ம்... எழுது இதுல."

"இங்கிலீஷிலயா, தமிழிலியா..." லொட்டென்று தலையில் தட்டினார்கள்.

"பெரிய மயிறு இவரு. தமிழ்ல எழுதுறா" திராவிட முன்னேற்றக் கழகம் நகரசபை பிடித்துக் கொண்ட நேரம் அது. தமிழுக்கு மரியாதை வரத்துவங்கிய காலம்.

1988ல் ஒரு பத்திரிகையில், முன் கதை சுருக்கம் என்ற பெயரில் எழுதிய பாலகுமாரனின் சுயசரிதை தொடர். அவர் எழுத்தாளனாகிய கதை. அல்லது நிஜம். நான்கு வருட இடைவெளியில் இரண்டு முறை படித்ததால் இதை பற்றிய கருத்துக்கள் நிறைய.

மனிதர் கசக்க கசக்க உண்மை பேசுகிறார். இல்லாவிட்டால் வெறும் பரபரப்புக்காக இந்த புத்தகத்தில் உள்ள சில உண்மைகளை சொல்ல வேண்டியதில்லை. கவிதை எழுதினால் கை தட்டுவார்கள் என்ற நினைப்பில் தான் ஆரம்பித்ததாகவும் அந்த ego சிறிது நாளில் அடங்கி உரைநடை பக்கம் வந்ததை மிக விளக்கமாக மிகைபடுத்தாமல் சொல்வது தான் பிடிக்கிறது.

தெருவில் போகும்போது எல்லோரும் என்னை 'கவிஞரே' என்று கூப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். வெறும் எஸ்.எஸ்.எல்.சி டைப்பிஸ்ட் என்பதற்கு மேல் ஒரு அடையாளம். பாலகுமாரன் பி.ஏ இல்லை. எம்.ஏ இல்லை. படிப்பு வரவில்லை. அதனாலென்ன...அவன் கவிஞன். மற்ற ஜனங்களை விட இரண்டங்குலம் உயரமாக நடப்பவன்.

என் ஈகோ என்னை இழுத்துப் போயிற்று. பாராட்டுக்கும் புகழ் போதைக்கும் மனம் தவித்தது.

மதம் தரும் பக்தி இலக்கியமே வாழ்க்கை வளப்படுத்தும் என்று தனக்கு சொல்லப்பட்டது முதலில் தெரியவில்லை என்றும் பின்னர் சென்னை திமுக நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் தான், மணிப்பிரவாள கதா கலாட்சேபங்கள் தாண்டி பழந்தமிழ் இலக்கியம் புலப்பட்டது என்கிறார்.

இந்தப் எழுத்தாளனாகிய கதையில் மிக முக்கியமாக எனக்கு பட்டவை இரண்டு. ஓன்று, பாலகுமாரனின் இலக்கிய வட்ட பரிச்சயம். இரண்டு, சுஜாதா-சாவியின் வாசக விழாவில், சுப்பிரமணிய ராஜு என்பவரை பார்த்து பின்பு அவர் உயிர்த் தோழனாக மாறியது.

மிக முக்கியமான தமிழ் இலக்கியவாதிகளுடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தும், அவர்களிடம் இருந்து பல literary nuancesசை கற்றுக் கொண்டும், தனக்கென ஒரு பாணி அமைத்து, அதிலேயே எழுதுவது, பாலகுமாரனின் பலம். என்ன தான் இலக்கியவாதிகள், எழுத்தை விற்கிறார் என்றெல்லாம் கிண்டலடித்தாலும், பொதுஜன எழுத்து ஒரு போங்கு என்று எழுதினாலும், தனக்கு தெரிந்ததை எழுதுவதாக அவர்களிடமே சொல்லியதும் பலம்.

சுப்பிரமணிய ராஜுவின் நட்பை பற்றி அவர் இறந்த பின் இந்த புத்தகத்தில் எழுதியதால் கொஞ்சம் எதிர்ப்பு வந்ததாக தெரிகிறது. இரண்டு பேரும் சேர்ந்து நீலாயதாட்சி என்னும் பெண்ணுடன் ஊர் சுற்றியதாய் எழுதி இருந்ததால் இருக்கலாம்.

ஆனால் பாலகுமாரனும், ராஜுவும் கதை பற்றி பால பாடம் படித்த கதை தான் மனங் கவர்கிறது. இப்படி போகிறது -

'வாசகர் வட்டம்' என்கிற அமைப்பு நல்ல புத்தகங்கள் வெளியிட்டது. அதில் சுஜாதாவின் நெடுங்கதை ஒன்று இருந்தது. படிக்கப் படிக்கப் பிரமிப்பு தட்டியது.

'யம்மா... எப்படி எழுதறார் இந்த ஆள்... இப்படி எழுத எனக்கு என்று வரும், என்ற ஏக்கம் எனக்கு வந்தது.

சுஜாதாவின் அடுத்த நெடுங்கதை....நான் நூறு முறையாவது அதை படித்திருப்பேன்..... அச்சில் வந்த அந்தக் கதையை நாள் வெள்ளைத்தாள் எடுத்து அப்படியே காப்பி செய்தேன். 'இது நான் எழுதின கதை' என்று பக்கத்து போர்ஷன் மாமியிடம் காப்பி செய்த பேப்பரை காட்டினேன். " ஏ க்ளாஸ் கதைடா, உனக்கு ரொம்ப நன்னா எழுத வர்றது".
....

சிறுகதை பிடிபட்டது போலவும், பிடிபடாதது போலவும் இருந்தது.

மறுபடி எழுத்தாளர் சுஜாதா சென்னை வந்திருக்கிறார் என்கிற செய்தி கிடைத்தது.
...
ஒன்பது மணிக்கு மறுபடி போய் வீட்டுக் கதவை தட்டினோம்.

"வாங்கய்யா" உற்சாகமாய் ரங்கராஜன்(சுஜாதா) வெளியே வந்தார்.

"சாப்பிட்டீங்களா?"

"ஆச்சு சார்" பொய் சொன்னோம். உடனே இலக்கியம் பேசத் துவங்கினோம். பார் பார் பட்டணம் பார் என்று சுஜாதா தூக்கிப் போட, ஒவ்வொரு தகவலும், ஒவ்வொரு இலக்கிய செய்தியும் வியப்பாக இருந்தது.

நான் கேட்டேன் : " எத்தனை ட்ரை பண்ணாலும் சிறுகதை எழுத வரலை...சிக்கறது... ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதறது?"

எக்மோரில் டாக்டர் நாயர் பாலத்துக்கு அடிவாரம். நான்கு முனை சந்து. அப்போது ஒரு புல்வெளி ரவுண்டானா அங்கே இருந்தது. வாகன ஓட்டம் வெகுவாய் குறைந்திருந்த பத்துமணி இரவு.

ரங்கராஜன் என்கிற சுஜாதா உற்று மெர்க்குரி விளக்கில் என் முகம் பார்த்துவிட்டு தொண்டையை செருமிக் கொண்டார்.

"கதை எழுதறது கஷ்டம் இல்லையா, சுலபம். ஒரு பத்து நிமிஷம் நான் சொல்லித் தரேன். புடிச்சிக்க !"
....
ஆனால் ரங்கராஜன் பத்தாம் வகுப்பு பையனுக்கு பாடம் நடத்துவது போல் எழுதும் கலை இது என்று எளிமையாக சொல்லித் தந்தார்.

ஒரு விழாவில் " எனக்கு எழுதச் சொல்லித் தந்த சுஜாதா அவர்களே" என்று நான் குறிப்பிட... சுஜாதா பேசும் போது " நான் நிறைய பேருக்கு சொல்லிக் கொடுத்தேன். அதுல பாலகுமாரனுக்கு மட்டும் உடனே புரிஞ்சுது. காரணம் ஆர்வம்."

மணிரத்ன பட க்ளைமாக்ஸ் போல பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள் நாவலுக்கு ராஜா அண்ணாமலை செட்டியார் விருது கிடப்பதோடு புத்தகம் முடிகிறது. சில வருடங்கள் மற்றோரு முன் கதை சுருக்கம் வரும் என்கிறார். வருகிறது. குமுதம் பக்தியில் காதலாய் கனிந்து என்கிற தொடரில் தன் ஆன்மிக வாசத்தை பற்றியும், தன் உடல்நிலை கவலைக்கிடமான போது நிகழ்ந்தவை பற்றியும் எழுதுகிறார்.

அவரே முயன்றாலும் மீண்டும் ஒரு புத்தகம் இத்தனை மணியாய் எழுத முடியாது. Aspiring Writers கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். தமிழ் எழுத்தாளர்களின் சுய சரிதைகளிலேயே உ.வே.சா வின் என் சரித்திரம் தான் பெஸ்ட் என்கிறார்கள். அதை படித்ததில்லை. ஆனால் மனம் திறந்து உண்மையாய் எழுதிய சுயசரிதைகளில், பாலகுமாரனுக்கு முக்கிய இடம் கட்டாயம்.


February 18, 2007

பார்வை 360 - சுஜாதா

குமுதத்தில் இந்த வாரம் முதல் சுஜாதா எழுதும் ஒரு 360 டிகிரி தொடர். ஆரம்பதிலேயே தனது புத்தகங்களிலிருந்து தமிழ் சினிமாவாக மாறியவற்றை கலாய்கிறார்.

1965 என்று ஞாபகம். ‘சசி காத்திருக்கிறாள்’ என்ற கதை வெளிவந்தபோது, வாசகர்களிடமிருந்து அதைப் பாராட்டி நிறையக் கடிதங்கள் வந்தன. ஆசிரியர் எஸ்.ஏ.பி. அதற்கான செக் அனுப்பும் அச்சிட்ட படிவத்தின் ஓரத்தில் ‘அடிக்கடி எழுதுங்கள்’ என்று பொடிப்பொடியாக ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார். அந்தச் சிறு குறிப்பே எனக்கு உற்சாகமளிக்கப் போதுமானதாக இருந்தது. விளைவு சுஜாதா.

அன்று எஸ்.ஏ.பி. அந்தக் குறிப்பை அனுப்பியிராவிட்டால், இன்று இந்தக் கட்டுரைவரை வந்திருக்கமாட்டேன்.

சினிமாவாக மாறிய என் முதல் கதை ‘காயத்ரி’ 1977_ல் வெளிவந்தது. தினமணி கதிரில் வந்த கதையை பஞ்சு அருணாசலம் திரைப்படமாக எடுக்க விரும்பினார். பஞ்சு ஒரு நல்ல வாசகர். ரஜினிகாந்த் என்ற புதிய நடிகரும் ஸ்ரீதேவியும் நடிப்பதாகச் சொன்னார். படம் முடிந்து முதல் பிரதியை தனியாக ரஜினிகாந்துடன் உட்கார்ந்துகொண்டு ப்ரொஜெக்ஷன் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது, எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம்/ அது, ஒரு வகையில் ‘ப்ரியா’ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னைத் தயார்படுத்தியது. இளம் ரஜினிகாந்த் அடர்த்தியான தலைமுடியுடன் வசீகரமான தோற்றத்த