முகப்பு

July 3, 2008

இன்னபிற

சதா எழுதிக்கொண்டிருப்பதே ஒரு நல்ல பழக்கம் தான், எழுத்தாளனுக்கு. ஒரு கணினிப் பொறியாளனுக்கும் அதே போலத் தான், கணினியில் வேலைப் பார்ப்பது. நிற்க. கணினித் தொழில் செய்து கொண்டே எழுத நினைப்பவர்கள், சற்றே யோசிக்கவும். ஒரு பத்து நாள் எழுதாமல் இருந்து விட்டால், எழுத நினைத்தாலும் முடிவதில்லை. கணினி ப்ரோக்கிராமும் சரி, கன்னித் தமிழும் சரி, ஒரே மாதிரி தான். பயிற்சி பயிற்சி.

ஒரு மாதமாவது அந்தப் பக்கம் போய் விட்டு வரலாம் என்பதற்குள், இந்தப் பக்கம் காய்ந்து விட்டது. இருக்கியா இல்லயா என்று சில விசாரிப்புகள் வேறு. இந்த மாதிரி இரண்டுப் பக்கமும் மாற்றி மாற்றி எழுதினால், இழந்த சக்தி வைத்தியரிடம் போக வேண்டியது வரலாம். ஆகவே கூடிய சீக்கிரம் எதாவது ஒன்றை(அதாவது அந்தப் பக்கத்தை) மூடி விட்டு, ஆர்குட், பேஸ்புக், டுவிட்டர் தொந்தரவுகளை எல்லாம் சற்று நிறுத்தி, பூதக் கண்ணாடியில் சூரியன் போல, எனர்ஜியை ஒரு முகமாய் குவிக்க எண்ணம்.

~

கமலின் தசாவதாரத்தை பற்றி எதாவது எழுதியே ஆக வேண்டும். என் பக்கத்து வீட்டு செல்ல நாய், ஸ்பார்கி கூட dogspeak என்னும் வலைப்பதிவில் எழுதிவிட்டதாக குலைத்தது. எல்லாவற்றிலும் தசாவதாரம் தான். வலைப்பதிவுகள், அவ்வப்போது இயங்கும் டுவிட்டர் என்று வலையுலகம் இந்தப் படத்திற்கு பெரிய விழா எடுத்தாகிவிட்டது. வலைத்தளங்களில் மேலும் எழுத பாண்ட்விட்த் இல்லாததால், தமிழர்கள் உள்ளங்கையில் எல்லாம் விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சக இந்தி இந்தியர்கள், கொஞ்சம் வெளிரிப் போய், தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கமலஹாசன் என்கிற நடிகரை தமிழ்த் திரையுலகம் எப்போதோ கண்டு கொண்டு விட்டது. கமல் என்கிற எழுத்தாளனை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் தெரிகிறது. தசாவதாரத்தில் கமல் என்கிற எழுத்தாளனின் குழப்பங்களும், புத்திசாலித்தனமும் வெவ்வேறு கலவைகளில் தெரிந்தன. ஹேராமிலும் அப்படித் தான். இருந்தாலும் தமிழின் மிகச்சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என்று இப்பொழுது கமலைச் சொல்லலாம். விருமாண்டியிலும் தசாவதாரத்திலும் கமல் காட்டியிருக்கக் கூடிய தேர்ச்சி உலகத் தரத்திற்கு இல்லை என்றாலும், மிகச் சிறந்த வளர்ச்சி தான். அதெப்படி என்று சண்டைக்கு வர நினைப்பவர்கள், Babelலின் டீவிடியை பார்க்கவும். மேலும் இந்த மாதிரி அரை டஜன் சினிமாக்களை எடுத்துக் காட்ட நான் ரெடி.

"கமல் என்கிற கலைஞன் ஒரு கதாபாத்திரத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறும் கடின உழைப்பை பார்க்கிறேன்" என்று தசாவதாரம் பற்றியும் கேயாஸ் தியரி பற்றியும் நிறைய எழுதிய சுஜாதா, கடைசியாக படத்தை பார்க்காமல் போய் விட்டதை பற்றி கமல் கண்டிப்பாய் வருத்தப்பட்டிருப்பார். நாமும் தான்.

கமல் வைத்த 2006 புத்தாண்டுப் பார்ட்டிக்கு பிறகு, கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா எழுதிய வரிகள் இவை.

புத்தாண்டை வரவேற்க கமல்ஹாசனின் பார்ட்டிக்கு டைரக்டர் ஷங்கருடனும், என் மகனுடனும் போயிருந்தேன். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பெரிசாகக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின் ‘ஹு இஸ் ஹூ?’ போல இருந்த பார்ட்டிக்கு, வந்தவர்களைவிட வராதவர்களைச் சுலபமாக எண்ண முடிந்தது. ஸ்ருதி கமல்ஹாசன்... அமெரிக்கா எல்.ஏ-&யில் படித்துக்கொண்டு இருப்பவர், லீவுக்கு வந்திருந்தார். இளமையும் அழகும் இனிமையும் கலந்து வரவேற்க, ‘வேட்டையாடு விளையாடு’, ‘புதுப்பேட்டை’ படப் பாடல்களுடன் டி.ஜே. உபயத்தில் திடும்திடும் ஓசையும் உச்ச டெசிபல்களில் ஒலிக்க, கமல் க்ளோஸ் கோட்டில் ஸ்மார்ட்டாக இருந் தார். சந்தடியில் கிடைத்த சந்தில், ‘ப்ருஸ் அரசுவோட நாயைக் கொன்னுடறான் சார்’ என்று ‘தசாவதாரம்’ லைனை விட்ட இடத்தில் தொடர்ந்தார்.

தசாவதாரம் படத்தை பார்த்த பொழுது ப்ருஸ் என்கிற கதாபாத்திரத்தையும் அரசுவின் நாயையும் காணோம். கதை மாறியதா ? காரெக்டர்கள் மாறியதா ?

எனக்கு தசாவதாரம் பிடித்திருந்தது. படத்தில் கேயாஸ் தியரி பற்றி கமல் க்ளாஸ் எடுக்கும் போது, தெரியும் அ-சுவாரசிய செயற்கைத்தனமும், அதை ஸ்க்ரிப்டில் கொண்டுவரும் போது தெரியும் புத்திசாலித்தனமும் இரண்டற கலந்துள்ள படம். மூன்று மணி நேரத்தில், பாக்கெட்டிலிருந்து பாப்ஃகார்ன் எடுத்து சாப்பிடக் கூட முடியாதபடி கண்களை கட்டிப் போடும் tour-de-force திரைக்கதை. பத்து கதாபாத்திரங்களில் கமல். ஒரு சிலவற்றில் ப்ளாஸ்டிக் தெரிகிறது. மற்றதில் கமல் தெரியவில்லை. சபாஷ் !!

இந்தப் படத்தின் உண்மையான கதைக் கரு, கமல் சொல்ல வந்த கேயாஸ் தியரி, கடவுள் உண்டா இல்லயா, விஷ்ணுவின் தசாவதாரத்துக்கும் இதற்கும் உள்ள ஒற்றுமை என்றெல்லாம் கணினி இன்ஜினியர்கள் போரடிக்கும் ஆபிஸ் நேரத்தில், பக்கம் பக்கமாக ஈமெயில் எழுதிக் இணையத்தில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கமல் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

~

போன வாரம் பார்த்த கற்றது தமிழ்[தமிழ் எம்.ஏ] என்கிற படம் பிடித்திருந்தது. தெளிவாக ஆரம்பித்து கடைசியில் சற்றே குழம்பிப் போய் முடித்திருந்தாலும், ராம் என்கிற அந்த புதிய இயக்குனர் கண்டு கொள்ளப் படவேண்டியவர். படத்தின் நடுவே, நானே சிவம் என்று யோகிகளுடன் பாங்க் சாப்பிட்டு விட்டு ஜீவா ஆடும் ஆட்டம் தமிழ் சினிமாவிற்கு புதியது. துல்லியமான ஒளிப்பதிவு, கச்சிதமான எடிட்டிங்[ஸ்ரீகர் பிரசாத்], ஆரவாரமான நடிப்பு[ஜீவா, அஞ்சலி] என்று அசத்தியிருக்கிறார்கள்.

கணினி தொழிலால் நலிவடைந்த பிற தொழிலாளர்களின் நிலையை கொஞ்சமாய் எடுத்துச் சொல்லும் விதம் அசட்டுத்தனமாக இருந்தாலும், உண்மை உரைக்கிறது. தாடி வைத்து முகமே மாறிப் போனாலும், கண்களில் மின்னும் நடிப்பால், ஜீவா has arrived. அடுத்த தலைமுறை அசட்டு ஹீரோத்தனங்கள் இல்லாத இயல்பான நடிகன்.

~

சமீபத்தில் நல்ல புத்தகம் எதும் படிக்கவில்லை. புத்தகமே படிக்கவில்லை என்று சொல்ல முடியாவிட்டாலும், புத்தகம் படிப்பது குறைந்திருக்கிறது. அதே மாதிரி சினிமா பார்ப்பதிலும், இண்டர்நெட்டை பராக்கு பார்ப்பதிலும் கொஞ்சம் சலிப்பு வந்திருக்கிறது.

சியாட்டலில் ஒரு வழியாக வெயில் வந்துவிட்டது. போன வாரம் முதல் அஃபீஷியல் சம்மர். இன்று மழை. இதான் சியாட்டல்.


April 2, 2008

அரை(குறை)வரி விமர்சனங்கள்

death_at_a_funeral.jpg

சாவுக்கு 'கிராக்கி' - இறந்த தகப்பனின் உடலை வீட்டின் நடுவே கிடத்தி விட்டு, மகன்கள் போடும் ரொம்பவே காமெடியான கலாட்டா. கொஞ்சம் ப்ளாக் காமெடி வகையாய் இருந்தாலும், கிரேஸி மோகன், மாதவன், சூர்யா, பிரகாஷ்ராஜ், அசின், குள்ளமணி என கலந்தடித்தால் கண்டிப்பாய் வெள்ளி விழா. அந்த நிர்வாண மாப்பிள்ளையாக, நட்புக்காக கமல்.

பிடிச்சிருக்கு - யாரோ டைரக்டர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர். சாதாரணமான க்ளாசிக் லவ் ஸ்டோரி. ஆனாலும் ரொம்பவும் எதிர்ப்பார்ப்பில்லாமல் பார்த்ததால் பிடித்திருந்தது. பாடல்களின் படப்பதிவில் பின்னி எடுக்கிறார் டைரக்டர் கனகு. சபாஷ்.

நிஜவாழ்க்கையில் டான் - ஸ்டீவ் கேரால் நடித்திருப்பதால் நன்றாக இருக்கும் என்று நினைத்து ஏமாற்றிய சராசரி ஹாலிவுட் படம்.

கண்முடித்தனமான காதல் - எதோ இந்திய நடிகை இருந்ததாலும், ட்ரைலர் சுவாரசியமாய் இருந்ததாலும், படம் பார்த்து ஒன்றரை மணி நேரம் வீண். ஹாலிவுட் படத்திலும் மகள்கள் காதலித்தால், இந்தியத் தகப்பன்கள் பல்லைக் கடிக்கிறார்கள்.

இவைத் தவிர இன்னும் இரண்டு மூன்று படங்கள் பார்த்து மறந்து போய் விட்டது. கொஞ்சம் நாட்களுக்கு சினிமா பார்க்கப் போவதில்லை. இனிமேல் தசாவதாரத்திற்கும், இண்டியானா ஜோன்ஸிற்கும் தான் கைக்காசை செலவழிக்கப் போவதாய் முடிவு.


நோ கன்ட்ரி பார் ஓல்ட் மென்

javier bardem

இந்த வருட ஆஸ்கர்களை கவர்ந்து சென்ற கோயன் சகோதரர்களின், மனிதனின் ஆதார குணங்களை பற்றிய அட்டகாசமான படம். ஆர்ட்-ஹவுஸ் படம் போல இருந்தாலும் கண்ணில் ஒற்றிக் கொள்ளக்கூடிய திரைக்கதை, இசையில்லாமல் இழுத்துச் செல்லப்படும் காட்சியமைப்பு, சொல்லாமல் சொல்லப்படும் சின்னச் சின்ன விஷயங்கள் என்று பின்னிப் பெடலெடுத்திருக்கும் படம்.

கண்ணில் எதிர்ப்படும் வயதானவர்களை கேள்வி கேட்டுக் கொண்டே வித்தியாசமாக சுட்டுச் சாகடிக்கும் சைக்கோவான ஒரு வில்லன். குற்றம் செய்த இடத்துக்கே மீண்டும் செல்ல எத்தனிக்கும் மற்றோரு பாத்திரம். போலிஸ் வேலையை விட்டுவிட்டு மனைவிக்கு துணி துவைத்துப் போட எத்தனிக்கும் ஒரு நேர்மையான் போலிஸ் என பலவகைப்பட்ட மனிதர்கள்.

சைக்கோ வில்லன்களில் ஹாவியே பார்டெம்முக்கு முதலிடம். பார்டெம் குடித்துவிட்டுப் போன பால் பாட்டிலை டாமி லி ஜோன்ஸ் எடுத்து பார்க்கும் காட்சியும், அவர்கள் இருவரும் ஒரே இருட்டு அறையில் இருக்கும் காட்சியும் கச்சித ஹைக்கூ. படம் முழுவதும் புரிய சப்-டைட்டில் அவசியமோ அவசியம்.

படம் பிடித்திருந்தால், கோயன் சகோதரர்களின் ரொம்பவும் அறியப்படாத பழைய படமான Blood Simpleலை பார்க்கலாம்.


April 1, 2008

3 X 9 = டிஸ்லெக்ஸியா

taare_zameen_par.jpg

அமீர்கானின் டிஸ்லெக்ஸியா பற்றி பாடமெடுக்கும் தாரே சமீன் பர் கொஞ்சம் பிடித்திருந்தது. முதல் பாதி.

புத்தகத்தில் எழுத்துக்கள் நடனமாட, எண்கள் புரியாத கோலங்களாய் தெரிய, அவ்வப்போது பந்துகள் பறந்து வர நடமாடும் அந்த டிஸ்லெக்ஸியா சிறுவன் மனதை பறித்துக் கொண்டு போகிறான். இந்த வருடத்தின் சிறந்த டாலண்ட் ஷோ.

இடைவேளையில் கோமாளி வேடத்துடன் வரும் அமீர்கான், வழக்கம் போல் இந்திய மசாலாவாக இல்லாமல் ஹாலிவுட் படம் போல் நகரும் படத்தில் நிஜ கோமாளியாய் புகுந்து குழப்பியடிக்கிறார். சிறந்த நடிப்பிக் அவர் மிளிர்ந்தார் என்று விமர்சகர்கள் சொல்வதெல்லாம் சுத்த புருடா. ஏதோ சாதாரணமான படத்தை காப்பாற்ற வந்த பரமாத்மா போல தன்னை நினைத்துக் கொண்டு, இரண்டாம் பாதியில் எல்லா சீன்களிலும் இழுத்துப் போட்டுக் கொண்டு மூஞ்சியை காட்டுகிறார்.

தனது இயக்கதில் வரும் படம், தோற்று விடாமல் இருக்க, தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்கப் போய், மெல்லிய சிம்பொனி போல இருந்த படம், சிவாஜியின் திரிசூலம் போல அக்மார்க் மசாலாவாகிறது. அந்த ஆர்ட் டீச்சரின் பாத்திரத்தை அடக்கி வாசிக்கும் நடிகர்களை வைத்து செய்திருந்தால், படம் சிம்பொனியாகவே முடிந்திருக்கலாம்.

இரண்டாம் பாதி சுவாரசியமில்லை. தமிழ் சினிமாவில் கிளைமாக்ஸ் கல்யாணத்திற்கு பிறகு பூவடைத்த அறையில், ஹீரோ ஹீரோயினை கட்டிப்பிடித்தவுடன் வரும் சுபம் போல ஒரு ரொம்பவும் எதிர்ப்பார்த்த உப்புமா முடிவு. என்ன தான் டாகுமெண்டிரி படமாயிருந்தாலும் ரொம்பவும் பாடமெடுக்காமல் இருப்பது அவசியம்.

முதல் பாதியில் பல அமைதியான துல்லியமான காட்சிகளுக்காகவும், அந்த சிறுவன் 3 X 9 கணக்கு போடும் கனவுக் காட்சியில் வழிந்தோடும் கிரியேடிவிட்டிக்காகவும் அமீரை மன்னிக்கலாம்.


January 28, 2008

ஸ்லோமோஷனில் பில்லா

billa_ajith_nayanthara.jpg

என் நடிப்புத் தொழிலின் மிகப்பெரிய முக்கிய படம் என்கிறார் அஜித்குமார். பத்து வருடங்களுக்கு பிறகு, எல்லா மீடியா ஸ்டூடியோவுக்கும் பேட்டி அளிக்கிறார் என்று ரசிகர்கள் பூரிப்படைகிறார்கள். சிவாஜியை விட அதிகமாக பிரிண்ட் போடப்பட்ட படம் என்று கோடம்பாக்கம் குதூகளிக்கிறது. படத்தில் ஒன்றையும் காணோம். கதையும் திரைக்கதையும் பிரிக்கப்பட்ட அனாதைக் குழந்தைப் போல் அழுகிறது படம். பில்லா 2007.

ஒரு சன் க்ளாஸ் விளம்பரம் போல படத்தில் எல்லாரும் எல்லா காட்சிகளிலும் கண்ணாடியில் காட்சி அளிக்கிறார்கள். கலர் க்ரேடிங்கில் ப்ளூ கலரை படமெங்கும் தெளித்திருக்கிறார்கள். அஜித்திற்கு இன்னமும் டையலாக் டெலிவரி வந்தபாடில்லை. பிரபுவையும் அந்த ஆந்திரா ஹிரோ மீசையுடன் வரும் ஆதித்யாவையும் தவிர வேற யாரும் நடிப்பதைப் பற்றி கவலைப்பட்டதாக இல்லை.

படம் எடுக்கப்பட்டது மலேசியா தான். மக்கள் ஒத்துக்கொள்வார்கள். அதற்காக எல்லா காட்சிகளிலும் பேக்ட்ராப்பாக பெட்ரோனாஸ் டுவின் டவரை காட்டியிருக்க வேண்டாம். ஹீரோவும், செகண்ட் ஹீரோவும், போலீஸும், எல்லாரும் டுவின் டவரின் பக்கத்திலேயே இருக்கிறார்கள்.

ஸ்லோமோஷனை over-cranking என்று டெக்னிக்கலாக குறிக்கிறார்கள். படத்தை ஷூட் செய்யும் போது, செகண்டுக்கு 24 பிரேம்களை விட வேகமாக பதிவு செய்து கொண்டு, படத்தை திரையிடும் போது 24 பிரேம்களாக மாற்றினால ஸ்லோமோஷன் எஃபக்ட் கிடைக்கிறது. பில்லாவில் வழக்கத்திற்கு அதிகமான ஸ்லோமோஷன் காட்சிகள். ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா ஓவர்ரேட்டட். நயன்தாராவும் தான்.

"வெத்தலைய போட்டேண்டி" பாட்டில் தான் படத்தின் இருக்கம் குறைகிறது. விஷ்ணுவர்த்தனிடம் பட்டியலில் இருந்த முதிர்ச்சி தெரியவில்லை. திரைக்கதை என்பதே non-existentஆக இருப்பது வருத்தம் தான்.

(ஸ்லோ)மோஷன் ஸிக்னஸ்.


January 23, 2008

ஜலதோஷம், தமிழ் மென்பொருள் மற்றும் பழனி

இந்த வாரம் ரொம்பவும் பேசப்பட்ட க்ளிஷே, “If america sneezes, asia catches cold". இதையே பலரும் பேசிப்பேசி, ”அமெரிக்காவுக்கு தும்பல் வந்தா , எங்க வீட்டு பசு மாட்டுக்கு ஜலதோஷம் பிடிச்சுகிறது” என்று எருமபுடிச்சான் பட்டி வரை எதிரொளித்தது. விஞ்ஞான முறைப்படி, தும்பலினால் ஜலதோஷம் பரவுவது மூன்று நான்கடி வர தான். இந்த coldக்கு காரணம் ஆயிரமாயிரமாய் ஆளாளுக்கு பங்கு மார்க்கெட்டில் கொட்டிய துட்டு.

அமெரிக்காவின் சகாப்பதம் இந்த ரிசஷனோடு முடிந்தது என்றெல்லாம் எழுதுகிறவர்கள் டீ குடிக்க போய்விட்டார்கள். இந்த ரிசஷன் பயத்தினால் வீழ்ந்த உலக ஸ்டாக் மார்கெட்டுகள், அமெரிக்காவின் பிஸினஸ் உலக தாக்கத்தை மீண்டும் உணர்த்தியது. ஒரு பத்து வருடத்திற்கு முன்பு, தனித்திருந்த இந்தியாவின் பங்கு மார்க்கெட்டும், உலகளவில் உயர்ந்து, தற்போது தான் அமெரிக்காவின் பங்கு மார்கெட்டின் மேல் சாய்ந்து இன்னும் அதிகமாக அதைச் சார்ந்து இருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவில், கிட்டத்தட்ட பத்து வருடத்திற்கு இரண்டு என்று இது வரை எட்டு ரிசஷன்கள் வந்திருக்கின்றன. எல்லா ரிசஷனும் ஆரம்பிக்கும் போது, "This is the worst recession ever", என்று ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள். இது ஒரு வழக்கமான பிஸினஸ் சைக்கிள் தான். நியுட்டனின் முன்றாம் விதிக்கு, பங்கு மார்க்கெட் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று மறுபடி மறுபடி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிசஷன் என்பது நீண்டு கொண்டே இருப்பதல்ல. ஒரு வருடத்திற்கு மேல் நீண்ட ரிசஷன்கள் வெகுச்சில.

ஆனால் இந்த முறை தான் இந்தியாவைப் பற்றி அமெரிக்காவில் அதிகம் பேசுகிறார்கள். நேற்று நடந்த ரிபப்ளிகன் ஜனாதிபதி விவாதத்தில் கூட, சைனா இந்தியா என்று சேர்த்துச் சேர்த்து பேசினார்கள். ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு இது சாத்தியமில்லை. இது ஒரு பெருமையாய் இருக்கும் பட்சத்தில், இதற்கு கொடுக்கும் விலை, நமது பங்கு மார்க்கெட் அமெரிக்க மார்க்கெட்டின் மேல் சார்ந்திருக்கும் நிலைமை.

இந்த முறை வந்திருக்கும் அல்லது (சிலரைப் பொருத்தவரை) வந்து கொண்டிருக்கக்ககூடியது ரிசஷன் தான். இதற்கு முந்தைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமேன் சொன்ன விதிமுறை, "It's a recession when your neighbor loses his job. It's a depression when you lose your own".

------------------------

சமீபத்தில் தான், புதிதாய் வாங்கிய மாக்கிண்டாஷில், dual bootஆக மாற்றி, விண்டோஸை நிறுவினேன்.மாக்கிண்டாஷில் அதன் ஆப்பரேடிங் ஸிஸ்டத்தின் கூடவே வருகிறது தமிழ் எழுத்துரு - தமிழில் எழுத உதவும் சாஃப்ட்வேர்.

விண்டோஸில் வழக்கமாக ஈ-கலப்பை வைத்து தமிழில் எழுதி வந்திருந்தேன். நியு ஹொரைசன் மிடியாவில், NHM Writer என்கிற தமிழில் எழுத உதவும் மென்பொருளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

அதை பயன்படுத்தி பார்த்த போது, அது தமிழில் எழுத உதவுவதோடு மட்டும் இல்லாமல், விண்டோஸ் கணினியின் மூலம் இணையத்தில் தமிழை சரியாக படிக்கும் படி அதை configureம் செய்கிறது.

இதுவரை தங்கள் கணினியில் தமிழ் படித்து/உள்ளிட முடியாதவர்கள் பயன்படுத்தலாம்.

------------------------

கமர்ஷியல் பஞ்சாமிர்தம் என்று உப தலைப்புடன், பழனி என்கிற படம் வந்திருக்கிறது. 'அதிரடி கமர்ஷியல்' (என்றால் என்ன?) இயக்குனர் பேரரசின் படம்.

இதைப்போல முடிவெடுத்து மசாலா படமெடுக்கும் தயாரிப்பாளர்கள், கவலைப்படாமல், ஸ்ரீகாந்த் தேவாவை பயன்படுத்தலாம். கொடுத்த பைசாவுக்கு கன்னாபின்னாவென்று மசாலா மெட்டிசைக்கிறார். டிவி பேட்டியில் கள்ளமில்லாமல் பேசுகிறார், சிரிக்கிறார். பழனியின் பாடல்கள், சிவகாசி படத்தின் பாடல்களைப் போல பிடித்து விட்டது.


January 13, 2008

கல்லூரி

kalloori balaji shankar.jpg

பாலாஜி சக்திவேலின் கல்லூரி பிடித்திருந்தது. அதன் நடிக்காத நடிக கண்மணிகளும், தெளிவான திரைக்கதையும், ஜோஷ்வா ஸ்ரீதரின் உருத்தாத பிண்ணனி இசையும், செழியனின் காமிராவும் தான் பலம்.

கடந்த பத்து வருடங்களில் கல்லூரியில் படித்திருக்கும் யாரும் தன்னையும் தன் நண்பர்களையும் மீண்டும் நினைவு கொள்ளலாம். உண்மைக்கு வெகு அருகில் படம் எடுப்பது தான் தன்னுடைய ஸ்டைல் என்று மீண்டும் நினைவுபடுத்துகிறார் பாலாஜி. போன படமான காதலைப் போலவே க்ளைமாக்ஸ் மனதில் நிற்கவில்லை என்றாலும், படத்தை முடிக்க எடுக்கப்பட்ட டிராமாடிக் நீட் முடிவு தான் என்றாலும், போய்ச் சேரும் இடத்தை விட அந்த பயணம் தான் முக்கியமாதலால், யாவும் நலம்.

சொசைட்டிக்கு பயந்து நடக்கும் அந்த கயல்விழியும், மைனர் செயினோடு காலேஜுக்கு வந்து, தாத்தாவின் 'மேலுக்கு முடியாததால்' பாதி வழியில் திருமணம் செய்து கொள்ளும் காமாட்சி பையனும், தமன்னாவும், அத்லெட்டிக்காக வரும், தமிழ் சினிமாவின் ஹீரோ தோற்றம் கொஞ்சமும் ஒத்து வராத அந்த ஹிரோவும் கொஞ்ச நாளைக்கு மனதில் நிற்பார்கள்.

தமிழ் சினிமாவில் வரும் யாருக்கும் படத்தில் பார்ட் இல்லாததால் கோடம்பாக்க யூனியன்கள் பாலாஜியின் மேல் கோவவித்துக் கொண்டிருக்கலாம். ஷங்கர் தயாரித்த படம் என்றார்கள். ஏவிஎம்மையும் சிவாஜியையும் நினத்து சிரிப்பு வந்தது. சரியா இது தவறா என்ற பாட்டில் மழையில் நம்மை நனைத்ததற்காக ஜோஷ்வா, செழியன், பாலாஜிக்கு யதார்த்த நன்றிகள்.


December 7, 2007

ஹாலிவுட் நகரங்கள்

நியூயார்க் ஒரு self-indulgent நகரம். சென்டர் ஆப் தி யூனிவர்ஸ். நம்மூர் பம்பாயைப் போல. அதாவது, பம்பாயே ஒரு உலகம் போல, அதனைப் பற்றி பேசுவதற்காகவே ஆழேழு சானல்கள், அரை டஜன் செய்திப்பத்திரிக்கைகள், தினமும் பலப்பல குற்றங்கள், குவியும் மக்கள் கூட்டம் என்று தன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் நகராதி நகரம். தப்பல்ல. இந்த நகரங்களுக்குள் அடங்கி இருக்கும் self-sustaining ecological system போன்றோரு அமைப்புத் தான் இந்த 'தன்னைச் சுற்றித் தான் உலகம்' என்ற மாயைக்கு காரணம்.

நியூயார்க்கில் எல்லாம் கிடைக்கும். அதாவது எல்லாம் எல்லாம். என்ன எல்லாமே அங்கே கொஞ்சம் அவசரம். வேலையிலிருந்து சாப்பாடு, தூக்கம், வாழ்க்கை என்று எல்லாவற்றிலுமே அவசரம். நியூயார்க் பல மில்லியன் வாழ்கைகளை உண்டாக்கியிருக்கிறது. வந்தவர்களுக்கெல்லாம் வாழ உதவியிருக்கிறது. காட்ஃபாதர் இரண்டில் வந்திரங்கும் அந்த சிறுவனை காட்ஃபாதர் ஆக்குவதிலிருந்து, வால் ஸ்ட்ரீட் analystsவரை எல்லோரும் வந்து சேரும் இடம். இதன் அத்தனை குணங்களும் பம்பாய்க்கும், டோக்கியோவுக்கும், பாரிஸுக்கும், லண்டனுக்கும் ஏன் லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் உண்டு.

ஆனால் நியூயார்க் மக்களை விட நியூயார்க்கை ரொம்ப பிடித்திருப்பது ஹாலிவுட்காரர்களுக்குத் தான். இதற்கு காரணங்கள் பல. முழுமையான காரணம், நியூயார்க்கும் அதன் சுதந்திர தேவியின் சிலையும் தான், அமெரிக்காவின் முதல் அடையாளம். அதன் முகம். எல்லா மொழிப் படங்களிலும் அமெரிக்காவை காட்டும் போது முதலில் இறங்கும் ப்ளேனையும், சுதந்திரதேவி சிலையின் ஹெலிகாப்டர் க்ளோஸப்பும் பின்பு, எஸ்கலேட்டரில் ஹீரோ சன்க்ளாஸுடன் இறங்கும் காட்சியும் நிச்சயம்.

இன்னும் ஒரு மாதத்தில் ரிலிஸாகவிருக்கும் இரண்டு ஹாலிவுட் படங்களில் நியூயார்க்கில் சண்டை நடக்கிறது. ஒன்றில் ப்ரூக்ளின் ப்ரிட்ஜ் உடைகிறது. மற்றொன்றில் சுதந்திர தேவியின் தலை உருளுகிறது. எவ்வளவு முறை இதைப் போல டிஸ்ஸாஸ்டர் படம் வந்தாலும், மீண்டும் அதையே செய்கிறார்கள். தாலி சென்டிமெண்ட் போல, நியூயார்க் சென்டிமெண்ட்.

i-am-legend.gif

I am Legend என்னும் வில் ஸ்மித்தின்[Will Smith] சயின்ஸ் பிக்-ஷன் படத்தில், நியூயார்க்கில் ஒருவரும் இல்லை, வில் ஸ்மிதையும் அவருடைய நாயையும் தவிர. முதலில் புத்தகமாக வந்த இந்தக் கதை இது வரை நான்கு முறை திரைப்படமாக்கப்பட்டுள்ளது. வில் ஸ்மித்தை Global Movie Machine என்கிறார்கள். உங்கள் ஊருக்கு படம் வந்தால், யாரும் சொல்லாமலேயே கண்டிப்பாய் பார்ப்பீர்கள்.

Cloverfield என்னும் படத்தில் ஐந்து நியூயார்க் இளைஞ/இளைஞிகள் தங்கள் நண்பர்களுக்கு அளிக்கும் பேர்வெல் பார்ட்டியின் நடுவில் ஒரு பல மாடிக் கட்டிடம் உடைந்து விழுகிறது. பிறகு சில கிராதகர்கள் வருகிறார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர், Lost என்னும் பரபரப்பு சீரியலின் எழுத்தாளர் ஜெ.ஜெ. அப்ராம்ஸ். கதையை மூச்சு விடாமல் இருக்கிறார். பார்க்கலாம்.

லாஸ் ஏஞ்சல்ஸும் எக்கச்சக்க ஹாலிவிட் படங்களில் வந்து விட்டது. எல்.ஏ(LA)வில் தான் ஹாலிவுட் இருக்கிறது. அதைத் தவிர அங்கு இருக்கும் எல்லா ஊர் மக்களும், பல நாட்டவர் வந்து போகும் இடமாதலாலும் நீங்கள் எந்த மொழிப் படத்தை வேண்டுமானாலும் இங்கு எடுக்கலாம்.

சியாட்டல் ரொம்ப சாதுவான நகரம். அதிகமான படங்களில் இடம் பிடிப்பதில்லை. மழையில் எடுக்கப்படும் திகில் படமாக(Ring) இருந்தால், அல்லது ஏதாவது ரொமாண்டிக் படமாக(Sleepless in Seattle) இருந்தால் மட்டுமே சியாட்டலுக்கு வருகிறார்கள். கடைசியாக இங்கு எடுத்த படம் ஒரு சரியான மொக்கைப் படம்.


October 26, 2007

மவுண்ட் ரோடில் ரோபாட்டுகள்

transformers movie

இந்த சம்மர் ரிலீஸிலேயே Transformers தான் ரொம்ப சத்தமான படம், ரொம்பவும் இழுவை, அதீதமான க்ராபிக்ஸ், வயிற்றை குமட்டுகிறது என்றெல்லாம் சொன்னார்கள். இதனால் எதிர்பார்ப்பில்லாமல் பெரிய ஸ்கிரீனில் பார்த்ததால், ரொம்பவும் பிடித்திருக்கிறது. பிரமாதமான படம்.

டைரக்டர் மைக்கேல் பே(Michael Bay) ஒரு டைம்பாஸ் பரமாத்மா. பியர்ல் ஹார்பர், ஆர்மகெடான் என்று பாப்புலர் சினிமா எடுப்பவர். நல்ல சினிமா எடுப்பவர்கள், இவரின் டைம்பாஸ் படங்கள் ஹிட்டாவதை பார்த்து, Killing Michael Bay என்றெல்லாம் குறும்படம் எடுத்து விட்டார்கள். அந்த அளவிற்கு வெறுப்பை சம்பாதித்திருக்கும் ஒரு ஹாலிவுட் ஷங்கர்.

இண்டிபெண்டன்ஸ் டே போல கதை, காதில் நிறைய பூ. அதனால் லாஜிக் கேள்வி கேட்காமல் க்ரேஸி மோகன் படம் போல பார்ப்பது அவசியம். உலகில் உள்ள இயந்திரங்களை கட்டுக்குள் வரவழைத்து, மனிதர்களை அழிக்க ஒரு செட் ரோபோட்டுகள் வந்திறங்குகின்றன. மனிதர்களை காக்க ஒரு அரை டஜன் நல்ல ரோபாட்டுகள் மற்றொரு பக்கம் வர, மிச்ச படம் ஒரு 20-20 மாட்ச்சின் சுவாரசியம்.

Bumble Bee என்னும் நல்ல ரோபோ, ஒரு யுவனின் காராக உருமாறி அவனைக் கொண்டு க்ளைமாக்ஸ் காட்சியை முடிக்கிறது. எல்லா ராட்சத சைஸ் நல்ல ரோபோக்களும், அந்த யுவனின் வீட்டிற்கு வெளியே ஒளிந்து கொள்ளும் காட்சியில் ரசிக்க வைக்கிறார்கள். Infact கலக்கி எடுத்திருக்கிறார்கள்.

கடைசி 25 நிமிடங்களில், நகரத்தின் நடுவே ரோபோக்களுக்குள் நடக்கும் சண்டை காட்சியில் க்ராபிக்ஸ் தெரியவில்லை. முதல் காட்சியிலிருக்கும் வேகம் இறுதி வரை வருவது ஸ்க்ரிப்ட்டின் தெளிவு.

கோலிவுட்டிலும் மவுண்ட் ரோடில் ரோபோ சண்டை படமெடுக்கலாம். இந்த க்ராபிக்ஸ் நம்மூர் விலைக்கு கட்டுபடியாக ஐந்து வருடமாகலாம். குண்டடிக்காமல் தனுஷ் காத்திருந்தால், மாரேஜ் செட்டிலாகாமல் அசின் இருந்தால், ஹாலிவுட்டில் புழங்காமல் ரஹ்மானிருந்தால், ஹிந்திக்கு போகாமல் ஷங்கரிருந்தால், கண்டிப்பாய் செய்யலாம்.


October 16, 2007

இரண்டு படங்கள்

chak_de_india_shahrukh.jpg

சமீபத்தில் பார்த்த சக் தே இந்தியா!! பிடித்திருந்தது. இந்த மாதிரி நோ-நான்சென்ஸ் படங்கள் எடுத்து, ஹீரோ ஹீரோயினை இருபது பெண்களுடன் சுவிஸ் அனுப்பாமல், இடுப்பு காட்டாமல் இருந்தால் இன்னும் பிடித்திருக்கிறது. ஆனாலும் கோலி/பாலிவுட்கள் மாறுவதாய் காணோம்.

உயிர் கொடுத்தாடும் ஒரு ஹாக்கி வீரனின் மேல் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, பிறிதொரு நாளில் அவன் கோச்சாக திரும்பி வந்து, பெண்கள் ஹாக்கி டீமை கட்டி மேய்த்து கப் வாங்கி கொடுக்கும், The Incredibles போன்றோரு கதை தான். ஹாலிவுட்டில் இதைப் போன்ற sports genre படங்கள், வாரத்திற்கு மூன்று வருகின்றன. Beaten Track.

கபீர்கானாக வரும் ஷ.கானுக்கு ஒரு வித்தியாச படம். ரசிக்கும் படி செய்யப்பட்ட ரோல். ரொம்ப நாளைக்கு(சுவதேஸுக்கு) பிறகு shahrukhஐ பிடித்திருக்கிறது. இதற்கடுத்து ஷங்கருக்கு ரோபோவாக போகிறார். படத்தில் வரும் அந்த அத்தனை ஹாக்கி நங்கைகளும் நடிக்கிறார்கள். சண்டிகரின் சண்டைக்கார பெண் ரசிக்க வைக்கிறாள்.

ஆங்காங்கே புள்ளரிக்கும் cliched காட்சிகள் இருந்தாலும் பாடல்களை படத்துடன் இணைத்ததற்கும், போரடிக்காத ஹிந்தி சினிமா எடுத்ததற்கும் ஷிமித் அமீனுக்கு நன்றி.

knocked_up.jpg

மற்றொரு படம் Knocked Up என்னும் ஆங்கில படம். Geeky Humor என்று சொல்லப்படும் வகையை சேர்ந்தது. ஓரிரவில் டான்ஸ் பாரில் சந்திக்கும் ஒரு டீவி தொகுப்பாளினிக்கும், வேலையில்ல geekக்கிற்கும் நடக்கும் ரொமான்ஸும் அதன் பின் நிகழ்வுகளும் தான் படம்.

பச்சையாய் ஆங்காங்கே காட்சிகளும், சிரிப்புகளும் இருந்தாலும், ரசிக்க வைக்கிறார்கள். நைன் மந்த்ஸ் போல ரம்மியமான ஆனால் கெட்ட வார்த்தைகள் நிறைந்த, பிரசவ படம். Referential comedy என்று பாப் கல்ட்சரை எடுத்துக் காட்டி காமெடி செய்யும் வசனங்கள் தான் சிறப்பம்சம். Clerks 2 என்னும் படமும் இந்த வரிசையில் மற்றொன்று.


July 7, 2007

தளபதி

thalapathi

நானும் மணிகண்டனும், BSA SLRல் டபுல்ஸ் அடித்துக் கொண்டு போய், எக்மோர் அல்ஸா மாலில் உள்ள ஹாட் பிரட்ஸில், டிக்கெட் வாங்கினோம். கிட்டத்தட்ட பதினாறு வருடங்களுக்கு முன்பு, தீபாவளிக்கு ஒரு வாரமே இருக்கும் ஒரு திருநாளில். தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் ரஜினி படத்திற்கான ப்ரீமியர் ஷோ டிக்கெட். அப்போதிருந்த விலையில், அந்த இரு பத்தாங்க்ளாஸ் மாணவர்களுக்கு, அந்த ஐம்பது ருபாய் டிக்கெட் ரொம்பவும் காஸ்ட்லி. மணிரத்னத்துடன் படம் பார்க்க கொடுத்த விலை. இயக்குனர் மணி ரத்னம். இசை இளையராஜா. படம் தளபதி(1991).

கமலை வைத்து நாயகன்(1987) எடுத்திருந்த நேரத்தில், மணி ரத்னம் பிரபலமாயிருந்தாலும், அவ்வளவு எதிர்பார்ப்பில்லை. ஆனால் நாயகன் இந்திய சினிமாவை புரட்டி போட்டதால் மணி ரத்னத்தின் மேல் பல பார்வைகள் ஆர்வமாய் பதிந்திருந்தன.

மணிரத்னம், நாயகனுக்கு பிறகு அடுத்த இரண்டு வருடங்களில், இரண்டு ஹிட்டுகள் கொடுத்திருந்தார். 88ல் வந்த அக்னி நட்சத்திரமும், 89ல் வந்து தமிழ்/தெலுங்கில் கல்லூரி மாணவர்களை கலக்கி எடுத்த இதயத்தை திருடாதேவும், மணி ரத்னத்தை உயரங்களுக்கு அழைத்துச் சென்றன. 90ல் வந்த அஞ்சலி வெற்றி பெறவில்லை என்றாலும், மணி ரத்தினத்திற்கு சறுக்கலில்லை.

மணியின் அடுத்த படத்தில் ரஜினி நடிக்க போகிறார் என்ற செய்தியே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மணி ரத்னத்தின் பிற படங்கள் போல் படம் வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, தளபதி என்ற பெயரை தவிர யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. எந்த மாதிரி படம் என்றும் யாராலும் யூகிக்க முடியவில்லை. அமிதாபச்சன் நடிக்கிறார், அனில் கப்பூர் நடிக்கிறார் என்ற ஏகப்பட்ட யூகங்கள் வேறு ரஜினி ரசிகர்களை துரத்திக் கொண்டிருந்தன.

thalapathi

செப்டம்பர் இறுதியில் பாடல் கேசட் வெளியீடு என்ற விளம்பரம் வெளியானது. லஹரி என்ற நிறுவனம் ஆறு விதமான பாடல் கேசட் அட்டைகளில் இசை வெளியிட்டது. ராக்கம்மா கைய தட்டு பாடலும், காட்டுக் குயிலு பாடலும் ஏகமான ஹிட். அதற்கு பிறகு நவம்பர் மாத ரஜினி ரசிகன் இதழில் , சாமுராய் ஸ்டையிலில் கத்தியுடன் ரஜினி நிற்கும் ஒரு மெகா சைஸ் ப்ளோ-அப்பும், தளபதி ஹைப்பை ஹைய்யில் வைத்திருந்தன.

முதலில், ரஜினி மாதிரி ஒரு அய்கானிக் இமெஜை, மணி ரத்னம் போன்று நகரத்திற்காக படமெடுக்கும் ஒரு பிரபல டைரக்டர் எப்படி கையாளப்போகிறார் என்ற கவலை ஒரு பக்கமிருந்தது. மணி ரத்னம் கையில் ரஜினியா, ரஜினி கையில் மணி ரத்னமா என்ற கேள்விக்கு விடை வந்தபாடில்லை.ஆனாலும், மணி ரத்னம் படங்களை ரசித்திருந்த தமிழ் நாடு, ரஜினியோடு இணைந்திருக்கும் தளபதியை பார்க்க சுவாரசியமாய் இருந்தார்கள்.

thalapathi

படம் வெளியானது. பழைய கர்ண கதை தான் என்றாலும், யாரும் காண்பிக்காத ஒரு எளிய ரஜினியை மணி ரத்னம் அறிமுகப்படுத்தினார். தனது சூப்பர் ஸ்டார் இமெஜை தக்க வைத்துக் கொண்டும், அதே சமயம் கதைக்கு ஏற்றபடி, மடித்து விடப்பட்ட முழுக் கைச்சட்டையும் ஒரு காட்டன் பேண்டும் அணிந்திருந்தார் ரஜினி. கிட்டத்தட்ட மணி ரத்னத்தின் படத்தில் ரஜினி என்ற நிலை. ரொம்பவும் ஏகபோகமாய் செலவழிக்காமல், டெக்னிகலாக மிக கச்சிதமாக எடுக்கப்பட்ட படம்.

Picture Postcards என்னும் வகையில், ரஜினியை மிக அழகான ஆங்கிள்களில், இளமையாய் காட்டிய படம். படம் ஏக ஹிட். சுந்தரி பாடலில், ஒரு ராஜா காலத்துக் குட்டி காதல் கதையை சொல்லியிருந்தார் மணி. சாமுராயாய் ரஜினியை பார்த்த ரசிகர்களுக்கு ஏக உற்சாகம். ரஜினி, மணி ரத்னம், இளையராஜா, மம்முட்டி என்று சேர்ந்தடித்ததில், 175 நாள் ஓடியது படம்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் ஈகா தியேட்டர் ரொம்பவும் பெரியது. தீபாவளிக்கு முந்தைய நாள், காலையிலிருத்தே குதித்துக் கொண்டிருந்தோம். அன்று இரவு, படம் முடியும் வரை மணிரத்னத்தை நாங்கள் பார்க்கவில்லை. பார்க்கவும் முயற்சிக்கவில்லை. எங்கள் பக்கத்தில் இருந்த அந்த வயதானவரையே இடைவேளையில் தான் அடையாளம் கண்டு கொண்டோம். மெளன ராகத்தில் வரும் மிஸ்டர் சந்திரமெளலி.

thalapathi

அடுத்த நாள், தீபாவளி அன்று உதயம் தியேட்டரில் ரஜினி ரசிகர்களுக்கும், கமல் ரசிகர்களுக்கும் ஏக சண்டை. தளபதி வெளியான அன்று தான், கமலின் குணாவும் வெளியானது. இந்த பக்கம், தளபதி கட்-அவுட் பற்றிக் கொண்டு எரிய, அந்தப் பக்கம், குணா கமல் கட்-அவுட்டில் எரிந்து கொண்டிருந்தார். அன்றுதான் ரஜினி/கமல் ரசிகர்களின் சண்டையின் உச்சக்கட்டம். அதற்கு பிறகு வெகு வருடங்கள் கழித்தே, இருவரின் படங்களும் ஒரே நாள் வெளியாயின.

சக்தி அபிராமியில் தளபதி சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. நானும், மணிகண்டனும் கிட்டத்தட்ட பதினான்கு முறை தளபதி பார்ததுவிட்டிருந்தோம். கடைசி முறை, படத்தில் இருக்கும் அத்தனையும் அத்துப்படியானதால், இடைவேளையில் வெளியே வந்து, குப்பை பொறுக்கும் இரு சிறுவர்களுக்கு டிக்கெட்டுகளை கொடுத்து விட்டோம்.

பின்குறிப்பு - போன மாதம் சென்னை சென்றிருந்த போது ரஜினியின் சிவாஜி படம் பார்த்தேன். ஷங்கர் டைரக்ட் செய்திருந்தார்.


May 7, 2007

காணவில்லை

இளைஞர்களின் கோலிவுட்டை, இந்த படத்திற்கு பின்னர் காணவில்லை. தேடிப்பார்கிறேன் காற்றோடு.

அப்பாஸ் ட்ரம்ஸ் அடிக்கிற மாதிரி நினைத்துக் கொண்டு சைகை செய்து நடந்து போவார், போன வாரம் கூட பீச்சில் ஒரு யுவா, அதே போல ஒரு பெண்ணின் பின்னால். Strikingly similar. ஒரே ஞாபகம்ஸ்.


April 30, 2007

நம்பும் பொய் - குறும்படம்

நம்பும் பொய், நண்பர் ஆர். எஸ். பிரசன்னாவின் ஒரு புதிய குறும்படம். இதற்கு முன் பார்த்த இவரின் இனி பயம் இல்லை, மிகவும் பிடித்திருந்ததால் கொஞ்சம் எதிர்பார்புடன் தான் பார்க்க உட்கார்ந்தேன். இரண்டு நடிகர்களுடன் சேர்த்து, மொத்தமாய் ஒரு டஜன் ஆட்கள் படத்தில் வேலை செய்திருந்தால் அதிகம். அதிலும் ஒரு நல்ல 10 நிமிடப் படம் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கும் படம்.

இரு நண்பர்களுக்குள் நடக்கும் ஒரு சாதாரண சம்பாஷணையும், அதற்கு காரணமாயிருக்கும் ஒரு சம்பவமும் தான் கதைக்களன். இயல்பாய் ஆரம்பித்து சுவாரசியமாக போகிறது. திருப்பத்திற்கு திருப்பமாய் முடிகிறது. முதல் ஐந்து நிமிடங்கள் கலக்கல். அதற்கு பின்னர் கொஞ்சம் சம்பவங்களை இழுப்பதாய் தோன்றுகிறது. சுத்தத் தமிழ் கவிதையும் கதையோடு ஒட்டாமல் போகிறது. மற்றபடி அந்த எதிர்பாராத தன்மையை கடைசி வரை கொண்டு சென்றதற்காக ஒரு கைக்குலுக்கல்.

நடித்த இருவரும் எளிமையாக நடித்திருந்தாலும், கனவு காணும் நண்பரின்(மனோஜ்) டையாலாக் டெலிவரியில் நிறையவே artificialness தெரிகிறது(weird dream da என்னும் இடத்தில் யதார்த்தமாய் இருந்தாலும் போகப் போக அது காணாமல் போகிறது). ப்ரவீன் கலக்கல். காமெண்ட்ஸில் ஒருவர் சொன்னது போல அந்த பியானோ சோலோ வருடிக் கொண்டு செல்கிறது. அடிதடி காட்சியில் மெல்லிசை, ஹாலிவுட்டில் பேர் போன ஒரு டெக்னிக். இருட்டு ரூமில் காமிராமேனும், எடிட்டரும் விளையாடி இருக்கிறார்கள். காமிராமேன் புத்தகத்தில் உள்ள மாதிரியே க்ளோசப்பில் இருந்து, மிட் ரேஞ்ச் சென்று பிறகு டாப் ஆங்கிள் லாங் ஷாட் போகிறார். சட்டென்று வரும் அந்த அழகான ட்ராலி ஷாட் பற்றி கேட்க வேண்டும்.

இதைப்போல ஆங்காங்கு கட் செய்யப்பட்டு, மற்றொரு இடத்தில் கதை நகரும் பாணி நிறையவே பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த பத்து நிமிடத்தில் அதை துல்லியமாக எடுத்துக்காட்டிய பிரசன்னா கவனிக்கப்பட வேண்டியவர். கடைசியில் டைட்டில்ஸில் ஒரு ஹெவி மெட்டல் பாட்டுப் போட்டிருந்தால், படத்தில் இருந்த ஹெவினெஸ் கொஞ்சம் குறைந்திருக்கலாம். குட் ஷோ !!


April 23, 2007

குளோபல் வார்னிங்

al gore global warming

மேலே உள்ள தலைப்பை அனேகர் குளோபல் வார்மிங் என்று தான் படித்திருப்பீர்கள். அப்படியென்றால் உங்களையும் மீடியா ஆக்கிரமித்துவிட்டது. குளோபல் வார்மிங் பற்றி ஒரு ரெண்டு நிமிஷம் பேசுங்க என்றால் பலர் எஸ்கேப். "என்ன பெருசா குளோபல் வார்மிங், உலகோன்(உலகம்) சூடாவுது சார் அவ்ளோதான்" என்பார்கள் மிச்ச சிலர். தவறு மீடியாவுடையது. எந்த காபி ஷாப்ல மீட் பண்ணலாம் என்று வருகிற டுவிட்டர் தொந்தரவுகளை சற்று நேரம் அணைத்துவிட்டு படித்தால் குளோபல் வார்மிங் வார்னிங் புரியும்.

ஒரு சனிக்கிழமை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஸ்பென்ஸர் ப்ளாசா செல்கிறீர்கள். உள்ள போய் அதே பிகர் அதே சமுசா அதே கிசுகிசு என்று பிடிக்காமல், "நான் கார்லயே இருக்கேன் நீங்க போய்ட்டு வாங்க" என்று சொல்லிவிட்டு லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே என்று பாட்டு கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். கார் ஜன்னல் மூடியிருப்பதாலும் வெளியே வெயிலாக இருப்பதாலும், கொஞ்ச நேரத்திற்கு பிறகு உள்ளே வேர்த்துக் கொட்டுகிறது அல்லவா. அது தான் குளோபல் வார்மிங். சத்தியமாக. அடிக்க வராதீர்கள்.

கடந்த நூறு ஆண்டுகளில் உலகத்தில் ஆவரேஜ் தட்ப வெட்பம் ஒரு டிகிரி பாரன்ஹீட் ஏறியிருக்கிறது. ஏன் என்று விஞ்ஞானிகள் இன்னும் ரூம் போட்டு கோக் குடித்துக் கொண்டு விவாதித்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறாக உலகம் சூடாவதால், தட்பவெட்ப நிலையில் பலவித மாற்றங்கள் வர வாய்ப்புண்டு. பனிப்பாறைகள் சீக்கிரம் உருகி வெள்ளம் வரலாம், மும்பையை போல நிறைய மழை பெய்யலாம், கடலின் மட்டம் அதிகமாகி மெரினாவில் வாக்கிங் போகிறவர்களை இழுத்துச் செல்லலாம். காமெடியில்லை. ஆவரேஜ் தட்ப வெட்பம் ஒரு டிகிரி பாரன்ஹீட் எறிய அதே நூறு ஆண்டுகளில் கடல் மட்டம் ஆறு முதல் எட்டு இன்சுகள் உயர்துள்ளன.

உலகம் சூடாகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. அது இயற்கையாக் நிகழ்கிறதா அல்லது மனிதனின் அலட்சியத்தின் விளைவா என்பது தான் விவாதமே. மனிதனால் induce செய்யப்படுவதை Anthropogenic Effect என்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு ஆன்த்ரோபோஜெனிக் விளைவுதான் க்ரீன் ஹவுஸ் எஃபக்ட்(Green house effect). மேலை நாடுகளில் குளிர் காலத்தில், க்ரீன் ஹவுஸ் என்று ஒரு குட்டிக் கண்ணாடி வீட்டில் செடிகளை வளர்ப்பார்கள். நம் ஊட்டியில் கூட உண்டு. இதற்கு காரணம், கண்ணாடி வீட்டிற்க்குள் சூரியனின் கதிர்கள் பாய்ந்து உள்ளே உள்ள செடிகள், குளிரால் அழியாமல் கதகத என்று இருக்கும். உள்ளே இருந்து வெப்பம் அவ்வளவாக வெளியே போகாது. உலகம் அந்த மாதிரி ஒரு க்ரீன்ஹவுஸ்.

சூரிய கதிர்கள் அட்மாஸ்பியர்(beer அல்ல) முலமாக பாய்கின்றன. அந்த atmosphereல் உள்ள CO2, நைட்ரஸ் ஆக்ஸைட், மீத்தேன் போன்ற சில வாயுக்கள் அந்த கண்ணாடி வீட்டின் கண்ணாடி போல செயல்படுகின்றன. அட்மாஸ்பியர் இல்லாமல் போனால் உலகம் ஒரு அறுபது டிகிரி உஷ்ணம் கம்மியாக இருக்கும். நாம் குளுரில் மாண்டு விடிவோம். உலகத்தின் உள்ளே வரும் அந்த உஷ்ணத்தை உலகம் உள்வாங்கிக் கொள்கிறது. அந்த உஷ்ணம் மீண்டும் எனர்ஜியாக மேலே எழும்புகிறது. அப்படி செல்லும் எனர்ஜியை முழுவதும் வெளியே விடாமல் உலகத்தை கதகத என்று வைத்துக்கொண்டிருகின்றன greenhouse gases.

ஆனால் அட்மாஸ்பியர் கார்பன் டையாக்ஸைட் அதிகமாகி, எந்த உஷ்ணமும் உள்ளே வரலாம் ஆனால் வெளியே போக முடியாமல் போய் விட்டால், ஸ்பென்ஸர் ப்ளாசா கார் போல உலகத்திற்கு வேர்த்துக் கொட்டும். அதுதான் குளோபல் வார்மிங். இதற்க்கெல்லாம் காரணம் நீங்கள்தான். நானும்தான்.

இதோ இதை நான் டைப் செய்யும் போது, இதை நீங்கள் படிக்கும் போதும், குளோபல் வார்மிங்கை ஆளுக்கு கொஞ்சூண்டு அதிகமாக்கி கொண்டிருக்கிறோம். இது மட்டும் அல்ல, நீங்கள் பாட்டு கேட்கும் போதும், மெகா சீரியல் பார்க்கும் போதும், இவை ஏன் உச்சா போய் ப்ளஷ் செய்யும் போதும் குளோபல் வார்மிங் கவுண்டர் ஏறிக் கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் தேவையாயிருப்பது மின்சாரம். அவை வருவதோ கரியை எரிப்பதால். கரி மற்றும் எண்ணெய் எரிக்கும் போது அவை இந்த க்ரீன்ஹவுஸ் வாயுக்களை உருவாக்குகின்றன.

"I used to be the president of America", என்று சில மணித்துளிகளே நீடித்த, மீடியாவின் தவறான ரிப்போர்டிங்கால் நிகழ்ந்த தேர்தல் குளறுபடியை நக்கலடித்து பேசியபடியே ஆரம்பித்து, அல் கோர்(Al Gore) க்ளோபல் வார்மிங் பற்றி, The Inconvenient Truth என்றொரு ஹாலிவுட் படமெடுத்திருக்கிறார். எதோ ஒரு ஆஸ்கர் வென்ற டாகுமெண்டரிப் படம்.

க்ளோபல்(அல்லது குளோபல்) வார்மிங் பற்றி சில பார்வையாளர்களுக்கு அல் கோர் விளக்குவதும் அதை பற்றி அறிய தான் செய்த பிரயாண பிரயத்தனங்களைப் பற்றித்தான் படம். நடுநடுவே கொஞ்சமாய் தலைக்காட்டும் அரசியல் நெடியைத் தவிர்த்துப் பார்த்தால் நல்ல படம். பிரகாஷ்ராஜின் மொழிக்குப் பிறகு குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வேண்டிய படம். அவர் சொல்லும் முக்கிய மெசேஜ்(தமிழ் ஹீரோ ரேஞ்ஜ்சுக்கு இல்லையென்றாலும்) குளோபல் வார்மிங் என்றாலும், 50 வருடங்களுக்கு முன் இருந்த இரண்டு பில்லியன் உலக ஜனத்தொகை, 50 வருடங்களில் ஆறு பில்லியனானது என்ற கேள்வி சிந்திக்க வைத்தது. அதாவது கடந்த 50 வருடங்களில் நாம் 4 பில்லியன் பேர் பிறந்து இந்த உலகத்தின் population pressureஐ அதிகமாக்கி இருக்கிறோம். வேறெப்போதும் இல்லாத அளவுக்கு உலகில் உள்ள நீர் நிலம் ஆகியவற்றை உபயோகித்து வருகிறோம்.

அல் கோர் வாஷிங்கடன்வாசி. இந்த அமெரிக்க தலைநகரத்தின் செயல்பாடறிந்தவர். என்ன சொன்னால் அரசாங்க மிஷினரி வேலை செய்யும் என்று தெரிந்திருக்கிறார். குளோபல் வார்மிங், ஆபத்து ஆபத்து என்று கத்தினால் கேட்க மாட்டார்கள். அதனால் இப்படி படமெடுத்து, மக்களிடம் கொண்டு செய்து இதை ஒரு மக்கள் இயக்கமாக்கி வருகிறார். ஆல் கோர் குளோபல் வார்மிங்கை invent செய்துள்ளார் என்றெல்லாம் சிலர் கிண்டலடித்தாலும், மக்கள் பேச ஆரம்பித்துள்ளது அவரது ஒரு வெற்றிக்கொடி கட்டல் தான்.

டைம் பத்திரிக்கையும் சமீபத்தில் இந்த உஷ்ணத்தை தணிக்க 51 வழிகள் என்று கோனார் நோட்ஸ் போட்டுள்ளது. வீடுகளில் fluorescent bulbs போடுங்கள் என்பதில் ஆரம்பித்து, கார்பன் வரி கட்டுங்கள், ஸிந்தடிக் உடைகளுக்கு பதில் vintage துணிவகைகளை பயன்படுத்துங்கள், உங்கள் மாத பில்களை ஆன்லைனில் செலுத்துவதால் பேப்பர் மிச்சமாகும், ஜன்னல் கதவை திறந்தால் காற்று வரும் ஏசியின் பயன் குறையும், இரண்டு மூன்று பிளைட் பிடித்து சியாட்டலிருந்து நியுயார்க் சென்றால் பெட்ரோல் அதிகமாவதால் ஒரே ப்ளைட்டில் காசதிகமானாலும் செல்லுங்கள், உங்கள் ஊரின் உழவர் சந்தையில் காய்கறி வாங்கினால் மிச்சமாகும் பெட்ரோல் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். முக்கியமாக எல்லா நிறுவனங்களும் தனது தொழிலாளர்கள் ரொம்ப தூரம் பயணம் செய்ய விடாமல் அவர்களின் வீட்டின் அருகிலோ அல்லது வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதை ஊக்குவியுங்கள் என்கிறார்கள். கொஞ்சம் அபத்தமாய் இருந்தாலும் நமக்கு நன்மை இருப்பதால் அப்படி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்த முறை நுங்கம்பாக்கம் காப்பி ஷாப் வரச் சொல்லும் கேர்ள் பிரண்டிடம், லோக்கல் நாயர் கடையில் மசால் வடை தோய்த்து சிங்கிள் டீ அடித்தால், குளோபல் வார்மிங் அவேர்னஸ் கப்பிள்ஸ் என்று போற்றுவார்கள் என்று சொல்லிப் பார்க்கலாம். "ஒண்ணு பண்ணு நீ உங்க வீட்ல காபி குடி, விஷால் கூட நான் இஸ்பஹானி போறேன்" என்று பதில் வந்தால் அல் கோரை கோவிக்காதீர்கள்.


April 18, 2007

ட்ருமேன் கப்போட்டி

capote_film.jpg

1959ல் கான்ஸாஸ் நகரின் ஒரு ஓதுக்குப்புர வீட்டில், நள்ளிரவில், நான்கு பேர் கொல்லப்படுகிறார்கள். கொன்ற இருவரையும் போலீஸ் பிடித்து ஜெயிலில் அடைக்கிறது. அடுத்த நாள், நியுயார்க் டைம்ஸில் இந்த செய்தியை படித்த ட்ருமேன் கப்போட்டி என்ற பிரபல எழுத்தாளர், இதை பற்றி எழுத கான்ஸாஸ் செல்கிறார். இரண்டு குற்றவாளிகளில் ஒருவனிடம் நட்பாகி, அவன் மனதை புரிந்து கொண்டு எழுத நினைக்கிறார், தன் வாழ்க்கை முற்றிலுமாய் மாறப்போவதை அறியாமல்.

இது கதையல்ல நிஜம். 50களில் வாழ்ந்த, Breakfast at Tiffany's என்ற பிரபல நாவல் எழுதிய, தான் ஓரினச்சேர்க்கையாளன் என்பதை தன் நாவல் மூலமாக உணர்ந்த ஒரு பிரபல நாவலாசிரியர் ட்ருமேன் கப்போட்டியின் வாழ்வில் நடந்த உண்மைக்கதை இப்படம்.

கப்போட்டி ஒரு விளம்பர பிரியர். பார்ட்டியில் தண்ணி போடும் போது மற்ற எழுத்தாளர்களை கலாய்க்கிறார். தன்னைப் பற்றி தானே உயர்வாக பேசுகிறார், கோர்ட்டு வாசலில் ஆனா நிக்கோல் ஸ்மித் போல சிவப்புக் கம்பள போஸ் கொடுக்கிறார். மொத்தமாக ஐம்பதுகளின் ஒரு ஸ்காட் பிட்ஸ்கிரால்டு பர்சனாலிடி.

அந்த நள்ளிரவு கொலையை பற்றி படித்தவுடன் கான்ஸாஸ் நகரில் இறங்கி, போலீசிலிருந்து கைதி வரை தன்னுடைய பிரபல்யத்தை வைத்தே அரசு இயந்திரத்தை உடைத்து, செய்தி சேர்க்கிறார். அந்த கொலைகாரனை தன் நண்பனாக்கி, அந்த கொலை பற்றிய விஷயமறிகிறார். தன் இளமை பருவத்தை போலவே, அவனுடையதும் பழுதடைந்து இருப்பதால், ஒரு தருணத்தில் அவனை நேசிக்கவும் ஆரம்பிக்கிறார். இடையில் தன்னுடைய எழுத்தாள காதலனோடு ஸ்பெயின் சென்று கடலை பார்த்துக் கொண்டு குடைக்கு அடியில் பழரசம் குடிக்கிறார்.

ஸ்பெயினிலும் பின் அமெரிக்காவிலும் அடுத்த ஒரு வருடத்தில் அந்த புத்தகத்தை எழுதுகிறார். அப்போது தான் தனக்கு தூக்கு வந்திருப்பதாகவும் அது நிறைவேற்றப்படும் போது கூட இருக்குமாறு அந்த கைதி தபால் அனுப்புகிறான். கான்ஸாஸ் சென்று, ஒரு மாதிரி நெளிந்து கொண்டே தூக்கை சாட்சியாக பார்க்கும் கப்போட்டியை அந்த சம்பவம் உலுக்குகிறது. நம்மையும் தான். ஒருவனை தூக்கிலிடும் அந்த நொடியில் அந்த சமூகமே தூக்கில் தொங்குவதாக சொல்கிறார்கள். அதை உணர முடிகிறது.

அப்புத்தகம் In Cold Blood என்ற பெயரில் தொடராக 1965ல் வெளிவந்து சக்கை போடு போட்டது. ராண்டம் ஹவுஸ் 1966ல் அதை நாவலாக வெளியிட்டது. அ-புனைவு நாவல்(non-fiction novel) என்னும் புத்தக வகையில் வெளிவந்த முதல் புத்தகம் அது. அதற்கு முன் non-fiction novel என்றே ஒன்று கிடையாது. இந்நாவலில் ஒரு தேர்ந்த கதாசிரியரின் நுணுக்கமான விஷயங்களை சொல்லும் பாணியையும், புனைவுகளில் கிடைக்கக்கூடிய கதை சொல்லும் உத்தியையும் சேர்ந்து பயன் படுத்தியது தான் கப்போட்டியின் வெற்றியே.

இந்த படத்தில் கப்போட்டியின் நண்பியான ஹார்பர் லீயும் கூடவே வருகிறார். To Kill a Mocking Bird என்னும் ஓரே புத்தகத்தின் மூலமாக உலக புகழடைந்த எழுத்தாளர் அவர். அந்த புத்தகத்தையே கப்போட்டி தான் எழுதினார் என்றும் ரூமருகிறார்கள்.

பிலிப் சீமோர் ஹாப்மேன்(Philip Seymour Hoffman) என்னும் நடிகர் தான் கப்போட்டியாக நடித்தவர். மிஷன் இம்பாஸிபிள் 3யின் வில்லன். கப்போட்டியாக நடித்ததற்காக ஆஸ்கார் விருது பெற்றார். உங்களுக்கு இந்த படம் பிடித்தால் அதற்கு காரணம் பிலிப். தனது மிகவும் subtle ஆக்டிங்கினால் கலங்க அடிக்கிறார். கப்போட்டி போலவே மெல்லிய பெண் குரலில் பேசுகிறார். சமிபத்தில் பார்த்த படங்களில் மிக சிறந்த ஆக்டிங் இவருடையது தான்.

In Cold Blood புத்தகம் கப்போட்டியின் வாழ்கையை மாற்றியது. புகழ் வந்தது. ஆனால் கைதிகளுடன் கழித்த அந்த ஒரு வருடம் அவரை கொஞ்சம் உலுக்கியது. அதற்கு பின் அவர் எந்த நாவலையும் எழுதவேயில்லை. பதினான்கு வருடங்கள் கழித்து, 80களில் Music for Chameleons என்று ஒரு கதை கட்டுரைப் புத்தகம் மட்டும் வெளிவந்தது. எழுதுவதில் நாட்டம் குறைந்தது கப்போட்டியின் விதியே. கப்போட்டியை கேட்டுப் பாருங்கள், "All literature is gossip" என்பார்.


April 4, 2007

சிவாஜி - பாடல்கள்

rajini rahman sivaji music

Pedestrian Fantasy எனப்படும் பொது ஜன மக்களுக்கான, அவர்களின் கனவுகளுக்கு வடிகாலாக படமெடுப்பது ஷங்கரின் வழக்கம். இதுவும் சுஜாதா போலத்தான். எப்படி சுஜாதா தனக்கு பிடித்த கதைகள் வாரப் பத்திரிக்கைகளில் வருவதில்லை என்கிறாரோ, ஆனால் அதே சுஜாதாவின் குற்றக் கதைகள் வாரப் பத்திரிக்கைகளில் வருகிறதோ அதே போலத்தான் இதுவும். பொது ஜன ரசனைக்காக எழுதப்படும் தனது தொடர்கதைகள் சாகா இலக்கியமல்ல என்பதில் தெளிவாக இருக்கிறார் சுஜாதா. 23சி பஸ்சை பிடிக்க, எட்டாக மடிக்கப்பட்ட வாரப் பத்திரிக்கையை அக்குளில் வைத்துக் கொண்டு, வியர்வை வழிய ஓடும் பொது ஜனம் தான், ஷங்கரின் பார்வையாளன். அவரின் நல்ல சினிமா ஆசையை, தன் நண்பர்களின் 'நல்ல' படங்களை தயாரிப்பதின் மூலம் தீர்த்துக் கொள்கிறார்.

இந்த pedestrian fantasyயை கொஞ்சமேனும் ஓதுக்கி வைத்து, உண்மையை சொல்லப் போய், பாய்ஸ் படமெடுத்த ஷங்கரையும் சுஜாதாவையும், அந்த பொதுஜனம், 23சி பஸ்சை கோட்டை விட்டாலும் பரவாயில்லை என்று நின்று துப்பி விட்டு போனார்கள். ஆனந்த விகடனின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விமர்சன வார்த்தை, சீ !!.

இனிமேலும் உண்மை வழியும் சினிமாவை ஷங்கர் எடுப்பதரிது. இன்று பாய்ஸ் படமெடுத்தால் BPO companyகளின் சாக்கடையில் காண்டம் குப்பைகளை காட்ட வேண்டும். காட்டினால் பாய்ஸ் கைத்தட்டுவார்கள். அவர்களின் பெற்றோர் அதிர்ந்து போய், இந்த ஆளுங்க சரியான crook என்பார்கள். Hypocrites !!

இப்படி சில வருடங்கள் முன்னே சென்று தான், சிவாஜியின் பாடல்களையும் எடை போட வேண்டியதாக இருக்கிறது. இந்தப் படத்திற்காக ரஹ்மான் வளைந்து கொடுக்கவில்லை, அந்த இந்த ரிதம் ப்ரோக்கிராமிங் சூப்பர் என்று போலி பண்டிதத்தனம் காட்டுபவர்கள் சொல்வதை அப்படியா என்று கேட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆவது நலம். இது ரஜினி படமல்ல. இது ரஹ்மான் படமல்ல. இது ஷங்கர் படமல்ல. இது இவர்கள் படம்.

இப்படியாக மூன்று பெரிய ஸ்டார்கள் இணையும் போது வரும் உரசல்களும் நெரிசல்களும் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தும் பாடல்கள் எந்த ஒரு biasசிலும் இருக்காதது சந்தோஷமே. ரஜினியின் intro பாடலும், ஷங்கரின் முத்திரையான குறுங்கதை சொல்லும்(ஓட்டகத்த - ஜெண்டில்மேன், முக்காலா - காதலன், மாயா மச்சிந்தரா -இந்தியன், அன்பே - ஜீன்ஸ்) பாடலும், ரஹ்மானின் ஒரு offbeat பாடலும் சேர்ந்திருப்பது தான் சிவாஜி ஆல்பத்தின் மிகப் பெரிய பலம்.

SPB செம எனர்ஜியுடன் பாடும் சூரியனும் சந்திரனும் தான் கேட்டவுடன் முதலில் பிடித்தது. வழக்கமான ரஜினி பாடலைப் போல் இருந்தாலும், பாட்டின் சற்றே அதிகமான டெம்போவும், SPBயின் அருமையான குரலும், 7G ரெயின்போ காலனிக்கு அடுத்ததாக மிக அழகாக எழுதப்பட்ட நா. முத்துக்குமாரின் வார்த்தைகளும் [ஏலே ஆடு மாடு மேலே உள்ள பாசம் வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்கும்....], இதன் வெற்றி நாயகர்கள். பாடலை கேட்டால், யாரும் சொல்லாமலேயே, பாடலை பாடிக்கொண்டே ரஜினி ஓடுவது நடப்பதுமாக காமிராவை சுற்றி வருவது கண்முன்னே வரவில்லையென்றால், நீங்கள் தமிழனல்ல !! balelaka என்ற வார்த்தை இப்போது தமிழ் அகராதியில் சேர்க்கப்படுகிறது. cool.

வழக்கம் போல ரஹ்மானின் elecric guitar வாசிக்கப்படுகிறது. வழக்கம் போல போஸ்டரில் ரஜினி acoustic guitarயுடன் நிற்கிறார். only rajini...possible என்று சொல்லத் தோன்றுகிறது. தீம் சாங். முதல்வனின் தீம் போல புள்ளரிக்காத குறையை வார்த்தை வரிகள் தீர்த்து வைக்கின்றன. வாடா வாடா வாங்கிக்கடா பாடலை எழுதியது ஷங்கரோ என்று தோன்றுகிறது. பேட்டை ராப் எழுதியது அவர் தான். இந்தியன் படத்தின் போது, கமலுக்கு எல்லா உடைகளூம் அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்றே அந்த அக்கடா இக்கடா பாட்டை வைத்தேன் என்றார் ஷங்கர். அதே போல் ஒரு சாதா ரசிகனுக்கும் போய்ச் சேரும் வரிகள்(சிங்கம் கூட ஜுஜுபிதாண்டா, சிவாஜி வாயிலே ஜிலேபிதாண்டா). முக்கிய காட்சிகளில் இந்த தீம் சாங் பின்ணணியாக வருமேயாயின், வார்த்தைகளின் cheapness மறைந்து போகும், டெம்போ காட்சிகளை மிகைப்படுத்தும். டிரைலரும் இந்த இசையில் தான் வரும் என்று எதிர்பார்ப்பு. கலக்கல் சூப்பர் ஸ்டார் தீம்.

ஒரு கூடை கெட்ட தமிழ். அசத்தல் ரஹ்மான் ஸ்டைல் offbeat பாட