ஜலதோஷம், தமிழ் மென்பொருள் மற்றும் பழனி

இந்த வாரம் ரொம்பவும் பேசப்பட்ட க்ளிஷே, “If america sneezes, asia catches cold”. இதையே பலரும் பேசிப்பேசி, ”அமெரிக்காவுக்கு தும்பல் வந்தா , எங்க வீட்டு பசு மாட்டுக்கு ஜலதோஷம் பிடிச்சுகிறது” என்று எருமபுடிச்சான் பட்டி வரை எதிரொளித்தது. விஞ்ஞான முறைப்படி, தும்பலினால் ஜலதோஷம் பரவுவது மூன்று நான்கடி வர தான். இந்த coldக்கு காரணம் ஆயிரமாயிரமாய் ஆளாளுக்கு பங்கு மார்க்கெட்டில் கொட்டிய துட்டு.

அமெரிக்காவின் சகாப்பதம் இந்த ரிசஷனோடு முடிந்தது என்றெல்லாம் எழுதுகிறவர்கள் டீ குடிக்க போய்விட்டார்கள். இந்த ரிசஷன் பயத்தினால் வீழ்ந்த உலக ஸ்டாக் மார்கெட்டுகள், அமெரிக்காவின் பிஸினஸ் உலக தாக்கத்தை மீண்டும் உணர்த்தியது. ஒரு பத்து வருடத்திற்கு முன்பு, தனித்திருந்த இந்தியாவின் பங்கு மார்க்கெட்டும், உலகளவில் உயர்ந்து, தற்போது தான் அமெரிக்காவின் பங்கு மார்கெட்டின் மேல் சாய்ந்து இன்னும் அதிகமாக அதைச் சார்ந்து இருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவில், கிட்டத்தட்ட பத்து வருடத்திற்கு இரண்டு என்று இது வரை எட்டு ரிசஷன்கள் வந்திருக்கின்றன. எல்லா ரிசஷனும் ஆரம்பிக்கும் போது, “This is the worst recession ever”, என்று ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள். இது ஒரு வழக்கமான பிஸினஸ் சைக்கிள் தான். நியுட்டனின் முன்றாம் விதிக்கு, பங்கு மார்க்கெட் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று மறுபடி மறுபடி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிசஷன் என்பது நீண்டு கொண்டே இருப்பதல்ல. ஒரு வருடத்திற்கு மேல் நீண்ட ரிசஷன்கள் வெகுச்சில.

ஆனால் இந்த முறை தான் இந்தியாவைப் பற்றி அமெரிக்காவில் அதிகம் பேசுகிறார்கள். நேற்று நடந்த ரிபப்ளிகன் ஜனாதிபதி விவாதத்தில் கூட, சைனா இந்தியா என்று சேர்த்துச் சேர்த்து பேசினார்கள். ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு இது சாத்தியமில்லை. இது ஒரு பெருமையாய் இருக்கும் பட்சத்தில், இதற்கு கொடுக்கும் விலை, நமது பங்கு மார்க்கெட் அமெரிக்க மார்க்கெட்டின் மேல் சார்ந்திருக்கும் நிலைமை.

இந்த முறை வந்திருக்கும் அல்லது (சிலரைப் பொருத்தவரை) வந்து கொண்டிருக்கக்ககூடியது ரிசஷன் தான். இதற்கு முந்தைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமேன் சொன்ன விதிமுறை, “It’s a recession when your neighbor loses his job. It’s a depression when you lose your own”.

————————

சமீபத்தில் தான், புதிதாய் வாங்கிய மாக்கிண்டாஷில், dual bootஆக மாற்றி, விண்டோஸை நிறுவினேன்.மாக்கிண்டாஷில் அதன் ஆப்பரேடிங் ஸிஸ்டத்தின் கூடவே வருகிறது தமிழ் எழுத்துரு – தமிழில் எழுத உதவும் சாஃப்ட்வேர்.

விண்டோஸில் வழக்கமாக ஈ-கலப்பை வைத்து தமிழில் எழுதி வந்திருந்தேன். நியு ஹொரைசன் மிடியாவில், NHM Writer என்கிற தமிழில் எழுத உதவும் மென்பொருளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

அதை பயன்படுத்தி பார்த்த போது, அது தமிழில் எழுத உதவுவதோடு மட்டும் இல்லாமல், விண்டோஸ் கணினியின் மூலம் இணையத்தில் தமிழை சரியாக படிக்கும் படி அதை configureம் செய்கிறது.

இதுவரை தங்கள் கணினியில் தமிழ் படித்து/உள்ளிட முடியாதவர்கள் பயன்படுத்தலாம்.

————————

கமர்ஷியல் பஞ்சாமிர்தம் என்று உப தலைப்புடன், பழனி என்கிற படம் வந்திருக்கிறது. ‘அதிரடி கமர்ஷியல்’ (என்றால் என்ன?) இயக்குனர் பேரரசின் படம்.

இதைப்போல முடிவெடுத்து மசாலா படமெடுக்கும் தயாரிப்பாளர்கள், கவலைப்படாமல், ஸ்ரீகாந்த் தேவாவை பயன்படுத்தலாம். கொடுத்த பைசாவுக்கு கன்னாபின்னாவென்று மசாலா மெட்டிசைக்கிறார். டிவி பேட்டியில் கள்ளமில்லாமல் பேசுகிறார், சிரிக்கிறார். பழனியின் பாடல்கள், சிவகாசி படத்தின் பாடல்களைப் போல பிடித்து விட்டது.

Create a website or blog at WordPress.com